சனிதோறும் ஒரு பத்தி

Showing posts with label சனிமூலை. Show all posts
Showing posts with label சனிமூலை. Show all posts

June 18, 2009

சனிமூலை - 009

இந்தியாவின் பணவீக்கம் முதல்முறையாக -1.61% குறைந்திருக்கிறது. ஏற்கனவே பணவீக்கம்(Inflation)/பண இளைப்பு(Deflation) பற்றி பார்த்திருந்தோம். உடனே வந்த கேள்விகள், பண இளைப்பு இன்னமும் பெருகுமா? என்ன ஆகும்?

உண்மையில், இந்த பண இளைப்பு தற்காலிகமே. நிரந்தரமாக இருக்காது. கச்சாப் எண்ணெயின் விலை $70/பேரல் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்தியா கச்சா எண்ணெயினை பெருவாரியாக இறக்குமதி பண்ணும் தேசம். அதனால் நம் அன்னிய செலவாணி அதிகம். அதனால் எல்லா பொருட்களின் விலையும் கொஞ்சம் ஏறும். மீண்டும் பணவீக்கத்திற்கு உள்ளே வருவோம். முரளி தியோரா அமைச்சராக பொறுப்பேற்ற போது சந்தை விலையிலேயே பெட்ரோல் பொருட்களின் விலை இருக்கும் என்று ஜபர்தஸ்தாக அறிக்கையெல்லாம் விட்டார். உண்மையில், இந்தியா மாதிரி ஒரு நாட்டில் மான்யம் இல்லாமல் பெட்ரோல்/டீசல் விற்கமுடியாது.ஆந்திரா/ராஜஸ்தான்/அஸ்ஸாம்/வட கிழக்கு மாநிலங்களில் பெருவாரியாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நடந்து, பகவான் நம்மை ரட்சித்தாலேயொழிய, நாம் அரபு நாடுகள் இல்லாமல் குடித்தனம் நடத்த முடியாது.

பங்கு சந்தை எதிர்ப்பார்த்ததைப் போலவே இறங்கிக் கொண்டிருக்கிறது.பட்ஜெட் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆகவே சந்தையின் இறக்க விகிதங்கள் அதிகமாகவும், ஏற்றங்கள் குறைவாகவும் இருக்கும். ஆனால் இந்த டூபாக்கூர் பண இளைப்பு என்கிற ஒரு விஷயத்தினை வைத்துக் கொண்டு ஒரு லாபியே வட்டி விகிதத்தினை குறைக்க சொல்லும். இவ்வளவு நிதிநிலை சீர்கேடுகள் உலகமெங்கும் நடந்தாலும், இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மொத்த இந்தியாவும், மத்திய வங்கியின் முன்னாளைய கவர்னர் ஒய்.வி.ரெட்டிக்கு கடமைப்பட்டிருக்கிறது. எவ்வளவோ மேலிடத்து அழுத்தங்கள் வந்த போதிலும், தொடர்ச்சியாக கருமமே கண்ணாயினர் வகையறா அவர். அவரால் தான் இன்னமும் நாம் நிலையாய் நிற்க முடிகிறது.

சமீபத்தில் மத்திய வங்கி சத்தமே போடாமல் சில விஷயங்களை சொல்லியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலைகள் மே.1 முதல் உயர் மதிப்பு (High Value) காசோலையாக கணக்கிலெடுக்கப்பட மாட்டாது. 5 லட்சம் தான் இப்போதைக்கு உயர் மதிப்பு. இதுவும் செப்-அக்டோபரில் 10 இலட்சமாக மாறும். அடுத்த ஏப்ரல் 2010இல் உயர் மதிப்பு காசோலை என்கிற ஒரு வகையறாவே இருக்காது. மத்திய வங்கி வெகு தீவிரமாக தேசிய மிண்-பண மாற்ற முறையினை (National Electronic Funds Transfer(NEFT) ) வங்கிகளுக்கும், வாக்காளர்களுக்கும் பரப்ப முயன்று கொண்டிருக்கிறது.

நான் ஒரு ஆன்லைன் வங்கிவாசி.NEFT மற்றும் RTGS - Real Time Gross Settlement போன்றவற்றினை பயன்படுத்துபவன் என்கிற முறையில், இம்முறைகள் பெரும்பாலான பணரீதியான கேடுகளை நிராகரிக்கும். கூடுமானவரை 25000 ரூபாய்க்கு மேல் எவ்விதமான கொடுக்கல் வாங்கலாய் இருந்தாலும் NEFT வழியாக செய்யுங்கள். ஒரே நாளில் அல்லது முழு 24 மணிநேரத்திற்குள் பணம் மாறிவிடும். ஒரு லட்சத்திற்கு மேலென்றால் RTGS செய்யுங்கள். அடுத்த 10 நிமிடங்களுள் மாறிவிடும். பல அலைச்சலகள், செலவுகள், போன்கள், பேரங்கள், வாக்குவாதங்கள் மிச்சம். 2015க்குள் காசோலைகள் வழக்கொழிந்துவிடும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.


போன வாரம் ஒரு உடுப்பி ஒட்டலில் என் ஆர்டரினை கொடுத்து விட்டு, தேமே என்று விட்டத்தினை பார்த்து கொண்டு, உட்கார்ந்த நேரத்தில், “ஏன் சார் தோனி இப்படி சொதப்பறான்” என எதிரில் இருப்பவர் பேச ஆரம்பித்தார். இந்தியாவில், முன்பின் தெரியாத ஆட்களிடம் பேச வேண்டிய கட்டாயங்கள் வந்தால், நீங்கள் பேசும் முதல் மூன்று விஷயங்களில், இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இருக்காது - அரசியல், சினிமா, கிரிக்கெட்.

வாத்தியார் கிரிக்கெட் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.ஐபிஎல் பார்க்காமல், டி20 பற்றி எழுதாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு. இந்தியா நல்ல பீமபுஷ்டி பயில்வான்களாக போய் லண்டனில் இறங்கி, ஒமக்குச்சி நரசிம்மன் போல் உதைப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். கிரிக்கெட், சினிமா, அரசியல் என்கிற மூச்செயல்கள் தான் இந்தியாவை ஆளுகின்றன.

கதைசொல்லியே வளர்ந்த/வாழ்ந்த பரம்பரை நம்முடையது. அதனாலேயோ என்னமோ, இன்னமும் நாடகத்தனமான தமிழ் திரைப்படங்கள் வெற்றி பெருகிறது. நாம் தமன்னாவில் ஐக்கியமானால், ஜெனிலியாவினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது மும்பாய். கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் தொடர்பு. அரசியலுக்கும் பாலிவுட்டிற்கும் இருக்கும் சம்பந்தம். மேட்ச் பிக்சிங். கிரிக்கெட் வீரர்கள், நடிக/நடிகைகள் அரசியலில் இறங்குவது (அசாரூதின், ஜெயப்பிரதா, சத்ருஹன் சின்ஹா, நெப்போலியன்). சினிமாவினிற்குள் / கிரிக்கெட்டிற்குள் அரசியல் செய்வது என எப்படிப்போட்டு கலக்கினாலும் கிடைக்கும் சுவையான காக்டெய்ல், இந்தியாவில் சினிமா.அரசியல்.கிரிக்கெட்.

தோனியின் கொடும்பாவி எரித்த கையோடு, “தேகா துஜை, தேக்கா முஜை” என ஷாருக்கான்/தீபிகா படுகோனின் பரந்த மார்புகளையும், உயரமான கால்களையும் பார்த்துக் கொண்டே, அரசியல்வாதிகளை சலூனில் திட்டிக் கொண்டே டீக்கு ஆர்டர் கொடுக்கும் அற்புதர்கள் நாம். எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் ஜெனடிகல் கோடில், இந்தியர்களுக்கென்றே சில தனித்துவமான ஜீன்கள் இருக்கலாம் என்பது பரவலான அபிப்ராயம். அமெரிக்க/ஐரோப்பிய விஞ்ஞானிகள் அதற்கு வேண்டுமானால் வேறு பெயர் வைத்து இருக்கலாம். ஆனால், அதன் உண்மையான பெயர் - இந்தியன் ஜீன்.


சென்னையின் மின்வெட்டுகள் பற்றிய கதைகள் ஏராளம். போன வாரம் இரவில் இதே போல மின்சாரம் திடீரென பிடுங்கப்பட்டது. நடுநிசி 2.00 மணி இருக்கலாம். பால்கனியில் கொஞ்ச நேரம். உலாத்தல் கொஞ்ச நேரம். சிந்தனைகள் கொஞ்ச நேரமென காலம் ஒடிக் கொண்டிருந்த போது, பக்கத்து அடுக்கக்த்தில் போன் அடித்தது.

நள்ளிரவு 2.30-3.00 மணிக்கு போன் அடித்தால் அது ஏறக்குறைய துர்செய்தியாக தான் இருக்க வேண்டும். ஒரு துர்செய்தி சொல்லப்படும் நேரத்தில், ஒரு பார்வையாளானாய் இருப்பதன் துரதிர்ஷ்டம் போல் வேறெதுவுமில்லை. எவ்விதமான உதவியும் செய்ய வாய்ப்பில்லாமல், வெறுமனே, இருளில் சில அதிர்ச்சிகரமான நினைவுகளையும், அழுகைகளையும் கேட்பது போன்ற ஒரு பயங்கரம் எதுவுமில்லை. யாருக்கு என்ன ஆயிற்று, யாரோடு யார் உறவு என்கிற எவ்விதமான அடிப்படை தகவல்கள் கூட இல்லாமல் போனாலும், நள்ளிரவு போன்கள் ஒரு விதமான நிச்சயமற்ற தன்மையினை தொடர்ச்சியாக நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.


இந்த வார ஏடாகூட கேள்வி

டிவிட்டரில் ஏற்பட்ட செய்திகள் தான் ஈரானின் தேர்தல் குறித்த கேள்விகளை மறுபரிசீலனை செய்ய வைத்தன என மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றன. ஏகப்பட்ட புள்ளிவிவரங்கள், மேப்புகள், கிராப்கள் வேறு. அமெரிக்காவின் காலனியாதிக்க முயற்சிகளில் முறியடிக்கப்படாத தேசங்களில் ஈரானும் ஒன்று. இப்போது கேள்வி, நவீன சமூக இணைய ஊடகங்கள் ஒரு நாட்டுக்கு எதிரான அரசியலை பரப்ப உபயோகப்படுத்தப்படுகிறதா? சி.ஜ.ஏவின் தொடர்ச்சியான மாற்று முயற்சிகளில் இப்போது டிவிட்டரும், பேஸ்புக்கும் சேர்ந்திருக்கிறதா? (காரணம்: பாரக்ஒபாமா என்கிற டிவீட்டருக்கான தொடர்பாளர்களை பாருங்கள். ஒபாவின் வெற்றிக்கு இணைய ஊடகங்கள் எவ்விதமான முன்னேற்பாடினை கொடுத்தன என்பது வரலாறு)

June 13, 2009

சனிமூலை - 008

நடுவில் ஆறு வாரங்களாக காணவில்லை. எழுதவில்லையே என்று நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். யாரும் மடல் அனுப்பவில்லை. பிஸியாக இருந்தேன், இல்லை மூடு இல்லை என்றெல்லாம் எழுதலாம். ஆனால் உண்மையில், நானெடுத்து எழுதுவதற்கு தோதான செய்திகள் எதுவும் அமையவில்லை என்பது தான் உண்மை.


பங்குச்சந்தை எகிறுகிறது. என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி டிவி 18 எல்லாம், கிராப்கள் காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய புள்ளி விவர புயலே தாக்கிக் கொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அங்கலேஷ் அய்யர், மத்திய வங்கியின் வெளிநாட்டு முதலீடு டேட்டாவினை வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வருகிறது என்று கீபோர்ட்டிலேயே குதிக்கிறார். தினமும் எதாவது ஒரு அமைச்சர் புதிய திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பட்ஜெட்டில் வரும் என்று டீசர் கொடுக்கிறார்கள்.

காங்கிரஸ் பெருபான்மை பலத்தோடு வென்றாலும், வென்றது. அவரவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மன்மோகன் சிங் ஆட்சியமைப்பார் என்று சொன்ன விடனேயே 2000 புள்ளிகள் ஏறி மே.18 அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. டாட்.காம் காலத்தில் ஆலன் கீரின்ஸ்பேன், இதற்கு ஒரு அழகான வார்த்தை சொல்லியிருப்பார்.Irrational exuberance.இந்தியாவில் அதுதான் நடக்கிறது இப்போது.

அடிப்படை விஷயங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாத போது, இம்மாதிரியான ஜீபும்பா வேலைகள் எந்தளவிற்கு சாத்தியம் என்று யாரும் யோசித்தாற்போல தெரியவில்லை. பணவீக்கம் குறைந்திருக்கிறது, சுழிக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நாளிதழ்கள் சொல்கின்றன. அப்படியென்றால், ஏறின பொருட்களின் விலை இறங்கியிருக்க வேண்டுமே? ஏன் இறங்கவில்லை? வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்க வேண்டுமே? அது நடக்கவில்லையே? ஏன் ? உண்மை நிலவரம் என்னவென்றால், எல்லா முன்னேறி வரும் நாடுகளுக்கும் இப்போது பணம் வெள்ளமாய் பாய்கிறது. இந்த பணம், அமெரிக்கா அச்சடித்த பணம். எவ்விதமான பின்விளைவுகளின் பாதிப்புகளையும் பற்றி கவலைப்படாமல், தாராளா தொண்டியாய், அமெரிக்கா டாலரை அச்சடித்து கொண்டு, ஜி.எம்மையும், செத்துப் போன வங்கிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார பாஷையில் இதற்கு “quantitative easing" என்று பெயர். இதன் விளைவு 2012க்கு பின்னால் தெரியும். இப்போது அதன் பாதகங்கள் புரியாது.

இந்த மாதிரி அச்சடித்து புழக்கத்துக்கு விடும்போது, முதலில் எல்லாம் செளஜன்யமாக தான் இருக்கும். அதிக பணப்புழக்கத்தினால், மீண்டும் பணவீக்கம் ஏற தொடங்கும். ஏனெனில், இது கடினமாய் உற்பத்தியினை பெருக்குவதால் உள் வரும் பணமல்ல. இது Easy Money. பவர்பாயிண்ட், எக்செஸ் தாள்களில் போடப்பட்ட ப்ரொஜக்‌ஷன்களை அடிப்படையாகக் கொண்டு உள் வரும் பணம். அதனால் தான். ஐ.எம்.எப். 400 டன் தங்கத்தினை சர்வதேச சந்தையில் இறக்கும் என்று தெரிந்தாலும், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் $1000/oz தொட்டு தொட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.

நிஜம் என்னவென்றால், மந்த நிலையின் பாதிப்பு இனிமேல் தான் அதிகமாகும். வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறையும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். இப்போது ஒடிக் கொண்டிருப்பது சந்தை மொழியில் Bear market rally.இதனை இதே நிலையில் தாக்கு பிடிப்பது கடினம். உங்களைச் சுற்றி பார்த்தாலே, டிவி சேனல்கள் நம் காதில் எவ்வளவு பெரிய மாலையினை போட்டு நமக்கு மங்களம் பாட முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். இதில் தரகர்களுக்கு தான் லாபம். இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, நாம் எல்லாரும் மண்ணுக்குள் போகப் போகிறோம் என்கிற பெஸிமிஸ்ட் பார்வையல்ல.

நம் பயங்கள் குறைந்திருக்கின்றன. நிறுவனங்கள் இனிமேல் தங்களுடைய சேவை தேவைகள்/உற்பத்தி கீழே போகாது என்று நம்புகின்றனர்.வலிமையான அரசு. பொங்கும் பங்குச்சந்தை. பரவலான உள்ளூர் சந்தை என்று பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன.

ஜிம் ரோஜர்ஸ், சொரோஸ் போன்ற விற்பனர்களின் பார்வையில், இந்தியாவும் சீனாவும் தான் இந்த மந்த நிலையிலிருந்து வெளிவரும் முதலிரு நாடுகளாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ப்ரிக் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் தான் முதலிடத்தினை பிடிக்க ஒடிக் கொண்டிருக்கின்றன.

ஆக இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்போதைக்கு உங்களின் பர்ஸினை கெட்டியாக பிடித்திருங்கள்.


தொழில் நிமித்தமாக 2-3 வாரங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளாரான “ஆஸ்கார்” ரவிச்சந்திரனை சந்தித்தேன். மனிதர் மிக மிக சாதாரணமாக இருக்கிறார். டிவி சீரியல் நடிகர்களே ஹோண்டா சிட்டியும், ஹுண்டாய் ஆக்செண்ட்டுமாய் செட்டுக்கு வருகையில், வெறுமனே ஒரு i10 வைத்திருக்கிறார். ஒரு லீ டீ சர்ட், சாதாரண ஜீன்ஸ் என உள்ளே வந்தார்.

ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் காலையில் போகவில்லை, அதனால் பரிகாரமாக 500 சுற்றுகள் சுற்றிவிட்டு வந்தேன், அதான் லேட்டு என்று தன்னிலை விளக்கம். மனிதருக்கு அசாத்திய கடவுள் நம்பிக்கை. கார் வைத்திருப்பதே திருப்பதி போவதற்கு தான் என்கிற தொனியிலான விளக்கத்தினை இப்போது தான் கேட்கிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரு தனி நபர் கார்ப்பரேஷன். ரவிச்சந்திரனோடு அவர் சகோதரர்கள் எல்லாரும் பங்குதாரர்களே. 85% படங்கள் வெற்றிப் படங்கள்.

ரவிச்சந்திரன் எடுப்பது தான் இறுதி முடிவு. பல நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசி கொண்டிருந்தோம். ரவிச்சந்திரனின் முதல் சினிமா நுழைவு வேலூரில் “வானம்பாடி” படத்தினை 37வது தடவையாக எடுத்து திரையரங்கத்தில் போட்டது. அவர் போட்ட ஒரு வாரம் செம கல்லா. அங்கிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு ஜாக்கி சானை வைத்து ஒரு படமெடுக்கிறார் - 6 மொழிகளில் வர இருக்கிறது. இது தாண்டி, முருகதாஸ் நன்றிக் கடனுக்காக “ரமணா”வினை ஹிந்தியில் இவருக்காக இயக்குகிறார். இன்னமும் இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மிக அபூர்வமாக இவ்வளவு பணமிருந்தும் [தசாவதாரம் சம்பாதித்தது 200 கோடிகள்] மிக மிக down-to-earth ஆக இருக்கும் ஒரு நபரினை இப்போது தான் பார்க்கிறேன். வழக்கமாக ரஜினிக்கு தான் இம்மாதிரியான வர்ணணைகள் பொருந்தும்.

மிக எளிமையாக இருக்கும் அவரின் வியாபார யுக்திகள், நேற்றைய சாண்டோ சின்னப்பா தேவரினை நினைவுப் படுத்துகின்றன. ஒரு தனி நபர் என்கிற முறையில், ரவிச்சந்திரன் மிக நல்லவர். ஆனால் நிறுவனம் என்கிற வகையில் ஆஸ்கார் ஒரு பெரிய பெயிலியர்.


இந்த வார செய்கைகள்

படித்தது: பா.ராவின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”
பிடித்தது: வோடாபோன் விளம்பரத்தில் வரும் சூசூக்கள்(Zoozoo)
கேட்டது: “என்னடா பாண்டி, இன்னா பண்ண போறே” இளையராஜாவின் ரஸ்டிக் குரலில் “வால்மீகி” பாடல்
பார்த்தது: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் ”கடவுள் பாதி.மிருகம் பாதி” ஜெகன்
பங்கேற்றது: கிழக்கு மற்றும் Fundsindia.com இணைந்து நடத்திய "பேரங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள்” கலந்துரையாடல்
வாங்கியது: ரிச்சர்ட் தேலரின் “Nudge: Improving Decisions about Health,Wealth and Happiness
முணுமுணுப்பது: ”இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” - டி.ஆர். மகாலிங்கம்
வெறுப்பது: இன்னமும் anyindian.com-இல் “விதுர நீதி” புத்தகம் இல்லாமலிருப்பது
கொலை வெறியோடு இருப்பது: சென்னையில் ஓடும் ஆட்டோக்கள்

April 17, 2009

சனிமூலை - 007

என்னுடைய வீட்டில், என்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் நான் தான் தங்க வழிகாட்டி. தங்குவதற்கான வழிகாட்டி அல்ல. தங்கத்திற்கான.

தங்கம். இந்திய பெண்களின் இன்றியமையாத இன்னொரு விஷயம். கல்லூரி படிக்கும் போது கலந்து கொண்ட ஒரு தெலுகு கல்யாணத்தில் உலாத்திய பெண்களோடு, அந்த மண்டபத்தினை ஹை-ஜாக் பண்ணியிருந்தால், வடகிழக்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தின் பாதி பட்ஜெட்டினை ஒப்பேத்தியிருக்கலாம். பெண்கள் மட்டுமல்லாமல், தாதாக்கள், அரசியல்வாதிகள், டூபாக்கூர் தொழிலதிபர்கள் போன்ற ஷோ பேர்வழிகளுக்கான முக்கியமான சமாச்சாரம்.

வழிகாட்டி என்றால், எப்போது தங்கம் ஏறும், எப்போது தங்கம் இறங்கும் என்று ஒரளவுக்கு சொல்லக்கூடிய திறமை கொஞ்சுண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதை திறமை என்று சொல்வதை விட, இது உலக சந்தைகளை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய அடிப்படை அறிவு. இனி தங்கம் ஏறுமா ? ஏறாதா?

இனி தங்கம் இறங்கும். ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் ஐ.எம்.எப்பின் இருப்பிலிருந்து 400 டன் தங்கத்தினை விற்க சொல்லியிருக்கிறார்கள். காற்றில் கணக்குப் போடாதீர்கள். ஒரு டன் தங்கம் இன்றைய விலையில் ஜஸ்ட் ரூ.144 கோடி மட்டுமே. 400 டன் எவ்வளவு என்பதை கணக்குப் போட்டு ஈனோ குடிக்காதீர்கள். அது நமக்கு தேவையில்லை. இந்தியா ஒரு தங்க இறக்குமதி நாடு. நாம் தொடர்ச்சியாக தங்கத்தினை இறக்குமதி செய்து கொண்டே இருப்போம். ஆனால் பிப்ரவரி, மார்சில் ஒரே ஒரு கிராம் தங்கம் கூட இறக்குமதி செய்யவில்லை. மாறாக, விலை கூடியவுடன், புத்திசாலியான நம்மாட்கள், தங்கத்தினை விற்க ஆரம்பித்தார்கள். முட்டாள் ஐரோப்பிய நாடுகள், ஏறும் தங்கம் தான், நிதி சீர்குலைவு, பொருளாதார மந்தநிலைக்கு எதிரான மாற்று என்று நினைத்து வாங்க ஆரம்பித்தார்கள். இந்தியா மற்றும் மத்திய கிழக்கினை தவிர வேறு யாரும் ஆபரண தங்கத்தினை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில்லை. ஆக இந்தியா வாங்கவில்லையென்றால், உலகமெங்கும் தங்கம் காற்று வாங்கும்.

மேலும், இந்த எவரெஸ்ட் உயரத்திற்கு காரணம், மத்திய வங்கிகள் உலகெங்கிலும், நிதி சீர்குலைவு ஏற்பட்டவுடன், உஷார் பத்ரி ரைடாக, தங்கத்தினை வாங்கி முடக்கி விட்டார்கள். அதனால் வரத்து குறைந்தது. தேவை அதிகம், ஆனால் சப்ளே குறைவு என்றால் அது சிம்பள் பொருளாதார வீக்கத்தினை உண்டாக்கும். சவரன் 8000ரூபாய்க்கு போய் கொண்டிருந்தது கடந்த ஒன்றரையாண்டுகளில் உயர்ந்து 12-13,000க்கு எகிறியதற்கு இது தான் காரணம். இப்போதைய நிலையே கூட இன்னமும் உயர்நிலையில் தான் இருக்கிறது. கொஞ்ச காலம் போனால் வாங்கும் நிலைக்கு வரும்.

இப்போதைக்கு, தங்கம் வாங்க வேண்டுமென்ற எண்ணங்கள் இருந்தால், கொஞ்ச காலம் ஐபிஎல்லும், உலக டி-20 கிரிக்கெட்டும் பார்த்து முடித்துவிட்டு ஜி.ஆர்.டிக்கு வண்டியினை எடுங்கள்.






கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது. இது அரசியல் வசனமில்லை. சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வுகள்.

2008-இன் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு தோழி என்னிடத்தில் கொடுத்த புத்தகம் தான் இது. Sadako and the Thousand Paper Cranes by Eleanor Coerr சிறிய குழந்தைகளுக்கான புத்தகம். சடாகோ என்கிற ஒரு குட்டிப்பெண்ணின் உண்மைக்கதை. குட்டியாய் 80 பக்கங்கள். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வுகள் ஏராளம்.

சசாகி சடாகோ ஜப்பானில் 1943ல் பிறந்து 1955-இல் தன்னுடைய பன்னிரண்டு வயதில் ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டால் ஏற்பட்ட கதிர்வீச்சால் உயிர் இழந்த குழந்தை. வாழ்க்கையில் ஒட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்று நினைத்த பெண். அவளுடைய தோழி சிசுகோ. கதிர்வீச்சின் பாதிப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, சிசுகோ அவளுக்கு ஒரு தங்க பேப்பரானாலான ஒரு கொக்கினை செய்து கொடுத்தாள். ஒரிகமி என்பது மிகப் பிரபலமான ஜப்பானிய கலாச்சார பொழுதுபோக்கு. பேப்பரில் பல உருவங்களை ஒரிகமியில் செய்ய முடியும். ஆயிரம் கொக்குகள் ஒரு நோயாளி செய்தால், வலி, வேதனை, வியாதி எல்லாம் பறந்துவிடும் என்பது ஒரு ஜப்பானிய ஐதீகம்.

வெகு சூட்டிகையாக, ஒடியாடிக் கொண்டிருந்த சடாகோ, சடாலென மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாக ஆனாள். ஆனாலும், நம்பிக்கை தளராமல், பேப்பரில் கொக்கு செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக கொக்கு செய்ய ஆரம்பித்தாள். அக்டோபர் 25, 1955இல் சடாகோ இறந்து போனாள். அவள் இறக்கும்போது அவள் செய்த மொத்த கொக்குகளின் எண்ணிக்கை 644. அவளின் வகுப்பிலிருந்த குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மீதமிருக்கிற 356 கொக்குகளை செய்து அவளோடு புதைத்தார்கள். கணக்கு சரியாக போனது - ஆயிரம் கொக்குகள்.

அவள் இறந்த பிறகு அவளின் வகுப்பு நண்பர்கள் அவள் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவளின் டைரி போன்றவற்றினை தொகுத்து ‘ககோஷி (Kakoshi)' என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஜப்பானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து நிதி திரட்டி, 1958-இல் அவளின் சிலையினை ஹிரோஷிமா அமைதி பூங்காவில் திறந்தார்கள். சடாகோவின் சிலையின் கீழ் இன்றும் ஆகஸ்ட் -6இல் எல்லோரும் பேப்பர் கொக்குகளை வைக்கிறார்கள். அது அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.சடாகோவின் சிலையின் கீழே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

This is our cry,
this is our prayer;
peace in the world.

போர் என்பது மிக மோசமான விஷயம். இந்தியாவில் கற்பிக்கப்படும் வரலாறு இன்னமும், “இவர் அவரை போரில் வீழ்த்தினார்” “அவர் இவரை போரில் வெற்றிக் கொண்டு, சாம்ராஜ்யத்தினை விரிவு செய்தார்” என்கிற அளவில் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வெற்றி என்பது எது என்று அசோகனுக்கு ஒரு புத்த பிட்சு சொன்னது வெறுமனே ஸ்டேஜ் ட்ராமா போட தான் உதவியிருக்கிறது. வரலாற்றினை இன்னமும் நாம் சரியாக கற்றுக் கொள்ளவில்லை அல்லது கற்றுக் கொடுக்கத் தெரியவில்லை என்பது தான் இன்றைக்கும் மேலோங்கியிருக்கிறது. வெற்றி என்பது அடுத்தவரின் தோல்வியிலிருந்து வருவதல்ல. அது உள்ளிருந்து வருவது. தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வது. தன்னை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்து பாடம் கற்பது. அனுபவங்களை உள்ளிழுப்பது. அடுத்தவரை கொல்வதல்ல.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் யாராவது இதன் உரிமம் பெற்று தமிழில் வெளியிடலாம். குழந்தைகளுக்கு ஏற்றாற் போல நடை. பெரிய எழுத்து புத்தகம். பென்குவின்புட்னம் என்கிற நியுயார்கில் இருக்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.



RPG குழுமத்திலிருந்து Open என்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கை வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியா டுடே, அவுட்லுக், வீக் போன்றவைகளின் தளத்திலேயே இதுவும் இருக்கிறது. கீழே குறிப்பிடுள்ள மேற்கோள் ’ஒபன்’ பத்திரிக்கையின் முதல் இதழில் வந்த கட்டுரையில் வந்தது. இந்தியாவில் இணைய இணைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பேப்பரில் அச்சடித்து வரும் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் வாங்குவதில் சில பல ஆபத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில் RPG குழுமம் இப்பத்திரிக்கையினை தொடங்கியிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்.

இதே மாதிரி முந்தாநாள் ’பாரிஸ்தா’வில் உட்கார்ந்து கொண்டு பொழுது போகாமல் முன்னால் உட்கார்ந்திருந்த பெண்ணினைப் பார்த்துக் கொண்டே (டார்க் புளு ஜீன்ஸுக்கு பிங் குர்தா, நன்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றியது) இந்தியா டுடே புரட்டினால், மிருணாள் சென் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரித்விக் கட்டக், மிருணாள் சென் கடைசியாக சத்யஜித் ரே என்கிற வரிசையில் தான் நான் ஆரம்பகாலத்தில் படங்கள் பார்த்தேன்.

வங்காள திரை பிதாமகர்கள் வரிசையில் மிருணாள் சென்னுக்கு ஒரு தனியிடமிருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் கான்ஸ் திரை விழாவில் திரையிட சென்னின் 1970களின் கல்கத்தாவினை பிண்ணணியாகக் கொண்ட மூன்று படங்களை கேட்டிருந்தார்கள். இண்டர்வியு, கல்கத்தா 71 மற்றும் படாதிக். ஆனால் அந்த படங்களின் பிரிண்ட் படு மோசமாக இருந்ததால் கைவிடப்பட்டது. வெறுத்துப் போய் “நான் சாகும் போது, என் படங்களும் மறைந்து போகும்” என புலம்பி தள்ளியிருக்கிறார். இது ஒரு மகா மோசமான விஷயம்.

மே.வங்காளத்திலிருந்து வந்து பாலிவுட்டினை கலங்கடித்து கொண்டிருக்கும் பிபாசா பாசு, சுஷ்மிதா சென், ரீயா சென் போன்றவர்களில் ஆரம்பித்து பல்வேறு நபர்கள் வங்காள சினிமாவிற்கு கடமைப்பட்டுள்ளார்கள். இது தவிர, தேசிய பட வளர்ச்சி கார்ப்பரேஷனுக்கு இதை விட வேறு என்ன வேலை இருக்க முடியும்? அமிதாப் பச்சனின் மெழுகு சிலையினை ஹாங்காங்கில் வைப்பதற்கு காட்டும் அக்கறையில் அரை பங்காவது, நம்மிடையே இன்னமும் இருக்கும் திரைச்சிற்பிகளை காப்பதில் நமக்கில்லை. நல்ல வேளையாக, தமிழ்நாட்டினை திரையுலகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆண்டு வருவதால், ஜி.என்.செட்டி சாலையில் போட்டிருக்கும் மேம்பாலத்திற்கு, கலைவாணர் மேம்பாலம் என்று பெயர் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் என்.எஸ்.கே என்றால் பட்டணம் பொடி பெயரா என்று நாளைய சந்ததியினர்கள் கேட்பார்கள்.

இந்தியர்களான நமக்கு நம்முடைய பாரம்பரியத்தினை காப்பதில் இருக்கும் அலாதி அக்கறை சொல்லி மாளாது. இந்தியாவின் எல்லா மியுசியங்களும் காலியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் செலவு குறைவான கல்விச்சுற்றுலா தலமாக தான் பிரபலப் படுத்தியிருக்கிறோமே தவிர அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியதுப் போல தெரியவில்லை. வங்காள சினிமாவினை நேசிப்பவர்கள் யாராவது இருந்தால் புத்ததேவ் பட்டாச்சார்யா / மம்தா பானர்ஜி வகையறாக்களில் யாராவது ஒருவரிடம், தாகூர் மாதிரியான ஒரு ஆள் இன்னமும் உங்களூரில் உயிரோடு இருக்கிறான், அவனை சரியான பாதுகாத்து வையுங்கள் என்று பெங்காலியில் உரக்கச் சொல்லுங்கள்.

இந்த வார மேற்கோள்

நஸ்ரூத்தின் ஷா "ஒபன்” பத்திரிக்கையில் கலைப்படங்கள் எடுப்பதுப் பற்றி
“sign me up, borrow funds from NFDC claiming to make realistic cinema, use indoor shots to save money, producer and I split the remaining cash"

April 11, 2009

சனிமூலை - 006

வேளச்சேரி கான்கார்ட் மோட்டார்ஸில் டாடா நானோ பார்க்க கியு நிற்கிறது. நல்ல விஷயம்தான். இந்த மாதிரி ஒரு பொருளுக்கான கியுக்களை ஆப்பிளின் ஸ்டோர்களில் ஒவ்வொரு மேக் கருத்தரங்கு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் புது பொருளுக்காக பார்க்க முடியும். “ஹமாரா பஜாஜ்”-க்கு பிறகு, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வாகனத்திற்காக முண்டியடிப்பது டாடா நேனோவாகதான் இருக்க முடியும்.

டாடா நேனோ வெறுமனே ஒரு வாகனமாக பார்க்க முடியாது. இதை ஒரு புது தலைமுறையாக பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 1991-இல் இந்தியா பொருளாதார சீரமைப்பினை ஆரம்பித்து 17 வருடங்கள் ஆன நிலையில், இது இரண்டாம் கட்ட சீரமைப்பின் ஆரம்பமாக தோன்றுகிறது.

1992-இல் நாம் உலக நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தோம். அன்னிய பொருட்களை இஷ்டத்திற்கு உபயோகப் படுத்தினோம்.2009-இல் இந்தியாவிலிருந்து உலகத்திற்கு பொருட்களை அனுப்ப ஆயத்தமாகிறோம். இந்திய சந்தைக்காக பொருட்கள் தயாராகின்றன. இது ஒரு முக்கியமான திருப்பம். இதை சீராக செய்ய நமக்கு இன்னமும் இரண்டு தசாம்சங்கள் ஆகலாம்.பரவாயில்லை.

எகனாமிக் டைமிஸில் சி.கே. பிரகலாத் “டாடா நேனோ” மாதிரியான பிற விஷயங்களின் மீதான ஒரு பார்வையினை வைக்கிறார். அவரின் Fortune at the Bottom of the Pyramid ஒரு முக்கியமான மாற்றுப் பார்வையினை முன் வைக்கிற புத்தகம். டாடா குழுமத்திற்கு அவர் ஆலோசகர். அவரின் ஆலோசனையின் பேரில் தான் ஜிஞ்சர் ஹோட்டல் வந்தது.

டாடா நேனோ, ஜிஞ்சர் ஹோட்டல்,அரவிந்தன் அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய செல்பேசி துறை, இணைய சேவை போன்றவைகள் முக்கியமான திருப்புமுனைகள். மிகவும் குறைந்த விலையில், தரமான, மக்களின் வாங்குதல் சக்திக்கு உள்ளே அடங்கக்கூடிய பொருட்களையும், சேவைகளையும் சந்தைப்படுத்தினால், அதன் பிரதிபலன்கள் பல மடங்கு போகக்கூடியவை. இந்திய தொலைப்பேசி துறை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ரூ.16க்கு ஒருவரிடம் பேச தலைப்பட்ட நாம், இன்றைக்கு 10 பைசா அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் செல்பேசி துறை உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறை. இவ்வளவு பொருளாதார மந்தங்கள் நிலவிய போதிலும், செல்பேசி துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் செல்பேசி வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறார்கள்.

வெறுமனே முதலாளித்துவம் (Capitalism) என்பது போய், இன்றைக்கு சமூக முதலாளித்துவம் (Social Capitalism) என்பது குறைவாக, ஆனால் தீர்க்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில் நடத்துவது வெறும் லாபத்திற்காக மட்டுமே என்கிற பழைய முதலாளித்துவ சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியிருக்கிறது. சமூக தொழில்முனைவோர்கள் (Social Entrepreneurs) என்றழைத்துக் கொள்ள விரும்பும் ஒரு பகுதியினர், சமூகத்தின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்து இருக்கிறார்கள்.

வழக்கமான தன்னார்வல நிறுவனங்கள் என்றழைக்கப்படும் நிறுவனங்களுக்கு பெரியதான தொலைநோக்கு பார்வைகள் கிடையாது. அவர்கள் இன்னமும் அன்பளிப்பினை வைத்துக் கொண்டு காலத்தினை ஒட்டுகிறார்கள், இது ஒரு குறைப்பார்வை. முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான விஷயம், லாபம், அந்த லாபம் எப்படி கிடைக்குமென்றால், தரமான பொருள்/சேவையினை, குறைவான விலையில் அளிப்பது. அந்த நோக்கத்தையும், தன்னார்வ நிறுவனத்தினை சமூக நலனையும் காக்டெயிலாக்கினால் வரும் கலவை தான் இன்றைக்கு மெதுவாக பரவியிருப்பது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.


சென்னை சாந்தோம் கடற்கரை. கடந்த மூன்று மாதங்களாக சன் டிவியில் ஞாயிறு மாலை போடப்படும் டப்பா படங்களை தவிர்ப்பதற்காகவே என்னுடைய தங்கை மகளை கூட்டிக் கொண்டு, அலையில் காலாற நடக்கிறேன். எல்லா வகையான மக்களும், காலை அலை நனைப்பதை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. என் தங்கை மகளின் மிக முக்கியமான பொழுதுபோக்கை இப்போது ஞாயிறு மாலை, கடலலையில் தொப்பலாக நனைவது. நிற்பது, ஒடுவது, குதிப்பது, பேரலைகள் வரும்போது கைப்பற்றி தடுமாறுவது என உப்புத் தண்ணீர் உள்ளே போக விளையாடுகிறாள்.

சென்னை கடற்கரை ஒரு முக்கியமான ரிலீப் பாயிண்ட். புல்லாங்குழல் விற்பவர்கள் ஏர் டெல்லின் சிக்னேச்சர் ட்யூனை வாசிக்கிறார்கள்.என் காலத்தில் ஏதாவது சினிமா பாட்டு தான் புல்லாங்குழலில் ஹம் செய்யப்படும். ரங்கராட்டினம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடல், மாங்காய், சுண்டல், பஜ்ஜி, வறுத்த சோளம், பானிப்பூரி என சகலமும் ரூ.10-15க்குள் ஆகிறது. தண்ணீர் பாக்கெட் காலையில் ரூ.1 ஆகவும், மாலையில் ரூ.1.25 - 1.50 ஆகவும் இருக்கிறது.Discretionary Pricing. எல்லாவகையான மக்களுக்கும் கடலின் மீது ஒரு காதல் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என எல்லாரும் அலையில் கால் நனைக்கிறார்கள். மிரள்கிறார்கள். கூட்டமாக சிரிக்கிறார்கள். கொஞ்சம் தைரியமான பெண்கள், சுடிதார் நனைய உட்காருகிறார்கள். ஆண்கள், காலாடை சகிதம் ”சீன்” காட்டவாவது கொஞ்சமாய் கடலுக்குள் போகிறார்கள். ஒரு மணிக்கு ஒரு தடவை குதிரையில் வரும் போலீஸ்காரர்கள், மக்களை உள்ளே செல்லாமல் இருக்குமாறு எச்சரிக்கிறார்கள்.

சின்ன குழந்தைகள் வால்ஸ் ஐஸ்கீரிம் குச்சி ஐஸ் சாப்பிட்டு, மணலில் வீடு கட்டி, அந்த குச்சியினை கொடி கம்பம் போல் மேலே செருகுகிறார்கள். காதலர்கள் துப்பட்டா சகிதம், முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மணலில் நிறைய பாஸ்ட் புட் சென்டர்கள். வஞ்சிரம் மீன் (பெரியது) ரூ.60க்கு காரசாரமாய் கிடைக்கிறது. காரினுள் பியரிடித்து விட்டு, மேல்தட்டு மக்கள் சிக்கன் நூடுல்ஸும், மீனுமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளீல்லாத, பெண் கிடைக்காத கும்பல்கள், வட்டமாக உட்கார்ந்து கொண்டு “ங்கோத்தா, போன வாரம் என் பிகரை ஒருத்தன் ஒரம் கட்டிட்டான். அவனை எப்படியாவது கழட்டிருன்னும்டா” என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது வட்டமாய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு மட்டும் கேட்குமளவிற்கு கெட்ட வார்த்தை கானா பாடுகிறார்கள். இளந்தாய்மார்கள் குழந்தையினை பார்ப்பதும், கணவன் எங்கே பார்க்கிறான் என்று கண்காணிப்பதுமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் வாக்கிங் போகிறார்கள். அவர்களின் சிரிப்பிலும், அலைகள் கால் நனைக்கும்போது விரியும் குழந்தைகளின் கன்னக்குழிகளிலும் தான் நிஜமான சந்தோஷத்தினை பார்க்க முடிகிறது.

சென்னை மாதிரியான தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு மெட்ரோபொலிஸில் குழந்தைகளுக்கு விளையாட சரியான இடங்கள், வாய்ப்புகள் இல்லை. சதா போகோவும், ஜெட்டெக்சும் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள், அப்பாவின் மடிக்கணினியில் விளையாடும் குழந்தைகள் என எல்லா வகையுமான குழந்தைகளை கடந்த ஆறு ஆண்டுகளாக மிக நெருக்கமாக பார்த்து வருகிறேன். இன்றைய குழந்தைகளுக்கு physical விளையாட்டுகள் என்பதே எதுவுமில்லை.

நான் எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். இன்றைக்கும் பீச் கிரிக்கெட் என்றழைக்கப்படும் கடற்கரை மணலில் டென்னிஸ் பாலில் ஆடும் கிரிக்கெட்டினை கர்ம சிரத்தையாக ஞாயிறு காலை ஆடி வருகிறேன். நான் நடு ரோட்டில், மொட்டை மாடியில், சுடுகாட்டில், மூத்திர சந்தில், கால்வாய் ஒரங்களில், கொண்டித்தோப்பு போலீஸ் லைன் பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்கும் மைதானமென்று சொல்லமுடியாத ஒரு மைதானத்தில் என எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். விளையாட்டு பதின்ம பருவத்தில் மிக முக்கியம், படிப்பை விட.

நகரமயமாக்குதலின் மிக முக்கியமான இழப்பு குழந்தைகளின் விளையாட்டு என்று தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒற்றை குழந்தை மனநிலையில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகக் கூடிய சூழலில், ஒரு குழந்தையின் இயற்கையான விளையாட்டுத்தனம் மழுங்கடிக்கப்படுகிறது. என்னுடைய சட்டையிலெலெலாம் இங்க் கறை இல்லாமல் ஒரு நாளும் வீட்டிற்கு வந்ததில்லை. இன்றைய குழந்தைகள் பென்சில், ரப்பர் தொலைத்தாலோ, வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டூவீலரில் ஒற்றை செருப்பினை தொலைத்தாலோ அந்த குழந்தை வாங்கும் வசவுகள் சொல்லி மாளாது. நாம் எல்லோரும், நம் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்து வைக்கிறோம், சேர்த்து வைக்கிறோம் என்று பணத்தினை குறியாக கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்கள் தான் இன்னமும் வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதாக படுகிறது.

ஐம்பது வயதில் நீங்கள் சாதித்து எல்லாம் பெரியதாக தோனாது. மைலாப்பூர் கற்பாங்காம்பாள் மெஸ்ஸின் கதம்ப சாதத்திற்கும், கடற்கரையின் உப்பு தோயந்த மக்காசோளத்திற்காகவும் உடலும், மனதும் ஏங்க ஆரம்பிக்கும். காசோ, பணமோ, அதிகாரமோ, பெண்ணோ,பொரு்ளோ அன்றைக்கு பெரியதாக தோன்றாது என்று தோன்றுகிறது. வாழ்வின் சுவை என்பது பெரிய வெற்றிகளில் இல்லை. சின்னச் சின்ன சந்தோஷங்களிலும், குட்டி தோல்விகளிலும் தான் இருக்கிறது. Simple Living is Better Living.


ராஜா ஜேசுதாஸ் செல்லையா. வயது 87. ஏப்ரல் 7ஆம் தேதி மறைந்து போனார்.

யாரிவர்?

சினிமா நடிகரோ, அரசியல்வாதியோ, சமூக சேவகரோ, உள்ளூர் தாதாவோ, தொழிலதிபரோ கிடையாது. அவர் ஒரு பொருளாதார நிபுணர். 2007-இல் பத்ம விபுஷன் பெற்றவர். நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்து 1991-இல் இந்தியாவின் பொருளாதார அமைப்பினை உலகமையமாக்க செய்ய அமைக்கப்பட்டிருந்த குழுவில் ராஜா செல்லையா ஒரு முக்கியமானவர்.

ராஜா செல்லையா தான் இன்றைக்கு ஒரளவிற்கு சுலபமாக இருக்கக்கூடிய இந்திய வரிச்சட்டங்களின் பிதாமகர். லைசன்ஸ் ராஜ்ஜியத்தில் இஷ்டப்படிக்கு எழுதப்பட்டிருந்த வரிச்சட்டங்களை, தனி நபர் குழு அமைத்து, அதனை மொத்தமும் படித்து, மாறி வரக்கூடிய உலகச் சூழலுக்கு ஏற்றாற் போல, மாற்றிய பெருமை ராஜா செல்லையாவைதான் சேரும். செல்லையாவின் அறிக்கை தான் மன்மோகன் சிங் பல்வேறு வரி ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டு வர உதவியது.

கஸ்டம்ஸ் வரி 200% இருந்ததை குறைத்தது; 40% மட்டுமே தனியார் மற்றும் நிறுவனங்களின் உச்சக்கட்ட வரியாக இருக்கும் என்று நிர்ணயித்தது; 200-300% சில பொருட்களுக்கு இறக்குமதி வரி இருந்ததை சீரமைத்தது; மாட் வேட் என்றழைக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியின் அடிப்படையினை நிர்மாணித்தது; சேவை வரி என்ற ஒன்றினை கொண்டு வந்தது (சேவை வரி தான் இன்றைக்கு இந்திய அரசுக்கு மிக அதிகப்பட்ச வருவாயினை தரக்கூடிய மறைமுக வரிவிதிப்பு) என அவரின் பங்களிப்பினால் தான் இன்றைக்கு 2009-இல் பா.ஜ.க குறைந்தபட்சம் 3 இலட்சம் வரைக்கும் வருவாய்க்கு வரி கிடையாது என தேர்தல் மேனிபெஸ்டோ கொடுப்பது வரை வந்திருக்கிறது.

1978-இல் எல்.கே. ஜா தலைமையில் அமைக்கப்பட்ட மறைமுக வரி சீரமைப்பு கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர் ராஜா செல்லையா. பின்பு திட்ட கமிஷனில் மன்மோகன் சிங் 1990 ஜனவரி வரை துணை சேர்மனாக இருந்தபோது, அக்கமிஷனின் உறுப்பினராக இருந்தவர். அவரின் புத்தகங்கள், முக்கியமாக Towards Sustainable Growth - Essays in Fiscal and Financial Sector Reforms in India, Oxford University Press (1996) இந்திய உலகமயமாக்கலின் மிக முக்கியமான ஆரம்பகால ஆவணம். அவரின் Aspects of the Black Economy in India, National Institute of Public Finance and Policy, New Delhi, 1985 புத்தகம் தான் கிட்டத்திட்ட 15 வருடங்களுக்கு பிறகு அப்போதைய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, கருப்பு பணத்தினை எவ்வித கேள்வியும் கேட்கப்படாமல் டிக்ளேர் செய்ய அனுமதிக்கப்படும் என்கிற திட்டத்திற்கு வழிகாட்டி.

1976-இல் டெல்லியில் அவர் தேசிய பொது நிதி மற்றும் திட்ட அமைப்பினை (National Institute of Public Finance and Policy) உருவாக்கினார். 1995-இல் சென்னை பொருளாதார பள்ளியினை (Madras School of Economics) உருவாக்கினார். இந்திய வரி விதிப்பின் அடுத்த கட்டம் தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax), அடுத்த நிதியாண்டிலிருந்து அமுலுக்கு வரும். அதை பார்க்க ராஜா செல்லையா இருக்க மாட்டார்.

நான் 1992-95 பொருளாதாரம் படித்த போது என்னுடைய இந்திய பொருளாதார பாடத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது ராஜா செல்லையாவின் புத்தகங்கள்தான். ஒழுங்காக மார்க் எடுத்து கட்-ஆப்பில் தேறியிருந்தால், டெல்லி பொருளாதார பள்ளியில் படித்து, மத்திய வங்கியிலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பிலோ பணியாற்றிக் கொண்டிருப்பேன். ஆனால், அப்போது அவர் சென்னை பொருளாதார பள்ளியினை உருவாக்கியது எனக்கு தெரியாமல் போனது. இங்கேயாவது படித்திருக்கலாம். கிட்டத்திட்ட கல்லூரி படிப்பு முடித்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் நிதி/பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் எதையாவது படிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ராஜா செல்லையாவின் இறப்பு அதனை உறுதிப்படுத்திவிட்டது. இனி படிக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த வார கார்ட்டூன்


நன்றி: டைம்ஸ் ஆன்லைன்

April 08, 2009

சனிமூலை - 005

நடந்து முடிந்த G-20 மாநாட்டில் ஆரவாரமாக $1 டிரில்லியன் டாலர்கள் உலக பொருளாதாரத்தினை மந்த சூழலிருந்து விடுவிக்க அறிவிக்கப்பட்டது.ஒபாமா வந்தார். பேசினார். கை குலுக்கினார். சிரித்தார். போட்டோ எடுத்துக் கொண்டார். போய்விட்டார். அவர் உள்நாட்டு பிரச்சனை அவருக்கு. தேசியவாதம் (State Protectionism) இருக்கக்கூடாது என்று ஒன்று சேர முடிவெடுத்தார்கள். அவரவர் நாட்டுக்கு போய் அதனை மறுதலிப்பார்கள் அல்லது வேறுவிதமாக தேசியவாதத்தினை உட்புகுத்துவார்கள்.

இதற்கிடையில் சீனா திடீரென ஞானோதயம் பெற்று அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருக்கக்கூடாது. அதற்கு மாற்றாக ஐ.எம்.எப்பின் அதிகாரத்தினை பயன்படுத்தி ஒரு புதிய கரன்சியினை உலக கரன்சியாக அறிவிக்கவேண்டும் என்று ஒரு குண்டினை தூக்கிப் போட்டிருக்கிறது. அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருப்பதால் தான் அமெரிக்க பெட்ரல் ரிசர்வும், அரசாங்கமும் எவ்விதமான லஜ்ஜையும் இல்லாமல், கேட்பவர்களுக்கு எல்லாம் அச்சடித்து கொடுத்து, அமெரிக்க டாலரினை வெறும் பேப்பர் கரன்சியாக மாற்றியிருக்கிறார்கள். புஷ் கண்ட புண்ணியம் இது தான். உள்நாட்டு செலவுகள், போர்கள், கேணத்தனமான முதலீட்டு திட்டங்கள், சப்-பிரைமில் வாரி இறைத்த பணம் என்று ’பிரிண்டர் கண்ட இடமெல்லாம் டாலர்’ என்று குதியாட்டம் போட்டிருக்கிறார்கள். இடதுசாரிகள் மற்றும் கம்யுனிச நாடுகள் இதையே தான் 30 வருடங்களாக வாய் கிழிய கத்திக் கொண்டிருந்தன. ஹ்யூகோ செவிஸ் சாவெஸ் (வெனிசூலா) தன் நாட்டின் பெட்ரோல் அந்நிய விற்பனையை யூரோவினை முன்வைத்து செய்தார். ஈரானும் பெட்ரோல் விற்பனையை யூரோவுக்கு மாற்றி இருக்கிறது. ரஷ்யர்கள் டாலராலாலும், யூரோவோடும் சரிவிகித உறவோடு இருக்கிறார்கள். பா.ராகவன் எழுதிய ‘ஆயில் ரேகை’ புத்தகத்தில் இந்த டாலர் உலக கரன்சியாக முன்வைக்கப்பட்டிருப்பதன் பின்புலத்தினை அரசல்புரசலாக சொல்லியிருப்பார்.

உலகிற்கு அமெரிக்க டாலர் தவிர்த்த ஒரு உலக கரன்சி வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகளுமில்லை. ஆனால் எப்போது என்பது தான் கேள்விக் குறி. இன்றைய சூழ்நிலையில் டாலர் தவிர்த்த உலக கரன்சி என்றால், இரண்டாம் நிலையில் இருப்பது யூரோ தான் (26%), மூன்றாவது ஜப்பானிய யென் (8%). ஆனால் இவற்றில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. சீனா தொடர்ச்சியாக தன்னுடைய கரன்சியினை (ரென்பி) செயற்கையாக மேலெழும்ப விடாமல் வைத்திருக்கிறது. இந்தியா ரூபாய்க்கு அந்த நிலையில்லை. அதனால் தான் அமெரிக்க டாலருக்கான மதிப்பு ரூ.43லிருந்து ரூ.52 போய், இப்போது ரூ.50.xx இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சந்தையினை பொறுத்தே நம் ரூபாயின் மதிப்பு மாறும். ஆனால், பிரச்சனை சீனாவிடம் இருக்கிறது.

மிகக் குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து, தன்னுடைய நாட்டு நாணயத்தின் மதிப்பை செயற்கையாக குறைத்து, அதன் மூலம், அமெரிக்காவி்ல் விற்று 2000-2008 கொள்ளை லாபம் பார்த்தார்கள். சம்பாதித்த லாபத்தினை அமெரிக்க அரசாங்க பாண்டுகளிலேயே முதலீடு செய்தார்கள். இதனால் கிட்டத்திட்ட டிரில்லியன் டாலர் கணக்கில் சீன பணம் அமெரிக்காவில் இருக்கிறது. சீனா அதை முன்வைத்து, உலகின் முண்ணனி வல்லரசு நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. உலக கரன்சி வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு செக் வைக்கலாம், மற்றும் தன் பணம் அமெரிக்காவில் இருந்தும், உலக “நன்மைக்காக” உலக கரன்சி கேட்கிறார்கள் என்கிற பெருமிதத்தையும் பெறலாம் என்பது மாதிரியான வழிகளில் யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல.

இப்போதைக்கு உலக கரன்சி என்பது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். அமெரிக்க டாலர் தான் இன்னும் பல வருடங்களுக்கு உலக கரன்சியாக இருக்கப்போகிறது, அதன் பல குறைபாடுகளுடன்.

எந்நேரத்தில் சனிமூலை என்று பெயரிட்டேனோ, போன வார இறுதியில் ஒரு நண்பரோடு திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டிய ஒரு அன்புத் தொல்லை. நண்பர் வேறு வாஸ்து படி, சனிமூலை என்று பெயர் வைத்தால், சனிஸ்வரன் அவனாகவே அழைப்பான், நீங்கள் போனீர்கள் என்றார். ஒரு சனி, இன்னொரு சனியினை எதற்கு பார்க்க போக வேண்டும் என்பது நான் அவரை கேட்காத கேள்வி.

தமிழகத்தினை இன்று வரை நான் முழுமையாக பார்த்ததில்லை. ரயிலில் போவது என்பதே அரிதாகி போனது. பறந்து கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் காரில் சிதம்பரம், மாயவரம், சீர்காழி, காரைக்கால் என ஒன்றரை நாள் சூறாவளி சுற்றுப்பயணம் அதுவும் வார இறுதியில் என்றவுடன் மறுக்க மனமில்லை. காரில் தமிழகத்தினுள் போவது ஒரு அலாதியான அனுபவமாக இருந்தது. வெட்கமாக இருந்தாலும், எனக்கு மும்பாய் தெரிந்த அளவிற்கு தமிழகம் தெரியாது என்பது தான் உண்மை. அதே இந்தவருடமாவது களைய முயல்கிறேன்.

திருநள்ளாறு. சனிஸ்வரன் கோயிலில் அபிஷேகமும், அர்ச்சனையும். 21/2 மணி நேரம் தரையில் நான் உட்கார்ந்ததேயில்லை. ஆனால் வேறுவழியில்லை. சுற்றியுள்ளவர்கள் பக்திமயமாக இருக்கும் போது, நான் மட்டும், சுவரில் வரைந்திருந்த நளன் கதை ஒவியங்களை பார்த்து கொண்டிருந்தேன். பிரகாரம் சுற்றி அம்சமாக வரைந்திருந்தார்கள். நளன் கதையில் நான் பரிதாபப்பட்டது, நளனுக்கோ, தமயந்திக்கோ இல்லை, ருது பர்ணனுக்கு. பாவம், கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்ட நாயகன் போல மொத்த கதையிலும் அவர் வந்து போய்விட்டார். கோயிலில் மற்ற குருக்களோடு பேசிக் கொண்டிருந்தேன். கோயிலின் தங்கமூலாம் பூசிய கலசங்களை லக்‌ஷ்மி மிட்டல் கொடுத்தாராம். சனிஸ்வரன்க்கும் இரும்புக்கும் சாஸ்திரத்தில் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்று சொன்னார்கள். சென்னை எப்போது வந்தாலும், திருநள்ளாறு வராமல் போகமாட்டார், வாராவாரம் அவர் பெயரில் அபிஷேகமும், அர்ச்சனையும் நடத்தி, பிரசாதங்கள் இனனபிற லண்டனுக்கு போகிறதாம். Interesting.

தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஒரு கனபாடிகளை ஒரங்கட்டி தான் மேற்சொன்ன வேலைகள் நடந்தது. கனபாடிகள் என்று சொன்னது சும்மாயில்லை. நிஜமாகவே அவர் “கன” பாடிகள். ஆறடி இரண்டு அங்குல உயரமும், 42-44 இடுப்பளவும் கொண்டு சன்னதியில் நின்றால், அவரை தவிர விக்கிரகத்தையே டெலஸ்கோப் கொண்டுதான் தேடவேண்டும். ’ஆஜானுபாகுவான’ என்கிற தமிழ்வார்த்தைக்கு உதாரணம் தெரியாமல் எட்டாம் வகுப்பிலிருந்து தவித்துக் கொண்டிருந்தேன். அந்த வருத்தத்தை கனபாடிகள் போக்கி விட்டார். அர்ச்சனை முடிந்து வெளியே வந்தவுடன் கூப்பிட குரல் தான் அட்டகாசம் “சாமி தரிசனம் முடிச்சுட்டு வந்தா சாத்துக்குடி ஜூஸ் சாப்பிடணும்னு ஐதீகம் இருக்கு சார்” என்று 3 சாத்துக்குடி ஜூஸ் விற்பவர்கள் அழைத்தார்கள். இப்போது என்னுடைய சந்தேகம் சாமி மீதல்ல. ஐதீகத்தீன் மீது.

தமிழ் சினிமாவின் வீச்சு எவ்வளவு பெரிது என்பது தமிழகத்தில் பயணம் செய்யும் போது தான் தெரிகிறது. சீர்காழியில் ஒரு ஆண்களின் சலூன் கடை பெயர் பலகையில், சிநேகா சிரித்து கொண்டிருக்கிறார். ஸ்ரேயா - சரவணா ஸ்டோர்ஸின் தங்க மாளிகை விளம்பரத்தின் படங்கள் ஊரெல்லாம் இருக்கின்றன. சரவணா ஸ்டோர்ஸின் ஐ.பி ஸ்ரேயா போஸ்டர் இல்லை போலிருக்கிறது. ‘அருந்ததீ’, ‘அயன்’ இரண்டு படங்கள் தான் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்திருக்கின்றன. சிதம்பரம் ‘வடுகநாதன் டிடிஎஸ்”ஸில் அனுஷ்காவின் பெரிய போஸ்டர் இருக்கிறது. அம்மணியினை “இரண்டு” படத்தின் ”மொபலைலா” பாடலில் பார்த்த போதே ஒரு ரவுண்டு வரும் சாத்தியங்கள் தெரிந்தது.’அருந்ததீ’யில் அனுஷ்காவின் கண்கள் சாலையில் போகிற வருகிறவர்களேயே பார்த்துக் கொண்டு இருக்கிறது. கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் வரை ‘அம்மா’ ‘அய்யா’ பேனர்கள்தான் அதிகமாக இருக்கிறது. அன்புமணி ராமதாஸினை எவ்வளவு மோசமாக வரையமுடியுமோ அவ்வளவு மோசமாக வரைந்து, அதற்கு கீழே பத்து பதினைந்து அமைப்பாளர்கள் பெயர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

குட்டி, குட்டி ஊர்களின் பெயர்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. “காத்திருப்பு” “பூம்பாழை” “வல்லம்படுகை”. அரசாங்கம் தரும் இலவச வேளாண்மை மின்சாரத்தில் பல கான்கீரிட் வீடுகளில் சன் டைரக்ட் டி.டி.எச் ஆண்டெனா. எல்லா குட்டியூர்களிலும் தமிழக அரசின் “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றொரு பெயர்ப்பலகை பார்த்தேன். “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றால் என்ன ?யாருக்காவது தெரியுமா? எல்லா கிராமங்களிலும் ஒரு “கீற்று மண்டி” கட்டாயமாக இருக்கிறது. சாப்பாட்டு கடைகளில் ‘புரோட்டா’ என்று எழுதியிருக்கிறார்கள். சென்னையில் அது ‘பரோட்டா’. எது சரியான உச்சரிப்பு ?

திருநள்ளாறு முடிந்து, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்தால், தேர் நகர் உலா போய் இருக்கிறது என்று சொன்னார்கள். நண்பர் அபராத காணிக்கை மட்டும் செலுத்திவிட்டு கிளம்பி ஞாயிறு இரவு சென்னை வந்து சேர்ந்தோம். மேல்மருவத்தூர் தாண்டி சாப்பிட அமர்ந்த இடத்தில் “தமிழ் முரசு” படிக்க கிடைத்தது. ராமநாதபுரத்தில் திராவிட கட்சியின் சார்ப்பாக ஜே.கே.ரித்திஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். சனிஸ்வரன் தன் வேலையை தமிழ்நாட்டில் ஆரம்பித்து விட்டான் என்று தோன்றுகிறது.

இந்த வார ஜோக்

முதல் முறையாக ஒரு சர்தார் அமிர்தசரஸிலிருந்து பம்பாயிற்கு விமானத்தில் போனான். அவனுடைய நண்பர்கள் எல்லாம் விமானம் பறப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். ஏக குஷி அவனுக்கு.

பம்பாயில் இறங்கியபின் அவன் கோவமாக அவன் நண்பர்களுக்கு போன் போட்டான்.

“நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், இந்த விமானம் பறக்கவேயில்லை. நான் உள்ளே போய் உட்கார்ந்த போது இது சாலையில் சென்று கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் வெளியில் பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். நான் மீண்டும் முழித்து பார்க்கும்போது அதே போல சாலையில் போய் கொண்டிருந்தது. பம்பாய் வந்துவிட்டது என்று அறிவித்தார்கள். இந்த டிரைவர் பறக்க பயந்து போய், தரை வழியாகவே என்னை பம்பாய் கொண்டு வந்துவிட்டான்.”

March 28, 2009

சனிமூலை - 004



மேலே உள்ள படத்தை கிளிக்கினால் பெரியதாக தெரியும். ஒட்டு மொத்த ”நிதி கெட்ட கேட்டையும்” படம் வ்ரைந்து பாகங்களை குறித்துள்ளார்கள். Infographics என்றழைக்கப்படும் வகையறாவில் நான் சமீபத்தில் மிகவும் ரசித்த படமிது.


எம்.ஐ.டி உலகின் மிக முக்கியமான இடம்.யிலிருந்து வரும் டெக்னாலஜி ரெவியுவினை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இந்த எம்.ஐ.டி, குரோம்பேட்டை ஸ்டேஷன் தாண்டின எம்.ஐ.டி அல்ல. மசாசூசேட்ட்ஸ் இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜி. பல கண்டுபிடிப்புகள் கண்டறிய தூண்டுகோலான கல்வி நிறுவனம். கல்வி நிறுவனம் என்பதை விட மிகப் பெரிய ஆராய்ச்சி கட்டிடம் என்பது தான் பொறுத்தமான வார்த்தையாக இருக்கமுடியும்.

எம்.ஜ.டியிலிருந்து டெக்னாலஜி ரிவியு(Technology Review) என்கிற ஒரு இதழ் வருகிறது. இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. கிட்டத்திட்ட 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இல்லாவிடினும், விட்டுவிட்டாவது படித்து வருகிறேன். அவர்கள் வருடாவருடம் ஒரு லிஸ்ட் வெளியிடுவார்கள் ”10 முக்கியமான தொழில்நுட்பங்கள்” அதில் இந்த வருடம் முக்கியமானது சோலார் பவர். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது.

இது உண்மையிலேயே ரொம்ப பழசு. 1960களில் ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. போட்டோ வொல்வோட்டிக் செல்கள் எஸ்.எம்.எஸ் மொழியில் ”பிவி செல்ஸ்” என்றழைக்கப்படும் செல்களை சை-பை படங்களில் பார்த்திருக்கலாம். இந்தியாவில் மோசர் பெர் நிறுவனம் தொழிற்சாலை போட்டு தயாரித்து கொண்டிருக்கிறது. கடைசியாக கேட்டதில் 2013 வரைக்கும் அவர்களின் ஆர்டர் புக் நிரம்பி வழிகிறது. மாற்று / சுத்த / பசுமை மின்சாரம் (Alternative Energy / Clean Energy / Green Energy ) என்று வகைவகையாக அழைக்கப்படும் முயற்சிகள் குளோபல் வார்மிங் காலக்கட்டத்தில் ஒரு cult ஸ்டேடஸுக்கு வந்துவிட்டது. முக்கியமான விஷயம் மாற்று எரிசக்தி விஷயத்தில், மூலப்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். The raw material and running cost of procurement is near zero. அது அலைகளோ, காற்றோ, அருவியோ, சூரியஒளியோ இன்னபிறவோ. அல் கோர் இதை படமாக்கி, எல்லாரையும் பயமுறுத்தி ஆஸ்கார் தட்டிக் கொண்டு போய்விட்டார்.

சூரியயொளி மின்சாரம் என்பது உலக விஞ்ஞானிகளின் மிகப்பெரிய கனவு. மற்ற எல்லா இயற்கை வழிகளை விட, சூரியயொளி வஞ்சனையில்லாமல் அமெரிக்காவிலிருந்து அம்பாசமுத்திரத்தின் குக்கிராமம் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது. மாற்று மின்சார வழிகள் என்று சொல்லப்படும், நீர், காற்று, மாட்டுச்சாணம் எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய பிரச்சனை அதன் மூலப்பொருட்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்போதைய பிவிசெல்ஸ்களின் விலையதிகம். இன்னொரு பிரச்சனை அதனை அரசாங்கமும், வீடு கட்டும் ரியல் எஸ்டேட் காரார்களும் புறக்கணிப்பது.

போன வார பிஸினஸ் லைனில், ஒரு பழைய கட்டுரை ஒன்றினை மறு வெளியீடு செய்திருந்தார்கள். இந்தியாவின் மொத்த எரிபொருள், மின்சார தேவையில் 33% சூரியஓளியிலிருந்தே எடுத்துக் கொள்ள முடியும் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

இந்த பொருளாதார மந்தத்தினை அறிவுள்ள அரசாங்கங்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டின் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தன்னிறைவினை அடுத்த மூன்றிலிருந்து ஐந்தாண்டு காலக்கட்டத்துக்குள் உலகத்தரத்துக்கு இணையாக கொண்டு வந்துவிடலாம்.

சென்னையில் 365நாளில் 325 நாள் கன்னா பின்னாவென்று வெயிலடிக்கும். ஆனால் அது பெங்களூரில் குறைவு. பெங்களூரில் சூரியஒளியில் இயக்கும் தண்ணீர் ஹீட்டர்கள் வாங்கினால், அரசு அதற்கு மானியம் தருகிறது. சென்னையில் அது இல்லை. இதற்கு முன்பான அரசில் எப்படி மழைநீர் சேகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்த பட்டதோ, அதே போல சூரியஒளியில் இயங்கும் பல்வேறு பொருட்களை சென்னை மாதிரியான சூடு பிரதேசத்தில் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று தோன்றுகிறது. அது நடக்கும் வரையில், நாம் சூரிய ஒளியினை துணி காய போடவும், ஜவ்வரிசி வடாம், வத்தல் பிழியவும் தான் உபயோகப்படுத்தி கொண்டிருக்கமுடியும்.



”தூக்கு மேடை பஞ்சு மெத்தை. தென்றலை தீண்டியதில்லை. தீயினை தாண்டியிருக்கிறேன்” என்று வசனம் பேசாத குறையாய், ஒரு வழியாய் ரத்தன் டாடா இந்த வார ஆரம்பத்தில் டாடாவின் நேநோ - ஒரு இலட்சரூபாய் காரினை அறிமுகப்படுத்தி விட்டார். ஏபரலில் மூன்று வாரங்களில் புக்கிங் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு இலட்ச ரூபாய்க்கு கார் என்பது உலக ஆட்டொமொபைல் வரலாற்றில் நிச்சயமாக ஒரு சாதனை. டாலரில் கணக்குப் போட்டால் வெறுமனே $2000 தான் வருகிறது. முதன்முறையாக ஒரு காரினை ஆன்லைனில் புக் செய்ய முடியும். டாடா நேனோ சர்வ நிச்சயமாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு உண்டான வரவேற்பினைப் போல, மிக அதிக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மிக சாதுர்யமாக அப்ளிகேஷன் பார்முக்கு ரூ.300, முழு புக்கிங்கிற்கு 75,000+ என கணக்குப் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். டாடா மோட்டார்ஸ் குறைந்தது 5 இலட்சம் மக்கள் இந்த முதல் பங்கீட்டில் பங்குபெற முயற்சிப்பார்கள் என்று கணக்கு போட்டிருக்கிறது. முதல் தவணையில் 50000 கார்கள் மட்டுமே பெறமுடியும், அதுவும் கணிணி தேர்ந்தெடுக்கும் ஒரு பட்டியலிலிருந்து. இந்த மாதிரியான முன்மாதிரிகள் இதற்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் துறையில் இல்லை. 10 இலட்சம் மக்கள் பங்கு கொண்டால், டாடா குழுமத்திற்கு குறைந்தது ரூ.950 கோடிகள் கிடைக்கும் என்று கணக்கிட்டுள்ளார்கள். பொருளாதார மந்த சூழ்நிலை மிகுந்த நேரத்தில் ரூ.950 கோடிகள் என்பது அருமையான விஷயம். யார் இந்த திட்டங்களை வகுத்தார்களோ, அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். மிக சாமர்த்தியமான வேலை.

இந்த மாதிரியான ப்ரொடக்ட் இன்னோவேஷன்களை தொடர்ச்சியாக செய்தாலேயொழிய, நாம் பெருமளவில் உலக சந்தையினை பிடிக்க இயலாது. சேவை ரீதியிலான இன்னோவேஷன்களை நாம் தொடர்ச்சியாக நாம் மென்பொருள் துறையில் செய்து கொண்டு வருகிறோம். பொருள்ரீதியான இன்னோவேஷன்களும் முக்கியம். பின்லாந்து என்கிற ஒரு நாடு இன்றைக்கு நோக்கியா என்கிற ஒற்றை செல் நிறுவனத்தின்மூலம் தான் பலபேருக்கு தெரியும்.


மூன்று சம்பந்தமில்லாத விஷயங்கள்
  1. இந்த வருடம் வரும் சூரிய கிரகணம் (ஜூலை 22, 2009) வானியலில் மிக முக்கியமான விஷயம். இந்தியாவில் இந்தமுறை பல நகரங்களில் இது முழுமையாக தெரியும். இதற்கடுத்து இந்தமாதிரியான ஒரு முழு கிரகண பார்வை இந்தியாவில் 2114இல் தான் கிடைக்கும். அதற்குள் இந்த பத்தி எழுதுபவனின் கதை முடிந்துவிட்டிருக்கும்.
  2. மத்திய ரிசர்வ் வங்கியின், கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயம்."The font size of the Most Important Terms and Conditions (MITS) should be minimum Arial -12". நமக்கு கொடுக்கும் பேப்பரில் ப்ரிண்டாகி இருப்பது ஏரியல்-5 இல்
  3. ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2002-03 இல் 2% இருந்தது. 2007-08இல் 10% உயர்ந்திருக்கிறது. 2004க்கு பின் நம்முடைய கல்விக்கான செலவீனம் குறைந்துக் கொண்டே வருகிறது
இந்த வார கவிதை

புத்தரின் போதனைகள்
வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
எறும்பு.

March 20, 2009

சனிமூலை - 003

பணவீக்கம் (Inflation) 0.44% குறைந்தது என்று எல்லா ஊடகங்களும் கொண்டாடாத குறையாக முன்பக்கத்தில் வெளியிட்டு இருந்தன. ஆனாலும், நாம் சாப்பிடும் அரிசியின் விலை ஏறி தான் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும் ? இதற்கும் இந்திய குடிமகனுக்கும் என்ன சம்பந்தம் ?

முதலில் இந்தியாவில் பணவீக்கம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பது தெரியாமல் வெறுமனே நம்பரை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பது முறையற்றது. இந்திய பணவீக்க சதவிகித எண், வாராவாரம் வியாழக்கிழமை வெளியிடப்படும். ஒட்டுமொத்த விலை குறியீட்டளவு (Wholesale Price Index - WPI) அடிப்படையாக கொண்டு இந்த சதவிகிதம் கணக்கிடப்படும். WPI-ல் உணவுப் பொருட்களுக்கான ஒதுக்கீடு வெறும் 22% மட்டுமே. அதாவது 1% பணவீக்கம் என்று சொன்னால், அதை நிர்ணயிப்பதில் 0.22% உணவுப் பொருட்களுக்கு வரும். இது தாண்டி, இந்த குறியீட்டளவு ஒரு “அடிப்படை வாரத்தினை”(Base week) வைத்து, அன்றைக்கும், இன்றைக்கும் என்ன வித்தியாசம் என்கிற ஒப்பீட்டளவில் கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீடு அடிப்படையே ஒரு தவறான அடிப்படை. அதைவிட மோசமான விஷயம், இதை கிரிக்கெட் ஸ்கோர் போல சம்பிரதாயத்துக்கு வாராவாரம் அறிவிப்பது.

பணவீக்கத்திற்கும், பங்குச் சந்தைக்குமான தொடர்பு அறுபட்டு ரொம்பநாள் ஆகிறது, நவம்பர் 2008க்கு பின், பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பணவீக்கம் குறைந்தால் பொருட்களின் விலையும் குறையவேண்டும். விலை குறைந்தால் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அதிகரித்தால், நிறுவனத்துக்கு வருமானமும், லாபமும் அதிகரிக்கும். இதில் எதுவுமே நடக்கவில்லை. அதனால், பங்குச் சந்தை இன்னமும் 8000-9500 இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தை முன்னேறுமா என்று படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டு காற்றில் வட்டங்கள் வரைவது இன்றைக்கு பிரபலமான விஷயம். நீங்களும் அந்த கூட்டத்தில் பங்கு பெற தொடர்ச்சியாக வணிக நாளிதழ்கள் படியுங்கள்.

குடிமகனுக்கும் பணவீக்கத்திற்குமான சம்பந்தமென்ன? ஏன் பணமெலிவு வரலாம் என்று சொல்கிறார்கள் என்பதற்கான அடிப்படையினை ஆராயலாம். ஒரு சாதாரண இந்தியனின் வருவாயில் மிக முக்கியமாக இடம்பெறுபவை நான்கு விஷயஙகள் - அடிப்படைப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள், சமூக செலவுகள், முதலீடுகள். அடிப்படைப் பொருட்கள் - அரிசி,பருப்பு முதல் மொபைல் ரீசார்ஜ் கூப்பன் வரைக்குமான விஷயங்கள். போக்குவரத்து செலவுகள் - டூவிலர்/காருக்கு பெட்ரோல் போடுவது முதல், ஊர் சுற்றுதல் செலவுகள். சமூக செலவுகள் - வாடகை, மின்சாரம், குழந்தையின் படிப்பு, கிரெடிட்காடுக்கு பணம் கட்டுதல் வரையிலான செலவுகள்.முதலீடுகள் - சிறுசேமிப்பில் ஆரம்பித்து, பரஸ்பர நிதி, காப்பீடு, வீட்டுக் கடன் வரைக்குமான விஷயங்கள்.

மேற்சொன்ன நான்கில் முதல் மூன்றில் பணவீக்கத்தின் நேரடி பாதிப்பு மிகக் குறைவு. அடிப்படைப் பொருட்களின் விலை உண்மையாக 20% ஏறியிருக்கிறது.ரூ.20-30க்குள் கிடைத்த நல்ல பச்சரிசி இன்றைக்கு ரூ.35-42க்குள்தான் கிடைக்கிறது. ஆக இதன் ஏற்றம் தவிர்க்க முடியாதது. பெட்ரோல், டீசல் வகையிலான பொருட்களின் விலை அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனாலேயே, நாம் இன்னமும் பெட்ரோல் உலகச்சந்தையில் $147 எட்டும்போது ரூ.50 கொடுத்து போட்டோம்.இப்போது $50க்குள் அடம்பிடித்துக் கொண்டிருக்கும்போது ரூ.45 கொடுத்து போட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆக, இதன் விலை பணவீக்கத்தோடு நேரடி தொடர்பானவையில்லை. சமூக செலவுகள் இப்போது பெரும்பாலானவர்களின் வீட்டில், அத்தியாவசியத்தினை தாண்டி குறைந்திருக்கின்றன. மூதலீடுகளும் மாறியிருக்கின்றன. ஆக, இது ஒரு நேர்மையான, நேரடியான கணக்கீட்டளவு என்பதற்கு எவ்விதமான முகாந்திரங்களுமில்லை. ஆனாலும், அரசுக்கு ஏதேனும் ஒரு குறியீட்டு எண் தேவைப்படுகிறது. அதை வைத்துக் கொண்டே மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு விதமான முயற்சிகளை எடுக்க முயல்கிறது. உ-ம், வட்டி விகிதங்களை குறைத்தல்

மக்களுக்கு உள்ளூரே பயம் வந்து விட்டது. வளைகுடா நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் தொகை(Inward remittance) 33% குறைந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. கேரளாவில் வளைகுடா நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பணியாளர்கள், சேமிப்பினை வைத்துக் கொண்டு அடுத்து கொல்லத்தில் படகு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயமுத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி வளையத்தில் இருக்கும் டெக்ஸ்டெல் மில்கள் பணியாளர்களை குறைத்து காற்று வாங்குகின்றன. குஜராத்தில் வைரம் வெட்டி சீரமைக்கும் தொழில் மிக மோசமான நிலைக்கு போய், இன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பெயில் அவுட் கொடுக்கும் அளவிற்கு பேசப்பட்டு வருகிறது. ஆக இந்த நிலையில் கண்டிப்பாக புள்ளியியல்ரீதியாக கணக்கிடப்படும் பணவீக்கம் குறைந்துதான் இருக்கும்.

பண வீக்கம் இந்தியாவில் பழகி போன ஒன்று. இந்திராகாந்தி ஆட்சியில் இந்தியாவின் பணவீக்கம் 35% உலகளவில் எல்லா அரசுகளும் பணவீக்கத்தினை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன.பிரச்சனை பணவீக்கத்தில் இல்லை. அது பணஇளைப்பில்(Deflation) இருக்கிறது. பணவீக்கத்தினை விட மோசமான விஷயம் பணஇளைப்பு.

பண இளைப்பு என்பது தொடர்ச்சியாக ஒரு பொருளின்/சேவையின் விலை, வாடிக்கையாளர்கள் இன்றி, தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருதல். பொருட்களின் விலை குறைவு என்பது வாடிக்கையாளனுக்கு சந்தோஷமான விஷயமாகத் தானே இருக்கமுடியும், இதில் என்ன பிரச்சனை?

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு விலையுயர்ந்த ஒரு செல்பேசி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் வாங்கிய விலை ரூ.30,000. இதை சந்தையில் விற்றால், ரூ.24,000 போவதாக கொள்வோம். இப்போது நீங்கள், ஒரு ஆளரவமற்ற தீவில் இருக்கிறீர்கள். உங்களின் செல்பேசியின் விலையென்ன? விடை: பூச்சியம். சுழி. ஒன்றுமேயில்லை. ஒரு பொருளின் / சேவையின் விலை என்பது அதை வாங்கும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தே அமையும்.

இப்போது அதே உதாரணத்தினை வேறுவிதமாக பார்ப்போம். நீங்கள் ரூ.24,000க்கு விற்கு தயாராக இருக்கிறீர்கள். ஆனால் வாடிக்கையாளர்கள் இல்லை. உடனே, விலையினை ரூ 22,000க்கு குறைக்கிறீர்கள். அப்போதும் வாடிக்கையாளர்கள் இல்லை. ரூ 20,000, ரூ 18,500, ரூ 16,000, ரூ 15,000. ம்ஹூம். ஒரு பயலும் பக்கத்தில் நெருங்குவதாக இல்லை. இப்போது உங்களின் மனநிலையென்ன?

இதுதான் பண இளைப்பு. இது மோசமான விஷயம். இதையே ஒரு பொருள் விற்கும் வியாபாரிக்கும், சேவை செய்யும் வியாபாரிக்கும் பொறுத்திப் பாருங்கள். அவனுடைய இருப்பு (inventory) அதிகமாகும். இந்தியாவில் ஏன் கார் விற்பனை கடந்த நான்கு மாதங்களில் சரிந்தது ? ஏன் உங்களின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் ஒர்ப்படியின் மகனுக்கு அவனுடைய மென்பொருள் சேவை வேலை பறிபோனது? ஏன் நாத்தனாரின் கணவர் துபாயிலிருந்து திரும்பிவந்து இந்தியாவில் தொழில் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்? ஏன் ரூ.52,000 போன ஸ்டீல் கம்பிகள், இன்றைக்கு சீந்த ஆளில்லாமல் ரூ.35,000க்கு அல்லாடுகிறது ? ஏன் டி.எல்.எப் மாதிரியான, இந்தியாவின் முதன்மை கட்டமைப்பு நிறுவனங்கள், பெங்களூரிலும், சென்னையிலும், அவர்களின் அபார்ட்மெண்ட் விலைகளை 35% குறைத்ததை லவுட் ஸ்பீக்கர் வைத்து அரற்றுகிறார்கள்?

ஒரே விடை: நாம் பண இளைப்பினை நோக்கி போய் கொண்டிருக்கிறோம். உங்களுக்கும், எனக்கும் நாளை என்ன நடக்குமோ என்கிற பயம் வந்துவிட்டது. நம்முடைய வேலை நிரந்தரமா, இல்லை கழட்டி விட்டுவிடுவார்களா என்கிற தொடர்ச்சியான அலர்ஜி எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியே வேலை இருந்தாலும், சம்பளம் சரியாக ஒன்றாம் தேதி வருமா என்கிற கவலை வாட்ட ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், நாம் உபயோக்கிக்கும் பொருட்கள் / சேவைகளை குறைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

வார இறுதியில் ஹோட்டலில் சாப்பிட்டதை குறைக்க ஆரம்பித்து விட்டோம். கிரெடிட் கார்டில் வாங்கி பின்னாடி கட்டிக்கொள்ளலாம் என்கிற நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்திருக்கிறது. குமிழில் ஷேவ் பண்ணக்கூட பார்லர் போன பயல்கள், ஜில்லெட் ப்ரெஸ்டோவும் கையுமாக சுயசிரைப்பில் இறங்கிவிட்டார்கள். எங்கெங்கெல்லாம் குறைக்க முடியுமோ, அங்கெங்கெல்லாம் நாம் நம் தேவையினை குறைத்து கொண்டிருக்கிறோம். இது தான் நிதர்சனம்.

நாம் நம் தேவைகளை குறைத்தால், அதை விற்பவர்களின் வருமானம் குறையும். அவர்கள் வேலை குறைப்பு செய்வார்கள். வேலை போனவர்களுக்கு வருமானம் வராததால், அவர்களின் தேவையும் சுருங்கும். தேவை சுருங்கினால் இருப்பு அதிகமாகும். விற்கமுடியாமல் தேங்கும். தேங்கினால் அதன் வட்டி எகிறும். கட்டமுடியாதவர்கள், நிறுவனத்தினை மூடிவிட்டு போய்விடுவார்கள். இது ஒரு கொடுமையான, குரூரமான வட்டம். இதை தவிர்க்கதான் உலகெங்கிலும் அரசாங்கங்கள் பணத்தினை பெயில் அவுட் பேக்கேஜ், ஸ்டியுமலஸ் பேக்கேஜ் என்று கொட்டோகொட்டென்று கொட்டி, தேவையினை அதிகரிக்க விரும்புகின்றன.

இறுதியாக, இந்தியாவின் நிஜமான பணவீக்க குறீயிடு 10.43%, இது வாடிக்கையாளர் விலை குறியீட்டளவினை (Consumer Price Index - CPI) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது.

மற்றபடி, ஒவராக பொருளாதாரம் பேசி கடுப்பேற்ற விரும்பவில்லை.



மொழி எப்படியெல்லாம் காலத்திற்க்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதற்கு ஆங்கிலம் சரியான உதாரணம். பட்லர் இங்கிலிஷில் ஆரம்பித்து, அமெரிக்கன், பிரிட்டிஷ் என பல வட்டாராக்கங்கள் ஆங்கிலத்தில் உண்டு. அதில் நான் சமீபத்தில் தொடர்ச்சியாக படித்து வருவது, வேர்ட்ஸ்பெ தளத்தில் வரக்கூடிய சில தற்காலத்திய வார்த்தைகள்.

உதாரணத்துக்கு
self-tracker - பல்வேறு தளங்களில் தன்னுடைய உடல், மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடர்ச்சியாக பாலோ பண்ணுதல்.
sexting / sexter கில்மாவாக கேர்ல் ப்ரெண்டுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல் / அனுப்புவர்.
data shadow - உங்களுடைய கிரெடிட்/டெபிட் கார்டுகள், செல்போன்கள், இணைய தளங்களில் நீங்கள் செய்திருக்கக்கூடிய விஷயங்கள், வலைப்பதிவுகளில் நீங்கள் போடக்கூடிய கமெண்டுகள் போன்ற உங்களைப்பற்றிய பல்வேறு டேட்டாவினை விட்டு போதல்

இதுமாதிரியான விஷயங்களை கொஞ்சநாட்கள் என்னுடைய நண்பர் ஒருவர் டிவிட்டரில் செய்து கொண்டிருந்தார். அப்புறம், தமிழ்கூறும் நல்லுலகம், “செல்லமாக” மிரட்டியதால் அதனை விட்டு விட்டார். இப்போது Googling என்கிற வார்த்தை டிக்‌ஷ்னரியிலேயே வந்துவிட்டது. ஆனால், தமிழில் இதெல்லாம் நடக்கும் சாத்தியங்கள் குறைவு. தமிழ்நாட்டில் தமிழினை வெறுக்க வைப்பது இரண்டே விஷயங்கள் 1. தமிழாசிரியர்கள் 2. திராவிட கட்சிகள்


இந்த வார கோவம்

கோவம் என்பது சாதாரண வார்த்தை. மூர்க்கமான, அரக்கத்தனமான கோவம் என்று வைத்துக் கொள்ளலாம்.

மும்பாயில் தந்தையும், தாயுமாக சேர்ந்து, ஒரு சாமியாரின் பேச்சினைக் கேட்டுக் கொண்டு, சொந்த மூத்த மகளையே 9 வருடங்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதுதாண்டி அந்த சாமியாரும் அந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார். இது போதாதென்று அவருடைய இன்னொரு மகளையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்றபோதுதான் விஷயம் வெளியே வந்திருக்கிறது. இதில் சோக நகைச்சுவையென்னவென்றால், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தில் incest என்றழைக்கப்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு சட்டமேயில்லை. Disgusting. அதனால் வெறுமனே பாலியல் வன்முறை என்கிற கோணத்தில்தான் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பல விஷயங்களில் மத்திய கிழக்கு நாடுகளின் மேல் எனக்கு பிரச்சனைகள் இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில், அவர்களுடைய தண்டனை தான் சரியானதாக தெரிகிறது.

பெற்ற மகளோடு உறவு கொண்டால், செல்வம் பெருகும் என்று சொன்ன ஒரு புறம்போக்கு சாமியாரின் பேச்சினைக் கேட்டு 9 வருடங்கள் நடந்த இந்த கொடுமையினை படிக்கும் போது பிபி எகிறுகிறது. பெற்ற மகளோடு உறவு கொண்டு ஒருவேளை செல்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுமானால், உலகத்தில் இன்றைக்கு உறவு முறைகள் வேறுமாதிரியாக இருந்திருக்கவேண்டும். தமிழில் எனக்குதெரிந்த எல்லா கெட்டவார்த்தைகளை பிரயோகித்தாலும், இன்னமும் கோவம் தனிந்தபாடில்லை.

இராம.நாராயணன் மாதிரியான ஆட்கள் கிராபிக்ஸ் உத்திகளுடன் தீய சக்தியை தெய்வ சக்தி அழிக்கும் என்றெடுக்கும் உடான்ஸ் படங்களின் கோரமான முகம் தான் சாமியார்களை நம்பி இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடுவது. இப்படிப்பட்ட கோரங்கள் நடக்கும்போது பார்த்து கொண்டிருப்பதற்கு பெயர், தெய்வ சக்தியல்ல, அது தெய்வ சகதி. என்ன புரியவில்லையென்றால், அந்த இரண்டு பெண்களின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும், சமூகத்தில் அவர்களின் நிலையென்ன, நாளை அவர்களுடைய வாழ்க்கையினை எப்படி பார்ப்பார்கள் - இதையெல்லாம் அந்த பெற்றோர்கள் யோசித்தே பார்த்திருக்க மாட்டார்களா? இந்த மாதிரியான சம்பவங்களினாலேயே, நான் கூடிய விரைவில் நிஹிலிஸ்டாக (Nihilist) மாறிவிடுவேனோ என்கிற பயம் இப்போது வர ஆரம்பித்திருக்கிறது.

March 13, 2009

சனிமூலை - 002

”நொர்நாட்டியம்” “எசலிப்பு” “குச்சி குத்தல்” “செம்போத்து பிடித்தல்” - இதற்கெல்லாம் பொருள் என்ன? விடை: கடைசியில்


போன வாரம் இரவு நண்பர் ஒருவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.அதில் இந்தியாவில் இருக்கும் தனியார் காப்பீடு நிறுவனங்களின் நஷ்ட தொகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர் அனுப்புவதற்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் அமெரிக்காவின் பெரிய காப்பீடு நிறுவனம், இன்னமும் கொஞ்சம் ஆக்சிஜன் அரசிடமிருந்து பெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான AIG மீண்டும் அரசிடம் கெஞ்சி,கூத்தாடி $30பில்லியன் இடைக்கால நிவாரணமாக பெற்றிருக்கிறது. அமெரிக்க வங்கிகள், முதலீட்டு ஆணையங்கள், காப்பீடு நிறுவனங்கள் எல்லாமே கொடுத்து வைத்தவர்கள், தவறு “கொடுத்து கெட்டவர்கள்”. அமெரிக்க அரசும், ஒபாவின் பொருளாதார கவுன்சிலில் இருப்பவர்களும், மன்னராட்சியில் மக்களுக்கு தானம் கொடுக்கும் நல்லாட்சிப் போல வாரி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். திறந்துவிடப்பட்ட அணைப் போல, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காபாற்றுதல் படலம் நடந்து கொண்டேயிருக்கிறது. ஜடாயுக்கு ராமர் மோட்சம் கொடுத்தது போல, ஒபாமா அமெரிக்கர்களுக்கு.

இப்போது பெரிய பிரச்சனை என்னவென்றால், நம் மக்கள் உச்சத்தில் இருக்கும்போது வந்த எல்லா தனியார் காப்பீடு நிறுவங்களிலும் முதலீடு செய்துவிட்டார்கள், AIG போல இதுவும் கவிழுமா என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி. இந்தியாவில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் கவிழாது. நிம்மதியா.

ஏனெனில், இந்திய காப்பீடு நிறுவனங்கள் Insurance Regulatory and Development Authority of India வாய் கோணாமல் இருக்க IRDA என்று அழைக்கப்படுகிற இந்திய காப்பீடு கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு கீழ் வருகிறது. IRDAவில் உறுப்பினராக இல்லாமல், இந்தியாவில் யாரும் தனியார் காப்பீடு நிறுவனத்தினை நடத்த முடியாது. IRDA பல முக்கியமான முடிவுகளை முன்வைத்திருப்பதால், அமெரிக்க நிறுவனங்கள் போல டெரிவேட்டிவ்களிலோ, கிரெடிட் டிபால்ட் ஸ்வேப்புகளிலோ(CDS) முதலீடு செய்ய முடியாது. அதனால், கவிழ்வதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு.

மேற்சொன்ன டெரிவேட்டிவ், CDS போன்ற வார்த்தைகள் படிக்கும்போதே மூளையில் பட்டாம்பூச்சி பறந்தால் மறந்துவிடுங்கள். வாரன் பஃபெட்டே இம்மாதிரியான விஷயங்களை மண்டையில் ஏற்றிக் கொள்வதில்லை. இப்போதைக்கு, இந்தியாவில் தனியார் காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் உங்கள் பார்மசியில் ’வேலியம்’ வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. நமீதாவோடு ஹவாயில் டூயட் பாடிக்கொண்டே கனவு காணுங்கள்.

இப்போதிருக்கும் பொருளாதார சூழ்நிலையில், மில்லியன், பில்லியன்கள் போய், டிரில்லியன்கள் பேசப்படுகின்றன. ”நீ என்னடா பிஸ்கோத்து, நாங்கெல்லாம் அந்த காலத்திலேயே டிரில்லியன் டாலரை தூக்கி கொடுத்தவங்கடா” என பின்னாளில், உங்கள் சந்ததியினரிடம் பீத்திக் கொள்ள இது பயன்படும்.



நண்பர் ஒருவரோடு இந்த வார ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தேன். சுற்றுச்சூழல் விஷயங்களில் அவர் கெட்டிக்காரர். இப்போது, குறைந்த கட்டுமான வீடுகளை, மூங்கில் பின்புலத்தோடு ஒரிஸ்ஸாவில் ஒரு நதியோரம் மேற்கொண்டிருக்கிறார். அவர் சொன்ன ஒரு விஷயம் ப்ரீக்னாமிக்ஸ் தனமானது. பரீக்னாமிக்ஸ் தெரியவில்லையென்றால், பெரியதாக ஒன்றும் கெட்டுப் போகாது. சம்பந்தமேயில்லாத இரண்டுவிஷயங்கள் என்று நாம் நினைத்திருக்கும் விஷயங்களுக்கு இடையே ஒரு சம்பந்தமிருக்கும்.

கடந்த 300 ஆண்டுகளில், எங்கெங்கெல்லாம் மூங்கில் பூ பூத்ததோ, அங்கெல்லாம் பஞ்சமும், ப்ளேக்கும் வந்திருக்கிறது. மொட்டை தலைக்கும் முழங்காலும் முடிச்சா என்றால் இல்லை. விஷயம் கொஞ்சம் அறிவியல் பூர்வமானது.

மூங்கில் பூக்கள் எலிகளுக்கு பிடிக்கும். மூங்கிலில் பூ வந்தால், அத்தோடு மூங்கில் அறுவடை அங்கே காலி. மூங்கில் பூ எலியை பொறுத்தவரை வயாகரா மேட்டர். தின்னும் எலிகள் இஷ்டத்துக்கு இனப்பெருக்கம் செய்யும். மூங்கில் பூ தீர்ந்தவுடன், பக்கத்தில் இருக்கும் அறுவடை நிலங்களுக்கு இவை படையெடுக்கும். விளைப்பொருட்களையெல்லாம் தின்று தீர்க்கும். மக்கள் எலிகளை கொல்ல, பூச்சி மருந்தடிப்பார்கள், எலி பாஷாணம் கொடுப்பார்கள். தின்னும் எலிகள் செத்துப் போய், பாக்டீரியாக்கள் காற்றில் பரவி, மக்கள் மூச்சிலேறி, ப்ளேக் வந்து சாவார்கள். எலி தின்ன மிச்சத்தை வைத்துக் கொண்டு அறுவடை செய்ய முடியாது. பஞ்சம் வரும். மக்கள் கொத்து கொத்தாக குடிமாற்றம் செய்வார்கள்.

மூங்கில் பூ இப்படி தான் சமுக புரட்சியினை செய்துவருகிறது. இதை விட சமூக புரட்சியினை அரசியல்வாதிகள், ஒரே ஆளுக்கு 10 ரேஷன்கார்டுகள் கொடுத்து, பல இடங்களில் அவருக்கான குடும்பம், வாழ்க்கை வசதிகள் இருக்கிறது என சொல்லி சமூக புரட்சி செய்து வருகிறார்கள், அதெல்லாம் இயற்கையில் சேராது.



இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு என்ன வரும். ஒரே ஒரு ரூபாய்க்கு.

  • 2 அல்பென்லெய்பீ
  • டூவீலருக்கான காற்றடிக்கும் காசு
  • கடலையுருண்டை
  • பிச்சைக்கார தானம்
  • ஏர்டெல்லில் இந்தியா முழுக்க செல்பேசியில் ஒரு நிமிடம் பேச
  • கோவிலுக்கு வாசலில் செருப்பு விட
  • பட்டர் பிஸ்கேட்
  • ஆரம்பகால டெக்கான் குரோனிக்கல்
  • உண்டியல் காசு மற்றும்
  • வாய்க்கரிசி போட
கடைசியாக சொன்ன வாய்க்கரிசி தான் ஒரு ரூபாய்க்கு நடந்தது. சென்ற வாரத்தில், தமிழகத்தில் எங்கேயோ, ஒரு பரோட்டா கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் தகராறு. வாடிக்கையாளர் குடித்திருந்தார் போலிருக்கிறது. ஒரு ரூபாய் அவர் சாப்பிட்ட கணக்கில் தரவில்லை. கடைக்காரர் கேட்க, வாய் வார்த்தை தடிக்க, வாடிக்கையாளர், கடைக்காரரை கொன்று விட்டார். ஒரே ஒரு ரூபாய். எல்லார்க்கும், செத்தபின் ஒரு ரூபாயினை நெற்றியில் வைப்பார்கள். இவர் ஒரு ரூபாய் கேட்டதால் செத்து போனார். உயிரின் மதிப்பு அவ்வளவுதான்.

முதலாளித்துவ தேசங்கள் பணத்திற்காக செய்யும் கொலைகள் - விபத்துகள், இலங்கை, பாலஸ்தீனம், பெரும்பகுதி ஆப்ரிகா போன்ற இடங்களில், இப்போது சாதாரண மனிதர்களும் கொலைகளை சர்வசாதாரணமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி ஒரு ரூபாயினைக் கூட உரிமையோடு கேட்டு வாங்கமுடியாது போலிருக்கிறது, உயிர் ஒரு ரூபாயினை விட ரொம்ப பெரிய விஷயம்.


“உவின்ஸ்லோவின் தமிழ் அகராதி 1862இல் வெளிவந்தது. இதில் “கும்பகோணம்” என்ற சொல்லுக்குப் பித்தலாட்டம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இதே சொல்லை(1929) சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகனில் சேர்ப்பதற்கு பெரும் எதிர்ப்பு வந்திருக்கிறது. கடைசியில் சேர்க்காமல் விட்டு விட்டனர். தமிழ் லெக்சிகனின் பொறுப்பை ஏற்ற வையாபுரிப் பிள்ளை இது போன்ற சிக்கலைச் சந்திருக்கின்றார்.”
மேற் சொன்ன பேரா நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தது. தமிழ் அமீபாவுக்கு முன்னாடியான மொழி என்பது பேத்தல் என்பதில், தமிழ் படித்த பலபேருக்கு உண்மையாய் இருந்தாலும், மனக்கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மொழி என்பது ஒரு அருமையான மொழி என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.

’நாஞ்சில் நாடு’ என்றழைக்கப்படும் நாகர்கோயில், கன்னியாகுமரியில் ஒரு தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் ஒரு தமிழ் இருக்கிறது. சென்னைக்கு சென்னை தமிழ், மதுரை தமிழ், கோயமுத்தூர் தமிழ் என ஒவ்வொரு 100 கிமீட்டருக்கும் தமிழ் சொற்கள், அதன் பொருள், உச்சரிப்பு என மாறிக் கொண்டேயிருக்கிறது. வடிவேலு தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது நகைச்சுவையோ, இல்லையோ, கண்டிப்பாக “மதுர தமிழின்” பல வார்த்தைகள். அந்தவகையில் நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் நாகர்கோயில் / கன்னியாகுமரியில் புழங்கும் தமிழில் சில வார்த்தைகள் தான் மேற்சொன்னது

  • நொர்நாட்டியம் - சிக்கலான, கஷ்டமான, செய்யமுடியாது
  • எசலிப்பு - பிணங்குதல்; வேண்டியவர்கள் இருவரும் சண்டை போடுதல்
  • குச்சி குத்தல் - கர்ப்பத்தை கலைத்தல்; எருக்கலஞ் செடிக்குச்சியை கர்ப்பமாண பெண்ணின் குறிக்குள் குத்தல்
  • செம்போத்து பிடித்தல் - திருட்டுத்தனமாக பெண்ணுடன் தொடர்பு கொள்ளுதல்
நாட்டார் வழக்காற்றியல் என்கிற துறை பெயரை கேட்டாலே, பாதி பேருக்கு, நாட்டாருக்கும், மளிகைக் கடை நாடாருக்கும் ஏதோ உறவிருக்கிறது என்கிற அளவில் தான் நம்முடைய வட்டார ரீதியான தமிழறிவு நமக்கிருக்கிறது. ”நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி” (தமிழினி வெளியிடு, அ.கா.பெருமாள்) என்கிற புத்தகத்திலிருந்து எடுத்தது தான் மேலே குறிப்பிடப்பட்டது.

அ.கா.பெருமாளின் கடுமையான உழைப்பு புத்தகம் முழுவதும் தெரிகிறது. என்னதான் நாம் எல்லோரும் தமிழில் பேசினாலும், ஒரு வட்டாரத்தில் பேசும் தமிழும், அதன் சொற்களுக்கான பொருளும் அதை நாம் புரிந்து கொள்வதும் சிரமமான விஷயம். இந்த நிலையில்,தமிழை நமக்கே மறு அறிமுகம் செய்வது போல சில வார்த்தைகள் அச்சு அசலாக இருக்கின்றன. தமிழின் வளம் பற்றி கவலைப்படுபவர்களுக்கு இப்புத்தகம் ஒரு eye opener. இதில் வரும் தெம்மாடி, தெண்டி போன்ற வார்த்தைகள் நாம் மலையாளத்துக்கு கடன் கொடுத்தவை.

புதிய வார்த்தைகளை, கலை-அறிவியல் அகராதிகளில் தேடி மண்டை காய்வதற்கு முன், அவர்கள், சில காலம், இம்மாதிரியான சொல்லகராதிகளில் தேடினால் பல வார்த்தைகள் கிடைக்கலாம். எசலிப்பு என்பது ஒரு அருமையான வார்த்தை - Friendly Fights, disturbances, issues போன்றவற்றுக்கு இதனை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் Boardroom battle என்கிற ஒரு பதம் இருக்கிறது. அதற்கு ஈடான பதமாக ”எசலிப்பு” தெரிகிறது. போர்ட் ரூமில், எல்லாம் தெரிந்தவர்கள் தான். ஆனாலும், அவரவரகளின் கருத்திற்க்கேற்ப பிணக்குகள் வெளிப்படும்.

தமிழ் மொழி வளரவேண்டுமானால், வட்டார வழக்கினை பொது வழக்காக கற்றுக் கொடுத்தல் அவசியம். இது தெரியாமல், தமிழ்ப் படத்திற்கு, தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் நன்றாக வளர்ந்து வீ.ஆர்.எஸ் வாங்காது.

இந்த வார கார்ட்டூன்

ஆர்.கே.லக்‌ஷ்மன் - Everlasting Truth (டைம்ஸ் ஆப் இந்தியாவிலிருந்து)


பிற்சேர்க்கை

ராபர்ட் லுட்லம் செத்துப் போய்விட்டாராம். பெயரை நான் சரியாக சொல்லவில்லையாம். அதனால், இப்போதைக்கு போன வாரத்திய விஷயத்தினை ஆவி அமுதாவிடம் சொல்லி, லுட்லமின் ஆவியை உடலில் ஏற்றி அந்த விஷயத்தினை எழுத சொல்லலாம்.

March 06, 2009

சனிமூலை - 001

இந்த வார (2-3-2009) ஆரம்பத்தில் பெரும் பணக்காரரான வாரன் பஃப்பெட் தான் சில தவறான முதலீடுகளை செய்ததாக அவருடைய பெர்க்‌ஷயர் ஹாத்வே நியுஸ்லெட்டரில் சொல்லியிருக்கிறார். நல்ல வேளையாக வாரன் தமிழராக இல்லை. “வழுக்கி விழுந்தார் வாரன் பஃப்பெட்” என எதுகை மோனையோடு அது தலைப்பு செய்தியாயிருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய பொருளாதார சிக்கலில், வாரன் பஃப்பெட்டேயிருந்தாலும், வழுக்கி தான் விழ வேண்டும் என்பது தான் நியதி.

இதற்கெல்லாம் அசராத கூட்டம் ஒன்று இருக்கிறது. இந்திய பங்குச் சந்தை அனலிஸ்டுகள்.

தொடர்ச்சியாக அவர்கள் சொல்லும் செய்திகள் படு தமாஷாக இருக்கும். இரண்டு நாள் பங்கு சந்தை ஏறினால், உடனே நான்கு அனலிஸ்டுகள் ’இதிலிருந்து இதற்குள்’ என ஏதேனும் ஒரு நம்பரை சொல்லுவார்கள். இறங்கினாலும் அதே கதை. இரண்டு அனலிஸ்டுகள் ஒரே மாதிரியான கருத்தினை சொன்னதாக சரித்திரமேயில்லை. உருப்படியாக ஒரு தீர்க்கமான தீர்வும் காணோம். நான்கு தமிழர்கள் ஒரிடத்தில் இருந்தால், ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றொறு அவதூறு உண்டு. அதை அனலிஸ்டுகளுக்கும் சேர்த்து கொள்ளலாம். நான்கு அனலிஸ்ட்கள் ஒன்றாக இருந்தால் ஆறிலிருந்து பத்துவகையான முடிவுகள்,ஒரே பங்குச்சந்தை, நிறுவன நிலவரங்களை வைத்துக் கொண்டே சொல்வார்கள். என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி, யு.டி.வி.ஐ என தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எதையாவது சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அதை பார்ப்பதற்கு பார்த்த காமெடியையே திருப்பி போட்டாலும் ஆதித்யா அல்லது சிரிப்பொலி பார்ப்பது பெட்டர்.

இந்திய பங்குச் சந்தையில் விளையாடுவது என்பது ஒரு பெரிய மைதானத்தில் ஆடும் ஆட்டம். கடந்த 6 மாத கால சராசரி பங்குகள் கைமாறியது என்கிற புள்ளிவிவரத்தினை எடுத்து பார்த்தால் நான் சொல்வது புரியும். வெளிநாட்டினர் முதலீடு செய்வதும், பின்பு திரும்ப எடுத்துக் கொள்வதுமாக, கிழவியின் சுருக்குப்பை காசினை குடிக்கார பேரன் எடுக்கும் கதையாய் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வாரன் பஃபெட் படித்தால், அவர் பங்குச்சந்தை டிக்கர்களை பார்க்கவே மாட்டார் என்பது புலப்படும். அவருடைய கவனிப்பு எல்லாம், ஒரு நிறுவனத்தின் நீண்ட நாள் போக்கு எப்படி இருக்கும் ? அந்நிறுவனம் விற்கும் பொருட்கள் /சேவைகளுக்கு பின்னாட்களில் அதிகப்படியாக வரவேற்பு இருக்குமா? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு பதில் இருந்தால் முதலீடு செய்வார். சும்மா நண்பன் சொன்னான் என்பதற்காக பெயர் தெரியாத அந்த வடக்கத்திய பிளாஸ்டிக் மோல்டிங் நிறுவனத்தின் பங்கினை வாங்குதல் போல, தனக்கு தெரியாத விஷயங்களில் அவர் முதலீடு செய்வதில்லை. இதற்கு value investing என்று பெயர். இது பார்க்க பந்தாவாக இருந்தாலும் புரிந்து கொள்ளுதல் எளிது.

நீங்களும், நானும் எதை வாங்குகிறோம், எதை விடுகிறோம், எந்த நிறுவனத்தின் பொருட்களை எடுத்தாள்கிறோம் என்பதை கவனமாக கவனித்தாலே போதும். ஒரளவுக்கு ஐடியா கிடைத்துவிடும்.. இல்லையெனில் கூகிளில் போட்டு தேடுங்கள். தொலைந்து போகாமல் கற்றுக் கொள்ளலாம். பீட்டர் லின்ச் என்பவர் தான் இவ்வகையான முதலீட்டு வடிவத்தினை பிரபலப்படுத்தினார். இப்போதைக்கு, கையில் காசிருந்தால் வங்கி எப்.டியில் போட்டு விட்டு எம் டிவி பாருங்கள்.


”கல் தோன்றி மண் தோன்றா.... முன் தோன்றிய மூத்த தமிழ்” என பாக்டீரியாக்கள், அமீபாக்கள் உருவாகாத முன்னாலேயே ஒரு மொழி இருந்திருக்கிறது என்று சொல்லும் அபத்தம் புரியவில்லை. இதில் அபத்தத்தை விட அரசியலே அதிகமாய் இருக்கிறது என்பது அடியேன் எண்ணம். தொன்மையான இன்னமும் இருக்கிற மொழி என்கிற அளவில் அதற்குரிய மரியாதையினை கொடுக்கலாமேயொழிய, மொத்தத்துக்கும் தமிழே காரணம் என்பது தமிழர்களின் அளவிலா பேராசையின் வேறொரு முகம். விஷயத்துக்கு வருவோம்.

பிரியாணி தமிழ் உணவா அல்லது மொகலாயர் இந்தியாவுக்குள் கொண்டு நுழைத்த உணவா ? பெரும்பாலாலும் முகலாய உணவு என்று சொல்வது தான் வழக்கம். அங்கே தான் நீங்கள் வசமாக மாட்டிக் கொண்டீர்கள்? பிரியாணிக்கு சங்க இலக்கியத்தில் “ஊன் சோறு” என்று பெயர். போருக்கு கிளம்புமுன் நிறைய இறைச்சிகளோடு கலந்த சோற்றினை வீரர்களுக்கு அரசன் கொடுப்பார், போரில் தரப்போகும் வெற்றிக்கான அன்பு காணிக்கையாக. அது தான் ஊரெல்லாம் சுற்றி மீண்டும் மசாலாவோடும், சிக்கன், மட்டன், பீவ் என இறைச்சி சமாச்சாரங்கள் உள்ளூறி பிரியாணியாக இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இதை தான் செஃப் ஜேக்கப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சொல்லியிருகிறார். Interesting.

அப்போதைய ஊன் சோறோடு காம்போவாக பெப்சியோ, ஸ்ப்ரைட்டோ இருந்திருக்காது என்று இப்போதைக்கு நம்புகிறேன். யாருக்கு தெரியும், வேறு யாராவது கோலாவே கும்மிடிப்பூண்டி தாண்டி ஆண்ட ஒரு சிற்றரசன் காலத்திய பழச்சாறு என்று Ph.D பண்ணி சொல்லுவார்கள். காத்திருக்கலாம்.


கான்சிப்ரைசி தியரி என்று ஒன்று உண்டு. எது உலகத்தில் நடந்தாலும் அது பின்னாடி ஒரு மாபெரும் சதி திட்டம் இருக்கிறது என்பதை அக்குஅக்காக பிரித்து மேய்வார்கள். இந்தியா சந்திரயான் விட்டாலும், இன்னமும் அமெரிக்காவில் ஒரு கூட்டம், நாசா 1969இல் நிலவுக்கு விண்கலம் அனுப்பவேயி்ல்லை என்பதை போட்டோ ஆதாரங்களுடன் இணையத்தில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க டேபலாய்டுகளில் எப்படி பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக மனிதனுடன் உறவு, 40 குட்டி போட்ட பூனை என பேசி வருகிறார்களோ, அதே மாதிரி ஜிகினாத்தனங்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. அவரவர்க்கு அவரவர் நம்பிக்கைகள்.

சமீபத்தில் கேள்விப்பட்ட இம்மாதிரியான புரூடா. பொருளாதாரப் பிரச்சனை தானாக வந்ததல்ல. சில பல பெரிய மனிதர்களால் உண்டாக்கப்பட்டது. உலகெங்கிலும் டிரில்லியன் டாலர்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கு்ம் கறுப்பு பணத்தினையும், சில அரசாங்கங்களையும் கையில் போட்டுக் கொள்ள நடந்து கொண்டிருக்கும் நாடகமிது. இதன் மூலம் ஒவ்வொரு் நிறுவனத்தையும் பெயில் அவுட் செய்யும் போது பல பில்லியன் டாலர்களை வெள்ளையாக்கலாம், மேலும் அந்நிறுவனங்களை சில மனிதர்களின் கையில் கொண்டு வரலாம். இப்படி நீள்கிறது இந்த புராணம். ராபர்ட் ருட்லெம் (Robert Rudlum) என்கிற எழுத்தாளர் இந்தமாதிரி நிஜ சாயல் படும்படி திரில்லர் கதைகள் எழுதுவார். அவருக்கான அடுத்த கதைக்கான கருவினை இலவசமாக தருகிறேன்.


சனிமூலை என்று எந்த நேரத்தில் பெயரிட்டேனோ, அதற்குள்ளாகவே காப்பிரைட் பிரச்சனைகள் முதற்கொண்டு பேசியாகிவிட்டது. நண்பர்கள் ஏற்கனவே ’வடக்கு வாசலில்’ ராகவன் நம்பி சனி மூலை என்கிற பெயரில் எழுதுகிறார் என்று சொன்னார்கள். வேண்டுமானால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு, ”ஞாயிறுமூலை” அல்ல ”சூரியமூலை” என்று பெயரிடுங்களேன் என அட்வைஸ் வந்தது. இருக்கிற மீடியா தொடர்புகளில், நான் வேறு “சூரிய மூலை” என்று பெயர் வைத்தால், அவ்வளவுதான் சங்கதி. கதை முழுசாய் கந்தலாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.இப்போதைக்கு காப்பிரைட் பிரச்சனைகள் வந்தாலும் சனிமூலை என்றே தொடர்வோம். பின்னாளில் ஏதேனும் பெரும் பிரச்சனைகளில் வந்தால் வேறு பெயர் மாற்றுவதை பற்றி யோசிக்கலாம். அப்படியே வந்தால் ஏதேனும் எம்.எல்.ஏவினை கூப்பிட்டு பெயர் வைத்தால் பிரபலத்துக்கு பிரபலமும் ஆச்சு. யாரும் காப்பிரைட் பிரச்சனைகள் பற்றி வாயும் திறக்கமாட்டார்கள். ராகவன் நம்பியும், இதை எழுதத் தூண்டிய ரங்கராஜ நம்பியும் கோவித்து கொள்ள மாட்டார்களாக.

இந்த வார மேற்கோள்

”Historically, unusually strong increases in credit and asset prices have tended to precede banking crises”. - Quarterly Review of Bank of International Standards

இதை டாஸ்மாக் பாஷையில், எல்லா குடிக்கு பின்னாடியும் ஹாங் ஒவர் உண்டு என்று ”தெளிவாக” மொழிபெயர்க்கலாம்.

(அடுத்த வாரம் சந்திப்போம்)