சனிதோறும் ஒரு பத்தி

March 06, 2009

சனிமூலை - 001

இந்த வார (2-3-2009) ஆரம்பத்தில் பெரும் பணக்காரரான வாரன் பஃப்பெட் தான் சில தவறான முதலீடுகளை செய்ததாக அவருடைய பெர்க்‌ஷயர் ஹாத்வே நியுஸ்லெட்டரில் சொல்லியிருக்கிறார். நல்ல வேளையாக வாரன் தமிழராக இல்லை. “வழுக்கி விழுந்தார் வாரன் பஃப்பெட்” என எதுகை மோனையோடு அது தலைப்பு செய்தியாயிருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய பொருளாதார சிக்கலில், வாரன் பஃப்பெட்டேயிருந்தாலும், வழுக்கி தான் விழ வேண்டும் என்பது தான் நியதி.

இதற்கெல்லாம் அசராத கூட்டம் ஒன்று இருக்கிறது. இந்திய பங்குச் சந்தை அனலிஸ்டுகள்.

தொடர்ச்சியாக அவர்கள் சொல்லும் செய்திகள் படு தமாஷாக இருக்கும். இரண்டு நாள் பங்கு சந்தை ஏறினால், உடனே நான்கு அனலிஸ்டுகள் ’இதிலிருந்து இதற்குள்’ என ஏதேனும் ஒரு நம்பரை சொல்லுவார்கள். இறங்கினாலும் அதே கதை. இரண்டு அனலிஸ்டுகள் ஒரே மாதிரியான கருத்தினை சொன்னதாக சரித்திரமேயில்லை. உருப்படியாக ஒரு தீர்க்கமான தீர்வும் காணோம். நான்கு தமிழர்கள் ஒரிடத்தில் இருந்தால், ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றொறு அவதூறு உண்டு. அதை அனலிஸ்டுகளுக்கும் சேர்த்து கொள்ளலாம். நான்கு அனலிஸ்ட்கள் ஒன்றாக இருந்தால் ஆறிலிருந்து பத்துவகையான முடிவுகள்,ஒரே பங்குச்சந்தை, நிறுவன நிலவரங்களை வைத்துக் கொண்டே சொல்வார்கள். என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி, யு.டி.வி.ஐ என தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எதையாவது சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அதை பார்ப்பதற்கு பார்த்த காமெடியையே திருப்பி போட்டாலும் ஆதித்யா அல்லது சிரிப்பொலி பார்ப்பது பெட்டர்.

இந்திய பங்குச் சந்தையில் விளையாடுவது என்பது ஒரு பெரிய மைதானத்தில் ஆடும் ஆட்டம். கடந்த 6 மாத கால சராசரி பங்குகள் கைமாறியது என்கிற புள்ளிவிவரத்தினை எடுத்து பார்த்தால் நான் சொல்வது புரியும். வெளிநாட்டினர் முதலீடு செய்வதும், பின்பு திரும்ப எடுத்துக் கொள்வதுமாக, கிழவியின் சுருக்குப்பை காசினை குடிக்கார பேரன் எடுக்கும் கதையாய் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வாரன் பஃபெட் படித்தால், அவர் பங்குச்சந்தை டிக்கர்களை பார்க்கவே மாட்டார் என்பது புலப்படும். அவருடைய கவனிப்பு எல்லாம், ஒரு நிறுவனத்தின் நீண்ட நாள் போக்கு எப்படி இருக்கும் ? அந்நிறுவனம் விற்கும் பொருட்கள் /சேவைகளுக்கு பின்னாட்களில் அதிகப்படியாக வரவேற்பு இருக்குமா? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு பதில் இருந்தால் முதலீடு செய்வார். சும்மா நண்பன் சொன்னான் என்பதற்காக பெயர் தெரியாத அந்த வடக்கத்திய பிளாஸ்டிக் மோல்டிங் நிறுவனத்தின் பங்கினை வாங்குதல் போல, தனக்கு தெரியாத விஷயங்களில் அவர் முதலீடு செய்வதில்லை. இதற்கு value investing என்று பெயர். இது பார்க்க பந்தாவாக இருந்தாலும் புரிந்து கொள்ளுதல் எளிது.

நீங்களும், நானும் எதை வாங்குகிறோம், எதை விடுகிறோம், எந்த நிறுவனத்தின் பொருட்களை எடுத்தாள்கிறோம் என்பதை கவனமாக கவனித்தாலே போதும். ஒரளவுக்கு ஐடியா கிடைத்துவிடும்.. இல்லையெனில் கூகிளில் போட்டு தேடுங்கள். தொலைந்து போகாமல் கற்றுக் கொள்ளலாம். பீட்டர் லின்ச் என்பவர் தான் இவ்வகையான முதலீட்டு வடிவத்தினை பிரபலப்படுத்தினார். இப்போதைக்கு, கையில் காசிருந்தால் வங்கி எப்.டியில் போட்டு விட்டு எம் டிவி பாருங்கள்.


”கல் தோன்றி மண் தோன்றா.... முன் தோன்றிய மூத்த தமிழ்” என பாக்டீரியாக்கள், அமீபாக்கள் உருவாகாத முன்னாலேயே ஒரு மொழி இருந்திருக்கிறது என்று சொல்லும் அபத்தம் புரியவில்லை. இதில் அபத்தத்தை விட அரசியலே அதிகமாய் இருக்கிறது என்பது அடியேன் எண்ணம். தொன்மையான இன்னமும் இருக்கிற மொழி என்கிற அளவில் அதற்குரிய மரியாதையினை கொடுக்கலாமேயொழிய, மொத்தத்துக்கும் தமிழே காரணம் என்பது தமிழர்களின் அளவிலா பேராசையின் வேறொரு முகம். விஷயத்துக்கு வருவோம்.

பிரியாணி தமிழ் உணவா அல்லது மொகலாயர் இந்தியாவுக்குள் கொண்டு நுழைத்த உணவா ? பெரும்பாலாலும் முகலாய உணவு என்று சொல்வது தான் வழக்கம். அங்கே தான் நீங்கள் வசமாக மாட்டிக் கொண்டீர்கள்? பிரியாணிக்கு சங்க இலக்கியத்தில் “ஊன் சோறு” என்று பெயர். போருக்கு கிளம்புமுன் நிறைய இறைச்சிகளோடு கலந்த சோற்றினை வீரர்களுக்கு அரசன் கொடுப்பார், போரில் தரப்போகும் வெற்றிக்கான அன்பு காணிக்கையாக. அது தான் ஊரெல்லாம் சுற்றி மீண்டும் மசாலாவோடும், சிக்கன், மட்டன், பீவ் என இறைச்சி சமாச்சாரங்கள் உள்ளூறி பிரியாணியாக இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இதை தான் செஃப் ஜேக்கப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சொல்லியிருகிறார். Interesting.

அப்போதைய ஊன் சோறோடு காம்போவாக பெப்சியோ, ஸ்ப்ரைட்டோ இருந்திருக்காது என்று இப்போதைக்கு நம்புகிறேன். யாருக்கு தெரியும், வேறு யாராவது கோலாவே கும்மிடிப்பூண்டி தாண்டி ஆண்ட ஒரு சிற்றரசன் காலத்திய பழச்சாறு என்று Ph.D பண்ணி சொல்லுவார்கள். காத்திருக்கலாம்.


கான்சிப்ரைசி தியரி என்று ஒன்று உண்டு. எது உலகத்தில் நடந்தாலும் அது பின்னாடி ஒரு மாபெரும் சதி திட்டம் இருக்கிறது என்பதை அக்குஅக்காக பிரித்து மேய்வார்கள். இந்தியா சந்திரயான் விட்டாலும், இன்னமும் அமெரிக்காவில் ஒரு கூட்டம், நாசா 1969இல் நிலவுக்கு விண்கலம் அனுப்பவேயி்ல்லை என்பதை போட்டோ ஆதாரங்களுடன் இணையத்தில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க டேபலாய்டுகளில் எப்படி பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக மனிதனுடன் உறவு, 40 குட்டி போட்ட பூனை என பேசி வருகிறார்களோ, அதே மாதிரி ஜிகினாத்தனங்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. அவரவர்க்கு அவரவர் நம்பிக்கைகள்.

சமீபத்தில் கேள்விப்பட்ட இம்மாதிரியான புரூடா. பொருளாதாரப் பிரச்சனை தானாக வந்ததல்ல. சில பல பெரிய மனிதர்களால் உண்டாக்கப்பட்டது. உலகெங்கிலும் டிரில்லியன் டாலர்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கு்ம் கறுப்பு பணத்தினையும், சில அரசாங்கங்களையும் கையில் போட்டுக் கொள்ள நடந்து கொண்டிருக்கும் நாடகமிது. இதன் மூலம் ஒவ்வொரு் நிறுவனத்தையும் பெயில் அவுட் செய்யும் போது பல பில்லியன் டாலர்களை வெள்ளையாக்கலாம், மேலும் அந்நிறுவனங்களை சில மனிதர்களின் கையில் கொண்டு வரலாம். இப்படி நீள்கிறது இந்த புராணம். ராபர்ட் ருட்லெம் (Robert Rudlum) என்கிற எழுத்தாளர் இந்தமாதிரி நிஜ சாயல் படும்படி திரில்லர் கதைகள் எழுதுவார். அவருக்கான அடுத்த கதைக்கான கருவினை இலவசமாக தருகிறேன்.


சனிமூலை என்று எந்த நேரத்தில் பெயரிட்டேனோ, அதற்குள்ளாகவே காப்பிரைட் பிரச்சனைகள் முதற்கொண்டு பேசியாகிவிட்டது. நண்பர்கள் ஏற்கனவே ’வடக்கு வாசலில்’ ராகவன் நம்பி சனி மூலை என்கிற பெயரில் எழுதுகிறார் என்று சொன்னார்கள். வேண்டுமானால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு, ”ஞாயிறுமூலை” அல்ல ”சூரியமூலை” என்று பெயரிடுங்களேன் என அட்வைஸ் வந்தது. இருக்கிற மீடியா தொடர்புகளில், நான் வேறு “சூரிய மூலை” என்று பெயர் வைத்தால், அவ்வளவுதான் சங்கதி. கதை முழுசாய் கந்தலாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.இப்போதைக்கு காப்பிரைட் பிரச்சனைகள் வந்தாலும் சனிமூலை என்றே தொடர்வோம். பின்னாளில் ஏதேனும் பெரும் பிரச்சனைகளில் வந்தால் வேறு பெயர் மாற்றுவதை பற்றி யோசிக்கலாம். அப்படியே வந்தால் ஏதேனும் எம்.எல்.ஏவினை கூப்பிட்டு பெயர் வைத்தால் பிரபலத்துக்கு பிரபலமும் ஆச்சு. யாரும் காப்பிரைட் பிரச்சனைகள் பற்றி வாயும் திறக்கமாட்டார்கள். ராகவன் நம்பியும், இதை எழுதத் தூண்டிய ரங்கராஜ நம்பியும் கோவித்து கொள்ள மாட்டார்களாக.

இந்த வார மேற்கோள்

”Historically, unusually strong increases in credit and asset prices have tended to precede banking crises”. - Quarterly Review of Bank of International Standards

இதை டாஸ்மாக் பாஷையில், எல்லா குடிக்கு பின்னாடியும் ஹாங் ஒவர் உண்டு என்று ”தெளிவாக” மொழிபெயர்க்கலாம்.

(அடுத்த வாரம் சந்திப்போம்)

8 comments:

  1. Nice start. Nicer tail piece. Vathiyaar paani thookkal :)

    ReplyDelete
  2. சங்கர் சொன்னபடி, நிறைய 'வாத்தியார்' வாசனை அடிக்குது, ஆனால், மேட்டர் சூப்பர், பயனுள்ள தகவல்கள் - கற்றதும் பெற்றதும் ;-)

    வாத்தியார் "நினைவு கூரல்" என்பதால், ஓக்கே தான் :)
    I think it is Robert Ludlum (not Rudlum)

    http://en.wikipedia.org/wiki/Robert_Ludlum

    எ.அ.பாலா

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதவும் !

    ReplyDelete
  4. ஒப்பீடு கூடாதுதான்.. இருந்தாலும் தொன்றிய திருப்தியை மறைக்கமுடியவில்லை :-)

    ReplyDelete
  5. அவர் பெயர் Robert Ludlum, இறந்து நாலு வருடங்கள் இருக்கும்.

    ReplyDelete
  6. தொடக்கமே நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

    Robert Ludlum தான் conspiracy நிறைய எழுதுவார், சுஜாதா சார் பக்கத்தில் அமர்ந்திருக்கக் கூடும் (2001ல் மறைந்தாராம்).

    ReplyDelete
  7. வாத்தியார் ஸ்டைலில் வந்திருக்கு, வாழ்த்துக்கள். As others have pointed out, it is Robert Ludlum, who is no more.

    ReplyDelete
  8. காப்பிரைட் பிரச்னை எல்லாம் தரமாட்டேன் தோழரே. நீ்ங்கள் தொடருங்கள். ஒரு வேண்டுகோள். என் பெயர் ராகவன் நம்பி அல்ல. ராகவன் தம்பி.

    பென்னேஸ்வரன் என்ற என் இயற்பெயரை தொலைபேசியில் யாருக்காவது சொன்னால் அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு "சனீஸ்வரனா?" என்று எட்டு ஊருக்குக் கேட்கும் வண்ணம் கத்துவார்கள்.

    ராகவன் தம்பி என்று பெயர் வைத்துக் கொண்டால் அதையும் ராகவன் நம்பி என்று போட்டுத் தள்ளுகிறீர்களே.

    ஒரு விஷயம். நீங்கள் எம்எல்ஏவைக் கூப்பிடப் போகிறீர்கள் என்பதற்காக பயந்து இந்தக் குறிப்பை எழுதவில்லை.

    சனிமூலை என்ற பெயர் என் சொத்து கிடையாது என்பதனாலும் நன்றாக எழுதுகிறீர்கள் என்பதாலும் சற்று மகிழந்து இந்தப் பின்னூட்டம்.

    மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    ராகவன் தம்பி

    ReplyDelete