சனிதோறும் ஒரு பத்தி

April 17, 2009

சனிமூலை - 007

என்னுடைய வீட்டில், என்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் நான் தான் தங்க வழிகாட்டி. தங்குவதற்கான வழிகாட்டி அல்ல. தங்கத்திற்கான.

தங்கம். இந்திய பெண்களின் இன்றியமையாத இன்னொரு விஷயம். கல்லூரி படிக்கும் போது கலந்து கொண்ட ஒரு தெலுகு கல்யாணத்தில் உலாத்திய பெண்களோடு, அந்த மண்டபத்தினை ஹை-ஜாக் பண்ணியிருந்தால், வடகிழக்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தின் பாதி பட்ஜெட்டினை ஒப்பேத்தியிருக்கலாம். பெண்கள் மட்டுமல்லாமல், தாதாக்கள், அரசியல்வாதிகள், டூபாக்கூர் தொழிலதிபர்கள் போன்ற ஷோ பேர்வழிகளுக்கான முக்கியமான சமாச்சாரம்.

வழிகாட்டி என்றால், எப்போது தங்கம் ஏறும், எப்போது தங்கம் இறங்கும் என்று ஒரளவுக்கு சொல்லக்கூடிய திறமை கொஞ்சுண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதை திறமை என்று சொல்வதை விட, இது உலக சந்தைகளை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய அடிப்படை அறிவு. இனி தங்கம் ஏறுமா ? ஏறாதா?

இனி தங்கம் இறங்கும். ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் ஐ.எம்.எப்பின் இருப்பிலிருந்து 400 டன் தங்கத்தினை விற்க சொல்லியிருக்கிறார்கள். காற்றில் கணக்குப் போடாதீர்கள். ஒரு டன் தங்கம் இன்றைய விலையில் ஜஸ்ட் ரூ.144 கோடி மட்டுமே. 400 டன் எவ்வளவு என்பதை கணக்குப் போட்டு ஈனோ குடிக்காதீர்கள். அது நமக்கு தேவையில்லை. இந்தியா ஒரு தங்க இறக்குமதி நாடு. நாம் தொடர்ச்சியாக தங்கத்தினை இறக்குமதி செய்து கொண்டே இருப்போம். ஆனால் பிப்ரவரி, மார்சில் ஒரே ஒரு கிராம் தங்கம் கூட இறக்குமதி செய்யவில்லை. மாறாக, விலை கூடியவுடன், புத்திசாலியான நம்மாட்கள், தங்கத்தினை விற்க ஆரம்பித்தார்கள். முட்டாள் ஐரோப்பிய நாடுகள், ஏறும் தங்கம் தான், நிதி சீர்குலைவு, பொருளாதார மந்தநிலைக்கு எதிரான மாற்று என்று நினைத்து வாங்க ஆரம்பித்தார்கள். இந்தியா மற்றும் மத்திய கிழக்கினை தவிர வேறு யாரும் ஆபரண தங்கத்தினை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில்லை. ஆக இந்தியா வாங்கவில்லையென்றால், உலகமெங்கும் தங்கம் காற்று வாங்கும்.

மேலும், இந்த எவரெஸ்ட் உயரத்திற்கு காரணம், மத்திய வங்கிகள் உலகெங்கிலும், நிதி சீர்குலைவு ஏற்பட்டவுடன், உஷார் பத்ரி ரைடாக, தங்கத்தினை வாங்கி முடக்கி விட்டார்கள். அதனால் வரத்து குறைந்தது. தேவை அதிகம், ஆனால் சப்ளே குறைவு என்றால் அது சிம்பள் பொருளாதார வீக்கத்தினை உண்டாக்கும். சவரன் 8000ரூபாய்க்கு போய் கொண்டிருந்தது கடந்த ஒன்றரையாண்டுகளில் உயர்ந்து 12-13,000க்கு எகிறியதற்கு இது தான் காரணம். இப்போதைய நிலையே கூட இன்னமும் உயர்நிலையில் தான் இருக்கிறது. கொஞ்ச காலம் போனால் வாங்கும் நிலைக்கு வரும்.

இப்போதைக்கு, தங்கம் வாங்க வேண்டுமென்ற எண்ணங்கள் இருந்தால், கொஞ்ச காலம் ஐபிஎல்லும், உலக டி-20 கிரிக்கெட்டும் பார்த்து முடித்துவிட்டு ஜி.ஆர்.டிக்கு வண்டியினை எடுங்கள்.






கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது. இது அரசியல் வசனமில்லை. சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வுகள்.

2008-இன் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு தோழி என்னிடத்தில் கொடுத்த புத்தகம் தான் இது. Sadako and the Thousand Paper Cranes by Eleanor Coerr சிறிய குழந்தைகளுக்கான புத்தகம். சடாகோ என்கிற ஒரு குட்டிப்பெண்ணின் உண்மைக்கதை. குட்டியாய் 80 பக்கங்கள். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வுகள் ஏராளம்.

சசாகி சடாகோ ஜப்பானில் 1943ல் பிறந்து 1955-இல் தன்னுடைய பன்னிரண்டு வயதில் ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டால் ஏற்பட்ட கதிர்வீச்சால் உயிர் இழந்த குழந்தை. வாழ்க்கையில் ஒட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்று நினைத்த பெண். அவளுடைய தோழி சிசுகோ. கதிர்வீச்சின் பாதிப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, சிசுகோ அவளுக்கு ஒரு தங்க பேப்பரானாலான ஒரு கொக்கினை செய்து கொடுத்தாள். ஒரிகமி என்பது மிகப் பிரபலமான ஜப்பானிய கலாச்சார பொழுதுபோக்கு. பேப்பரில் பல உருவங்களை ஒரிகமியில் செய்ய முடியும். ஆயிரம் கொக்குகள் ஒரு நோயாளி செய்தால், வலி, வேதனை, வியாதி எல்லாம் பறந்துவிடும் என்பது ஒரு ஜப்பானிய ஐதீகம்.

வெகு சூட்டிகையாக, ஒடியாடிக் கொண்டிருந்த சடாகோ, சடாலென மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாக ஆனாள். ஆனாலும், நம்பிக்கை தளராமல், பேப்பரில் கொக்கு செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக கொக்கு செய்ய ஆரம்பித்தாள். அக்டோபர் 25, 1955இல் சடாகோ இறந்து போனாள். அவள் இறக்கும்போது அவள் செய்த மொத்த கொக்குகளின் எண்ணிக்கை 644. அவளின் வகுப்பிலிருந்த குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மீதமிருக்கிற 356 கொக்குகளை செய்து அவளோடு புதைத்தார்கள். கணக்கு சரியாக போனது - ஆயிரம் கொக்குகள்.

அவள் இறந்த பிறகு அவளின் வகுப்பு நண்பர்கள் அவள் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவளின் டைரி போன்றவற்றினை தொகுத்து ‘ககோஷி (Kakoshi)' என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஜப்பானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து நிதி திரட்டி, 1958-இல் அவளின் சிலையினை ஹிரோஷிமா அமைதி பூங்காவில் திறந்தார்கள். சடாகோவின் சிலையின் கீழ் இன்றும் ஆகஸ்ட் -6இல் எல்லோரும் பேப்பர் கொக்குகளை வைக்கிறார்கள். அது அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.சடாகோவின் சிலையின் கீழே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

This is our cry,
this is our prayer;
peace in the world.

போர் என்பது மிக மோசமான விஷயம். இந்தியாவில் கற்பிக்கப்படும் வரலாறு இன்னமும், “இவர் அவரை போரில் வீழ்த்தினார்” “அவர் இவரை போரில் வெற்றிக் கொண்டு, சாம்ராஜ்யத்தினை விரிவு செய்தார்” என்கிற அளவில் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வெற்றி என்பது எது என்று அசோகனுக்கு ஒரு புத்த பிட்சு சொன்னது வெறுமனே ஸ்டேஜ் ட்ராமா போட தான் உதவியிருக்கிறது. வரலாற்றினை இன்னமும் நாம் சரியாக கற்றுக் கொள்ளவில்லை அல்லது கற்றுக் கொடுக்கத் தெரியவில்லை என்பது தான் இன்றைக்கும் மேலோங்கியிருக்கிறது. வெற்றி என்பது அடுத்தவரின் தோல்வியிலிருந்து வருவதல்ல. அது உள்ளிருந்து வருவது. தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வது. தன்னை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்து பாடம் கற்பது. அனுபவங்களை உள்ளிழுப்பது. அடுத்தவரை கொல்வதல்ல.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் யாராவது இதன் உரிமம் பெற்று தமிழில் வெளியிடலாம். குழந்தைகளுக்கு ஏற்றாற் போல நடை. பெரிய எழுத்து புத்தகம். பென்குவின்புட்னம் என்கிற நியுயார்கில் இருக்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.



RPG குழுமத்திலிருந்து Open என்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கை வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியா டுடே, அவுட்லுக், வீக் போன்றவைகளின் தளத்திலேயே இதுவும் இருக்கிறது. கீழே குறிப்பிடுள்ள மேற்கோள் ’ஒபன்’ பத்திரிக்கையின் முதல் இதழில் வந்த கட்டுரையில் வந்தது. இந்தியாவில் இணைய இணைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பேப்பரில் அச்சடித்து வரும் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் வாங்குவதில் சில பல ஆபத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில் RPG குழுமம் இப்பத்திரிக்கையினை தொடங்கியிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்.

இதே மாதிரி முந்தாநாள் ’பாரிஸ்தா’வில் உட்கார்ந்து கொண்டு பொழுது போகாமல் முன்னால் உட்கார்ந்திருந்த பெண்ணினைப் பார்த்துக் கொண்டே (டார்க் புளு ஜீன்ஸுக்கு பிங் குர்தா, நன்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றியது) இந்தியா டுடே புரட்டினால், மிருணாள் சென் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரித்விக் கட்டக், மிருணாள் சென் கடைசியாக சத்யஜித் ரே என்கிற வரிசையில் தான் நான் ஆரம்பகாலத்தில் படங்கள் பார்த்தேன்.

வங்காள திரை பிதாமகர்கள் வரிசையில் மிருணாள் சென்னுக்கு ஒரு தனியிடமிருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் கான்ஸ் திரை விழாவில் திரையிட சென்னின் 1970களின் கல்கத்தாவினை பிண்ணணியாகக் கொண்ட மூன்று படங்களை கேட்டிருந்தார்கள். இண்டர்வியு, கல்கத்தா 71 மற்றும் படாதிக். ஆனால் அந்த படங்களின் பிரிண்ட் படு மோசமாக இருந்ததால் கைவிடப்பட்டது. வெறுத்துப் போய் “நான் சாகும் போது, என் படங்களும் மறைந்து போகும்” என புலம்பி தள்ளியிருக்கிறார். இது ஒரு மகா மோசமான விஷயம்.

மே.வங்காளத்திலிருந்து வந்து பாலிவுட்டினை கலங்கடித்து கொண்டிருக்கும் பிபாசா பாசு, சுஷ்மிதா சென், ரீயா சென் போன்றவர்களில் ஆரம்பித்து பல்வேறு நபர்கள் வங்காள சினிமாவிற்கு கடமைப்பட்டுள்ளார்கள். இது தவிர, தேசிய பட வளர்ச்சி கார்ப்பரேஷனுக்கு இதை விட வேறு என்ன வேலை இருக்க முடியும்? அமிதாப் பச்சனின் மெழுகு சிலையினை ஹாங்காங்கில் வைப்பதற்கு காட்டும் அக்கறையில் அரை பங்காவது, நம்மிடையே இன்னமும் இருக்கும் திரைச்சிற்பிகளை காப்பதில் நமக்கில்லை. நல்ல வேளையாக, தமிழ்நாட்டினை திரையுலகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆண்டு வருவதால், ஜி.என்.செட்டி சாலையில் போட்டிருக்கும் மேம்பாலத்திற்கு, கலைவாணர் மேம்பாலம் என்று பெயர் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் என்.எஸ்.கே என்றால் பட்டணம் பொடி பெயரா என்று நாளைய சந்ததியினர்கள் கேட்பார்கள்.

இந்தியர்களான நமக்கு நம்முடைய பாரம்பரியத்தினை காப்பதில் இருக்கும் அலாதி அக்கறை சொல்லி மாளாது. இந்தியாவின் எல்லா மியுசியங்களும் காலியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் செலவு குறைவான கல்விச்சுற்றுலா தலமாக தான் பிரபலப் படுத்தியிருக்கிறோமே தவிர அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியதுப் போல தெரியவில்லை. வங்காள சினிமாவினை நேசிப்பவர்கள் யாராவது இருந்தால் புத்ததேவ் பட்டாச்சார்யா / மம்தா பானர்ஜி வகையறாக்களில் யாராவது ஒருவரிடம், தாகூர் மாதிரியான ஒரு ஆள் இன்னமும் உங்களூரில் உயிரோடு இருக்கிறான், அவனை சரியான பாதுகாத்து வையுங்கள் என்று பெங்காலியில் உரக்கச் சொல்லுங்கள்.

இந்த வார மேற்கோள்

நஸ்ரூத்தின் ஷா "ஒபன்” பத்திரிக்கையில் கலைப்படங்கள் எடுப்பதுப் பற்றி
“sign me up, borrow funds from NFDC claiming to make realistic cinema, use indoor shots to save money, producer and I split the remaining cash"

1 comment:

  1. http://www.vadakkuvaasal.com/article.php?id=277&issue=55&category=11 ரங்கராஜ நம்பி பற்றித் தெரியாது. நான் எதுக்குக் கோபித்துக் கொள்ள வேண்டும்? வேண்டுமென்றால் நாராயணன் ஆசைப்பட்டதற்காக சின்னதாக ஒரு கோபம் கொள்ளலாம். ராகவன் தம்பியை ராகவன் நம்பியாகப் பெயர் மாற்றம் செய்ததற்குக் கொஞ்சமாகக் கோபித்துக் கொள்ளலாம்.
    பென்னேஸ்வரன் என்கிற பெயர் சில இடங்களில் பல பிரச்னைகளைக் கொடுத்ததால் ராகவன் தம்பி என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். மேலும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபோது சொந்தப் பெயரில் எழுதி எதற்கு வம்பு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று புனைபெயரில் எழுதத் துவங்கினேன். அரசாங்க உத்தியோகத்தை உதறிவிட்டு இப்போது விருதாவாக சுற்றும் போதும் அதே பெயரில் எழுதலாம் என்று தொடர்ந்தேன். இப்போது அந்தப் பெயரும் கொஞ்சம் கஷ்டப்படுகிறது. பரவாயில்லை. இதுவெல்லாம் பழகிப்போன விஷயம்தான்.

    ReplyDelete