சனிதோறும் ஒரு பத்தி

April 11, 2009

சனிமூலை - 006

வேளச்சேரி கான்கார்ட் மோட்டார்ஸில் டாடா நானோ பார்க்க கியு நிற்கிறது. நல்ல விஷயம்தான். இந்த மாதிரி ஒரு பொருளுக்கான கியுக்களை ஆப்பிளின் ஸ்டோர்களில் ஒவ்வொரு மேக் கருத்தரங்கு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் புது பொருளுக்காக பார்க்க முடியும். “ஹமாரா பஜாஜ்”-க்கு பிறகு, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வாகனத்திற்காக முண்டியடிப்பது டாடா நேனோவாகதான் இருக்க முடியும்.

டாடா நேனோ வெறுமனே ஒரு வாகனமாக பார்க்க முடியாது. இதை ஒரு புது தலைமுறையாக பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 1991-இல் இந்தியா பொருளாதார சீரமைப்பினை ஆரம்பித்து 17 வருடங்கள் ஆன நிலையில், இது இரண்டாம் கட்ட சீரமைப்பின் ஆரம்பமாக தோன்றுகிறது.

1992-இல் நாம் உலக நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தோம். அன்னிய பொருட்களை இஷ்டத்திற்கு உபயோகப் படுத்தினோம்.2009-இல் இந்தியாவிலிருந்து உலகத்திற்கு பொருட்களை அனுப்ப ஆயத்தமாகிறோம். இந்திய சந்தைக்காக பொருட்கள் தயாராகின்றன. இது ஒரு முக்கியமான திருப்பம். இதை சீராக செய்ய நமக்கு இன்னமும் இரண்டு தசாம்சங்கள் ஆகலாம்.பரவாயில்லை.

எகனாமிக் டைமிஸில் சி.கே. பிரகலாத் “டாடா நேனோ” மாதிரியான பிற விஷயங்களின் மீதான ஒரு பார்வையினை வைக்கிறார். அவரின் Fortune at the Bottom of the Pyramid ஒரு முக்கியமான மாற்றுப் பார்வையினை முன் வைக்கிற புத்தகம். டாடா குழுமத்திற்கு அவர் ஆலோசகர். அவரின் ஆலோசனையின் பேரில் தான் ஜிஞ்சர் ஹோட்டல் வந்தது.

டாடா நேனோ, ஜிஞ்சர் ஹோட்டல்,அரவிந்தன் அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய செல்பேசி துறை, இணைய சேவை போன்றவைகள் முக்கியமான திருப்புமுனைகள். மிகவும் குறைந்த விலையில், தரமான, மக்களின் வாங்குதல் சக்திக்கு உள்ளே அடங்கக்கூடிய பொருட்களையும், சேவைகளையும் சந்தைப்படுத்தினால், அதன் பிரதிபலன்கள் பல மடங்கு போகக்கூடியவை. இந்திய தொலைப்பேசி துறை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ரூ.16க்கு ஒருவரிடம் பேச தலைப்பட்ட நாம், இன்றைக்கு 10 பைசா அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் செல்பேசி துறை உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறை. இவ்வளவு பொருளாதார மந்தங்கள் நிலவிய போதிலும், செல்பேசி துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் செல்பேசி வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறார்கள்.

வெறுமனே முதலாளித்துவம் (Capitalism) என்பது போய், இன்றைக்கு சமூக முதலாளித்துவம் (Social Capitalism) என்பது குறைவாக, ஆனால் தீர்க்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில் நடத்துவது வெறும் லாபத்திற்காக மட்டுமே என்கிற பழைய முதலாளித்துவ சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியிருக்கிறது. சமூக தொழில்முனைவோர்கள் (Social Entrepreneurs) என்றழைத்துக் கொள்ள விரும்பும் ஒரு பகுதியினர், சமூகத்தின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்து இருக்கிறார்கள்.

வழக்கமான தன்னார்வல நிறுவனங்கள் என்றழைக்கப்படும் நிறுவனங்களுக்கு பெரியதான தொலைநோக்கு பார்வைகள் கிடையாது. அவர்கள் இன்னமும் அன்பளிப்பினை வைத்துக் கொண்டு காலத்தினை ஒட்டுகிறார்கள், இது ஒரு குறைப்பார்வை. முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான விஷயம், லாபம், அந்த லாபம் எப்படி கிடைக்குமென்றால், தரமான பொருள்/சேவையினை, குறைவான விலையில் அளிப்பது. அந்த நோக்கத்தையும், தன்னார்வ நிறுவனத்தினை சமூக நலனையும் காக்டெயிலாக்கினால் வரும் கலவை தான் இன்றைக்கு மெதுவாக பரவியிருப்பது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.


சென்னை சாந்தோம் கடற்கரை. கடந்த மூன்று மாதங்களாக சன் டிவியில் ஞாயிறு மாலை போடப்படும் டப்பா படங்களை தவிர்ப்பதற்காகவே என்னுடைய தங்கை மகளை கூட்டிக் கொண்டு, அலையில் காலாற நடக்கிறேன். எல்லா வகையான மக்களும், காலை அலை நனைப்பதை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. என் தங்கை மகளின் மிக முக்கியமான பொழுதுபோக்கை இப்போது ஞாயிறு மாலை, கடலலையில் தொப்பலாக நனைவது. நிற்பது, ஒடுவது, குதிப்பது, பேரலைகள் வரும்போது கைப்பற்றி தடுமாறுவது என உப்புத் தண்ணீர் உள்ளே போக விளையாடுகிறாள்.

சென்னை கடற்கரை ஒரு முக்கியமான ரிலீப் பாயிண்ட். புல்லாங்குழல் விற்பவர்கள் ஏர் டெல்லின் சிக்னேச்சர் ட்யூனை வாசிக்கிறார்கள்.என் காலத்தில் ஏதாவது சினிமா பாட்டு தான் புல்லாங்குழலில் ஹம் செய்யப்படும். ரங்கராட்டினம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடல், மாங்காய், சுண்டல், பஜ்ஜி, வறுத்த சோளம், பானிப்பூரி என சகலமும் ரூ.10-15க்குள் ஆகிறது. தண்ணீர் பாக்கெட் காலையில் ரூ.1 ஆகவும், மாலையில் ரூ.1.25 - 1.50 ஆகவும் இருக்கிறது.Discretionary Pricing. எல்லாவகையான மக்களுக்கும் கடலின் மீது ஒரு காதல் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என எல்லாரும் அலையில் கால் நனைக்கிறார்கள். மிரள்கிறார்கள். கூட்டமாக சிரிக்கிறார்கள். கொஞ்சம் தைரியமான பெண்கள், சுடிதார் நனைய உட்காருகிறார்கள். ஆண்கள், காலாடை சகிதம் ”சீன்” காட்டவாவது கொஞ்சமாய் கடலுக்குள் போகிறார்கள். ஒரு மணிக்கு ஒரு தடவை குதிரையில் வரும் போலீஸ்காரர்கள், மக்களை உள்ளே செல்லாமல் இருக்குமாறு எச்சரிக்கிறார்கள்.

சின்ன குழந்தைகள் வால்ஸ் ஐஸ்கீரிம் குச்சி ஐஸ் சாப்பிட்டு, மணலில் வீடு கட்டி, அந்த குச்சியினை கொடி கம்பம் போல் மேலே செருகுகிறார்கள். காதலர்கள் துப்பட்டா சகிதம், முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மணலில் நிறைய பாஸ்ட் புட் சென்டர்கள். வஞ்சிரம் மீன் (பெரியது) ரூ.60க்கு காரசாரமாய் கிடைக்கிறது. காரினுள் பியரிடித்து விட்டு, மேல்தட்டு மக்கள் சிக்கன் நூடுல்ஸும், மீனுமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளீல்லாத, பெண் கிடைக்காத கும்பல்கள், வட்டமாக உட்கார்ந்து கொண்டு “ங்கோத்தா, போன வாரம் என் பிகரை ஒருத்தன் ஒரம் கட்டிட்டான். அவனை எப்படியாவது கழட்டிருன்னும்டா” என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது வட்டமாய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு மட்டும் கேட்குமளவிற்கு கெட்ட வார்த்தை கானா பாடுகிறார்கள். இளந்தாய்மார்கள் குழந்தையினை பார்ப்பதும், கணவன் எங்கே பார்க்கிறான் என்று கண்காணிப்பதுமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் வாக்கிங் போகிறார்கள். அவர்களின் சிரிப்பிலும், அலைகள் கால் நனைக்கும்போது விரியும் குழந்தைகளின் கன்னக்குழிகளிலும் தான் நிஜமான சந்தோஷத்தினை பார்க்க முடிகிறது.

சென்னை மாதிரியான தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு மெட்ரோபொலிஸில் குழந்தைகளுக்கு விளையாட சரியான இடங்கள், வாய்ப்புகள் இல்லை. சதா போகோவும், ஜெட்டெக்சும் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள், அப்பாவின் மடிக்கணினியில் விளையாடும் குழந்தைகள் என எல்லா வகையுமான குழந்தைகளை கடந்த ஆறு ஆண்டுகளாக மிக நெருக்கமாக பார்த்து வருகிறேன். இன்றைய குழந்தைகளுக்கு physical விளையாட்டுகள் என்பதே எதுவுமில்லை.

நான் எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். இன்றைக்கும் பீச் கிரிக்கெட் என்றழைக்கப்படும் கடற்கரை மணலில் டென்னிஸ் பாலில் ஆடும் கிரிக்கெட்டினை கர்ம சிரத்தையாக ஞாயிறு காலை ஆடி வருகிறேன். நான் நடு ரோட்டில், மொட்டை மாடியில், சுடுகாட்டில், மூத்திர சந்தில், கால்வாய் ஒரங்களில், கொண்டித்தோப்பு போலீஸ் லைன் பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்கும் மைதானமென்று சொல்லமுடியாத ஒரு மைதானத்தில் என எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். விளையாட்டு பதின்ம பருவத்தில் மிக முக்கியம், படிப்பை விட.

நகரமயமாக்குதலின் மிக முக்கியமான இழப்பு குழந்தைகளின் விளையாட்டு என்று தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒற்றை குழந்தை மனநிலையில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகக் கூடிய சூழலில், ஒரு குழந்தையின் இயற்கையான விளையாட்டுத்தனம் மழுங்கடிக்கப்படுகிறது. என்னுடைய சட்டையிலெலெலாம் இங்க் கறை இல்லாமல் ஒரு நாளும் வீட்டிற்கு வந்ததில்லை. இன்றைய குழந்தைகள் பென்சில், ரப்பர் தொலைத்தாலோ, வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டூவீலரில் ஒற்றை செருப்பினை தொலைத்தாலோ அந்த குழந்தை வாங்கும் வசவுகள் சொல்லி மாளாது. நாம் எல்லோரும், நம் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்து வைக்கிறோம், சேர்த்து வைக்கிறோம் என்று பணத்தினை குறியாக கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்கள் தான் இன்னமும் வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதாக படுகிறது.

ஐம்பது வயதில் நீங்கள் சாதித்து எல்லாம் பெரியதாக தோனாது. மைலாப்பூர் கற்பாங்காம்பாள் மெஸ்ஸின் கதம்ப சாதத்திற்கும், கடற்கரையின் உப்பு தோயந்த மக்காசோளத்திற்காகவும் உடலும், மனதும் ஏங்க ஆரம்பிக்கும். காசோ, பணமோ, அதிகாரமோ, பெண்ணோ,பொரு்ளோ அன்றைக்கு பெரியதாக தோன்றாது என்று தோன்றுகிறது. வாழ்வின் சுவை என்பது பெரிய வெற்றிகளில் இல்லை. சின்னச் சின்ன சந்தோஷங்களிலும், குட்டி தோல்விகளிலும் தான் இருக்கிறது. Simple Living is Better Living.


ராஜா ஜேசுதாஸ் செல்லையா. வயது 87. ஏப்ரல் 7ஆம் தேதி மறைந்து போனார்.

யாரிவர்?

சினிமா நடிகரோ, அரசியல்வாதியோ, சமூக சேவகரோ, உள்ளூர் தாதாவோ, தொழிலதிபரோ கிடையாது. அவர் ஒரு பொருளாதார நிபுணர். 2007-இல் பத்ம விபுஷன் பெற்றவர். நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்து 1991-இல் இந்தியாவின் பொருளாதார அமைப்பினை உலகமையமாக்க செய்ய அமைக்கப்பட்டிருந்த குழுவில் ராஜா செல்லையா ஒரு முக்கியமானவர்.

ராஜா செல்லையா தான் இன்றைக்கு ஒரளவிற்கு சுலபமாக இருக்கக்கூடிய இந்திய வரிச்சட்டங்களின் பிதாமகர். லைசன்ஸ் ராஜ்ஜியத்தில் இஷ்டப்படிக்கு எழுதப்பட்டிருந்த வரிச்சட்டங்களை, தனி நபர் குழு அமைத்து, அதனை மொத்தமும் படித்து, மாறி வரக்கூடிய உலகச் சூழலுக்கு ஏற்றாற் போல, மாற்றிய பெருமை ராஜா செல்லையாவைதான் சேரும். செல்லையாவின் அறிக்கை தான் மன்மோகன் சிங் பல்வேறு வரி ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டு வர உதவியது.

கஸ்டம்ஸ் வரி 200% இருந்ததை குறைத்தது; 40% மட்டுமே தனியார் மற்றும் நிறுவனங்களின் உச்சக்கட்ட வரியாக இருக்கும் என்று நிர்ணயித்தது; 200-300% சில பொருட்களுக்கு இறக்குமதி வரி இருந்ததை சீரமைத்தது; மாட் வேட் என்றழைக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியின் அடிப்படையினை நிர்மாணித்தது; சேவை வரி என்ற ஒன்றினை கொண்டு வந்தது (சேவை வரி தான் இன்றைக்கு இந்திய அரசுக்கு மிக அதிகப்பட்ச வருவாயினை தரக்கூடிய மறைமுக வரிவிதிப்பு) என அவரின் பங்களிப்பினால் தான் இன்றைக்கு 2009-இல் பா.ஜ.க குறைந்தபட்சம் 3 இலட்சம் வரைக்கும் வருவாய்க்கு வரி கிடையாது என தேர்தல் மேனிபெஸ்டோ கொடுப்பது வரை வந்திருக்கிறது.

1978-இல் எல்.கே. ஜா தலைமையில் அமைக்கப்பட்ட மறைமுக வரி சீரமைப்பு கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர் ராஜா செல்லையா. பின்பு திட்ட கமிஷனில் மன்மோகன் சிங் 1990 ஜனவரி வரை துணை சேர்மனாக இருந்தபோது, அக்கமிஷனின் உறுப்பினராக இருந்தவர். அவரின் புத்தகங்கள், முக்கியமாக Towards Sustainable Growth - Essays in Fiscal and Financial Sector Reforms in India, Oxford University Press (1996) இந்திய உலகமயமாக்கலின் மிக முக்கியமான ஆரம்பகால ஆவணம். அவரின் Aspects of the Black Economy in India, National Institute of Public Finance and Policy, New Delhi, 1985 புத்தகம் தான் கிட்டத்திட்ட 15 வருடங்களுக்கு பிறகு அப்போதைய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, கருப்பு பணத்தினை எவ்வித கேள்வியும் கேட்கப்படாமல் டிக்ளேர் செய்ய அனுமதிக்கப்படும் என்கிற திட்டத்திற்கு வழிகாட்டி.

1976-இல் டெல்லியில் அவர் தேசிய பொது நிதி மற்றும் திட்ட அமைப்பினை (National Institute of Public Finance and Policy) உருவாக்கினார். 1995-இல் சென்னை பொருளாதார பள்ளியினை (Madras School of Economics) உருவாக்கினார். இந்திய வரி விதிப்பின் அடுத்த கட்டம் தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax), அடுத்த நிதியாண்டிலிருந்து அமுலுக்கு வரும். அதை பார்க்க ராஜா செல்லையா இருக்க மாட்டார்.

நான் 1992-95 பொருளாதாரம் படித்த போது என்னுடைய இந்திய பொருளாதார பாடத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது ராஜா செல்லையாவின் புத்தகங்கள்தான். ஒழுங்காக மார்க் எடுத்து கட்-ஆப்பில் தேறியிருந்தால், டெல்லி பொருளாதார பள்ளியில் படித்து, மத்திய வங்கியிலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பிலோ பணியாற்றிக் கொண்டிருப்பேன். ஆனால், அப்போது அவர் சென்னை பொருளாதார பள்ளியினை உருவாக்கியது எனக்கு தெரியாமல் போனது. இங்கேயாவது படித்திருக்கலாம். கிட்டத்திட்ட கல்லூரி படிப்பு முடித்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் நிதி/பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் எதையாவது படிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ராஜா செல்லையாவின் இறப்பு அதனை உறுதிப்படுத்திவிட்டது. இனி படிக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த வார கார்ட்டூன்


நன்றி: டைம்ஸ் ஆன்லைன்

5 comments:

  1. //நகரமயமாக்குதலின் மிக முக்கியமான இழப்பு குழந்தைகளின் விளையாட்டு என்று தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒற்றை குழந்தை மனநிலையில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகக் கூடிய சூழலில், ஒரு குழந்தையின் இயற்கையான விளையாட்டுத்தனம் மழுங்கடிக்கப்படுகிறது. என்னுடைய சட்டையிலெலெலாம் இங்க் கறை இல்லாமல் ஒரு நாளும் வீட்டிற்கு வந்ததில்லை. இன்றைய குழந்தைகள் பென்சில், ரப்பர் தொலைத்தாலோ, வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டூவீலரில் ஒற்றை செருப்பினை தொலைத்தாலோ அந்த குழந்தை வாங்கும் வசவுகள் சொல்லி மாளாது. நாம் எல்லோரும், நம் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்து வைக்கிறோம், சேர்த்து வைக்கிறோம் என்று பணத்தினை குறியாக கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்கள் தான் இன்னமும் வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதாக படுகிறது.

    ஐம்பது வயதில் நீங்கள் சாதித்து எல்லாம் பெரியதாக தோனாது. மைலாப்பூர் கற்பாங்காம்பாள் மெஸ்ஸின் கதம்ப சாதத்திற்கும், கடற்கரையின் உப்பு தோயந்த மக்காசோளத்திற்காகவும் உடலும், மனதும் ஏங்க ஆரம்பிக்கும். காசோ, பணமோ, அதிகாரமோ, பெண்ணோ,பொரு்ளோ அன்றைக்கு பெரியதாக தோன்றாது என்று தோன்றுகிறது. வாழ்வின் சுவை என்பது பெரிய வெற்றிகளில் இல்லை. சின்னச் சின்ன சந்தோஷங்களிலும், குட்டி தோல்விகளிலும் தான் இருக்கிறது. Simple Living is Better Living.
    //
    I was profoundly TOUCHED by the way you have put this, simply and elegantly.

    Keep writing. You can publish as a book and I will talk about this when it gets released in கிழக்கு மொட்டை மாடி :-)

    ராஜா செல்லையாவை பற்றி எழுத நினைத்துக் கொண்டிருந்தேன், பரவாயில்லை, நீங்கள் எழுதி விட்டீர்கள், நன்றி.

    எ.அ.பாலா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Great essay. I like the way you post on 3 or 4 different topics in a post. Learning a lot from your eclecticism.

    பின்குறிப்பு: "அரவிந்தன்" அல்ல. அரவிந்த் கண் மருத்துவமனை.

    ReplyDelete
  4. //இன்றைய குழந்தைகள் பென்சில், ரப்பர் தொலைத்தாலோ, வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டூவீலரில் ஒற்றை செருப்பினை தொலைத்தாலோ அந்த குழந்தை வாங்கும் வசவுகள் சொல்லி மாளாது//

    இந்த விஷயத்தில் நான் மாறுபடுகிறேன்..

    இன்றைய பொருளாதார சூழலில்,பெரும்பாலன பெற்றோர்கள் இதுபோன்ற விஷயங்களுக்காக குழந்தைகளை கோபித்துகொள்வதில்லை.குழந்தைகள் அழுவதை பெரும்பாலான பெற்றோர் விரும்புவதில்லை என்பதே யதார்த்தம்

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  5. Good Review.
    Keep writing.
    Did you heard about gujarat govt's giveaway to Tata???

    ReplyDelete