சனிதோறும் ஒரு பத்தி

March 10, 2011

சனிமூலை - 012

Disclaimer: நான் மருத்துவன் கிடையாது. கீழே இருப்பதைப் படித்து, உங்கள் மருத்துவரோடு ஆலோசனை செய்து இதை தேர்ந்தெடுங்கள்.

StayFree சானிடரி நாப்கினின் விளம்பரம் ஒரு அபத்தக் களஞ்சியம். பெண் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறார். அம்மா உடனே, மாதவிலக்கு வந்தால் என்ன செய்வாய் என்று கவலைப்படுகிறார். ஸ்டேப்ரீ இருக்க கவலையேன் என்று முடிகிறது. மாதர் சங்கங்கள், வுமன்-லிப்வாதிகள் எல்லாம் இதையெல்லாம் கண்டுக்கொள்ளவே மாட்டார்கள் போல. இதைவிட கவலைப் பட விஷயங்களே இல்லையா. ஆனால், அவர்களுக்கான குறிக்கோள் ரஜினி பெண்ணை எப்படியெல்லாம் வசைபாடினார் என்று பி.எச்.டி செய்வது. நிற்க.

இனி நான் சொல்லப்போவது சனாதனவாதிகளுக்கு ஒப்பானது அல்ல. பெண்களுக்கான பிரத்யேக, அந்தரங்கமான உடல்ரீதியான சமாச்சாரங்களில் நுழைவதற்காக ‘பத்வா’ போடுங்கள். கவலையில்லை.

மாதவிலக்கு என்பது பெண்களுக்கான இயற்கை வரம். போனவாரம் லைப்செல் நிறுவனம், மாதவிலக்கில் வெளியேறும் ரத்தத்திலிருக்கும் ஸ்டெம் செல்கள், போன் மேரோவை (bone marrow)விட வலுவானவை. பல்வேறு விதமான எதிர்கால வியாதிகளிலிருந்து பெண்களைக் காபாற்ற வல்லவை என ஆய்ந்து, அதை சேகரிக்க ப்ளான் எல்லாம் போட்டு விட்டார்கள். டைப் 1 நீரிழிவு, பார்கின்சன், இதய அடைப்பு, மல்டிப்பிள் ஸெலோரிஸிஸ், தண்டுவடச் சிகிச்சை போன்ற பிரச்சனைகளுக்கு மாதவிலக்கு ரத்த ஸ்டெம் செல்கள் பயன்படும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதன் பலன்கள் முக்கியமானவை. லிசா ரே-வை இப்போது ப்ராண்ட் அம்பாசிட்டாராக போட்டிருக்கிறார்கள்.

தீட்டு என்று ஒதுக்கி வைத்த காலமெல்லாம் போய், தீட்டானது தான் எதிர்கால பாதுகாப்பு என்கிற நிலை வந்துவிட்டது. 60 வயது வரையிலுமான சேகரிப்புக்கு ரூ.50000. தவணை முறையில் 12 மாதங்களுக்கு ரூ.4,200 என்று தளத்தில் போட்டிருக்கிறார்கள்.

பெண்கள், பெண்களைப் பெற்ற ஆண்கள் இந்த மாதிரியான அறிவியல்பூர்வமான விஷயங்களுக்கு செலவு செய்யுங்கள். பெண்களுக்கு சேர்பது என்றாலே நகையும், கல்யாணச் செலவும் என்கிற சிந்தனையிலிருந்து கொஞ்சம் வெளிவந்து இதையும் செய்யலாம். இதை செய்தால், எதிர்காலத்தில் வரக்கூடிய உடல்ரீதியான பிரச்சனைகளிலிருந்து உங்கள் பெண்ணை பாதுகாக்க முடியும். இதை விட்டு விட்டு, மஞ்சள் நீராட்டு விழா, பூப்படைதல் போன்றவற்றில் மட்டன் பிரியாணிக்கு அடித்துக் கொண்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை.



ஆஸ்கர் விருது விழாவில் இன்செப்ஷனுக்கு பெரிய விருதுகள் கிடைக்காமல் போனது வருத்தமே. அந்த வருத்தத்தினை பாஸ்ட் கம்பெனியின் ”மாற்று ஆஸ்கர்” [Slideshow] ஈடு கட்டிவிட்டது. சினிமாவில் அறிவியல், கணிதம், நுட்பம் என்கிற வகையில் இன்செப்ஷன் மிக முக்கியமான படம். கனவுகளுக்குள் புகுந்து எண்ணங்களை விதைத்து, திசை திருப்பும் திருடன் என்கிற ஒற்றை வரி சுவாரசியமான விஷயம். மீதியை படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஒரு மார்க்கமான ஆள். இன்செப்ஷனுக்கு முந்தியப் படமான டார்க் நைட்’டில் (The Dark Knight) வரும் எதிர் நாயகர் ஜோக்கர். ஜோக்கரின் முக்கியமான செயல் ’கேம் தியரி’யை முன்வைத்து நாயகனான பாட் மேனை மிரட்டுவது. இரண்டு ஆட்கள். இருவர் எடுக்கப்போகும் முடிவுகளும் இருவருக்கும் முன்கூட்டியே தெரிந்தால், இருவரும் தங்களுடைய சுயலாபத்துக்காக என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தான் இந்த சமன்பாடு. இதை இரண்டு கப்பலில் (கைதிகள் ஒரு பக்கம். பொதுமக்கள் ஒரு பக்கம்) வெடிகுண்டு வைத்து யார் முதலில் அழுத்துகிறார்கல், பேட்மேன் எப்படிக் காபாற்றுகிறார் என்பதெல்லாம் படத்தினைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். கேம் தியரி பற்றித் தெரிந்துக் கொள்ள இங்கே போங்கள் அல்லது A Beautiful Mind படம் பாருங்கள். நாஷ் சமன்பாடு (?!) (Nash Equilibrium) என்பது சுவாரசியமான கட்டமைப்பு. ஜான் நாஷ் சொன்னதை தான் நோலன் ஜோக்கருக்கு பொருத்தியிருப்பார். சொல்லவந்தது, இந்த மாதிரியான முன்னேறிய அறிவியல், கணிதவியல், பொருளியல் தெரிவுகளை/சமன்பாடுகளை ஒரு திரைப்பட இயக்குநர் தன் படத்தில் சரியாய் பயன்படுத்துவது தான்.

அதேப்போல, இன்செப்ஷனிலும், நோலன் பென்ரோஸ் படிக்கட்டுகள் என்கிற கணிதவியல் தோற்ற உருவெளியினை (optical illusion) பயன்படுத்தியிருக்கிறார். சதுர அமைப்பில் அமைக்கப்பட்ட தோற்ற உருவெளி அமைப்புகள். இதில் ஏற ஆரம்பித்தால், முடிவில்லாமல், நீங்கள் மேலேப் போய்க் கொண்டே இருப்பீர்கள். முடிவிலாப் பயணம் என்பது மாதிரி. கனவுகளில் நாம் காணும் நிகழ்வுகள், நிகழ்காலத்தை விட மெதுவாக நகருபவை. அவற்றில் லாஜிக் குறைவாக இருக்கும். முடிவில்லாத ஒரு பயணத்தை நோக்கிப் போய்க் கொண்டேயிருப்போம். இதை காட்சி ரூபமாக சொல்ல, நோலன் தேர்ந்தெடுத்தது தான் பென்ரோஸ் படிக்கட்டுகள்.



அப்பா மகன் கணிதவியல் நிபுணர்கள் லயோனல் பென்ரோஸ் & ரோஜர் பென்ரோஸ் 1958ல் வரைந்தது இது. இதை முப்பரிமாணத்தில் செய்வது கடினம். வயர்டு இதழில் இதுப் பற்றிய கட்டுரை இருக்கிறது. இதை விரிவாய் படிக்காத ஒரு திரை இயக்குநனால் யோசிக்கவே முடியாது. தமிழ் சினிமாவின் சாபக்கேடு விரிவாய் படிப்பதற்கு பதில், விரைவாய் ஹீரோ வீட்டு வாசலில் கால்ஷீட்டுக்கு கால்கடுக்க ...................

இது தான் விஷயம். ஒரு கடினமான ஆராய்ச்சி சமாச்சாரத்தினை ஒரு அக்மார்க் கமர்ஷியல் படத்தில் சரியாய் புகுத்தி, அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தான் ஒரு சிறந்த இயக்குநனின் தேடலும், சமூகப் பார்வையும் முக்கியமாய் சாமர்த்தியமும் இருக்கிறது. இதை விடுத்து, நல்லப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று தாத்தா செருப்பு மாட்டுவதை 10 நிமிடங்கள் காட்டுவதற்குப் பெயர் கலைப்படமல்ல; மொக்கைத்தனம். அந்த வகையில், தமிழில் ஷங்கர் முக்கியமானவர். ’எந்திரனி’ல் சிட்டி, சேரியில் இருக்கும் ரவுடிகளோடு காந்தப்புலத்தினைப் பயன்படுத்தி அரிவாள்களை பிடுங்குவது முக்கியமான காட்சி. எத்தனையோ அறிவியல் ஆசிரியர்கள் சேப்டி பின்னையும், காந்தத்தையும் பயன்படுத்தி கற்றுக் கொடுத்ததை விட, இது எளிதில் மக்களைப் போய் சேரும். மற்றப்படி, வாத்தியார் சொல்வதுப் போல ‘தமிழ்சினிமா ஒரு பூட்ட கேஸ்’



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு அங்கே இங்கே என்று நீண்டு, இப்போது தேர்தல் பேரமாக மாறிவிட்டது. ஆனால், இதை விட சீரியசான விவாதம் அமெரிக்காவில் ஒடிக் கொண்டிருக்கிறது. ராஜ் ரத்தினம் என்கிறவர் நடத்திய கேலியான் நிறுவனம் insider trading செய்த சமாச்சாரத்திற்காக மன்ஹாட்டன் கோர்ட்டில் வைத்து விசாரிக்கப்படுகிறார். அவர் கூதல் செய்ததாக சொல்லப்படும் தொகை என்னவோ, இந்திய அளவில் ஜுஜுப்பி வெறும் $45மில்லியன் (200-210 கோடிகள்). இதை இங்கே ஒரு தொகுதியின் செயலாளாரேக் கூட செய்யும் சாத்தியங்கள் உண்டு. விஷயம் அதுவல்ல. இந்த வழக்கு சார்ந்து அவர்கள் விசாரிக்கும் ஆட்கள். அதில் ஒருவர் ரஜத் குப்தா.

போன வாரம் மார்ச் 1ல், ரஜத் குப்தாவின் மீது அமெரிக்க SEC வழக்குத் தொடர்ந்திருக்கிறது. ரஜத் குப்தா, இந்தியாவின் உலக அடையாளம். மெக்கென்சி & கோவின் தலைவரான முதல் இந்தியர். 62 வயது. ஹார்வர்ட் படிப்பு. உலகளாவிய மெக்கென்சியின் தலைவர் (1994-2003). இந்தியாவின் பெரும்பாலான கமிட்டிகளில் தலைவர். ஹைதராபாத்தின் இந்திய வணிகப் பள்ளியின் (Indian School of Business - ISB/Hydrabad)கமிட்டி உறுப்பினர். இப்போது அமெரிக்க அரசாங்கம் கேள்விக் கேட்கிறது. இந்தியாவில் மன்மோகன்சிங்/மாண்டேக் சிங் அலுவாலியா அமைக்கும் எல்லா கார்ப்பரேட்-குழுக்களிலும் ரஜத் குப்தாவின் பெயர் இல்லாமல் இருக்காது. அவர் மீதான குற்றச்சாட்டு, வாரன் பப்பெட் கோல்ட்மென் சாக்ஸ் கீழேப் போகும்போது $5 பில்லியன் கடன்பத்திரமாக தருவேன் என்று உள்ளே போர்ட் ரூம் கான்பரென்ஸ் காலில் சொன்னதை, கால் முடிந்தவுடன், அதே லைனிலிருந்து ராஜ்ரத்தினத்துக்கு சொன்னது. அதன்மூலம் ராஜ்ரத்தினம் கோல்ட்மென் சாக்ஸ் பங்குகளை சந்தையில் வாங்கி, பின் விற்று காசுப் பார்த்தார் (insider information).

இந்த வழக்கினை விஷயம் தெரிந்த வால் ஸ்ட்ரீட் நிபுணர்கள் மிகக் கூர்மையாகக் கவனிக்கிறார்கள். ரஜத் குப்தா இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தவுடன், ப்ராக்டர் & கேம்பள் போர்டிலிருந்து விலகினார். போனவாரம், அவர் வகித்துவந்த அமெரிக்கன் ஏர்லென்ஸின் தாய் நிறுவனத்தின் போர்ட்டிலிருந்தும் விலகினார். இதை கண்டறிந்தது தான் சுவாரசியம். கிட்டத்திட்ட ராஜரத்தினத்தில் செல்பேசிக்கு அழைப்பு வந்த அத்தனை எண்களையும் ஒரு டேட்டா பேஸில் போட்டு, குடாய்ந்து எடுத்து, பிற விஷயங்களோடுப் பொருத்தி, இந்தக் குற்றச்சாட்டினை நிறுவியிருக்கிறார்கள்.

மேலே சொன்னது தான் விஷயம். இங்கே ஊழல் என்று எதுவும் நடக்கவில்லை. ஒரு நிறுவனத்துக்குள் நடக்கும் சங்கேத பரிவர்த்தனைகளை வெளியே சொல்லி, அதன் மூலம் இன்னொருவர் பயனடைந்தார் என்பது தான் குற்றச்சாட்டு. வெறும் விஷயம் சொன்னதற்கே இத்தனை ஆராய்ச்சி, நிறுவுதல், நிபுணர்களோடு கலந்து ஆலோசித்தல் என நீள்கிறது. இங்கே காதிருக்கும் எல்லோரும் நீரா ராடியாவும், கனிமொழியும் என்னப் பேசினார்கள் என்பதைக் கேட்டிருந்தாலும், சிபிஐ தன் எஜமானர்களின் தலையாட்டல்களுக்காகவும், அரசியல் பேரங்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறது. India Everywhere!

இந்த வார வீடியோ

மூன்று வருடங்கள் தேடி கடைசியில் கண்டுபிடித்த ஸ்பெடர்மேன் காமிக்ஸின் ஒரிஜினல் இண்ட்ரோ.