சனிதோறும் ஒரு பத்தி

April 17, 2009

சனிமூலை - 007

என்னுடைய வீட்டில், என்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் நான் தான் தங்க வழிகாட்டி. தங்குவதற்கான வழிகாட்டி அல்ல. தங்கத்திற்கான.

தங்கம். இந்திய பெண்களின் இன்றியமையாத இன்னொரு விஷயம். கல்லூரி படிக்கும் போது கலந்து கொண்ட ஒரு தெலுகு கல்யாணத்தில் உலாத்திய பெண்களோடு, அந்த மண்டபத்தினை ஹை-ஜாக் பண்ணியிருந்தால், வடகிழக்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தின் பாதி பட்ஜெட்டினை ஒப்பேத்தியிருக்கலாம். பெண்கள் மட்டுமல்லாமல், தாதாக்கள், அரசியல்வாதிகள், டூபாக்கூர் தொழிலதிபர்கள் போன்ற ஷோ பேர்வழிகளுக்கான முக்கியமான சமாச்சாரம்.

வழிகாட்டி என்றால், எப்போது தங்கம் ஏறும், எப்போது தங்கம் இறங்கும் என்று ஒரளவுக்கு சொல்லக்கூடிய திறமை கொஞ்சுண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதை திறமை என்று சொல்வதை விட, இது உலக சந்தைகளை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய அடிப்படை அறிவு. இனி தங்கம் ஏறுமா ? ஏறாதா?

இனி தங்கம் இறங்கும். ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் ஐ.எம்.எப்பின் இருப்பிலிருந்து 400 டன் தங்கத்தினை விற்க சொல்லியிருக்கிறார்கள். காற்றில் கணக்குப் போடாதீர்கள். ஒரு டன் தங்கம் இன்றைய விலையில் ஜஸ்ட் ரூ.144 கோடி மட்டுமே. 400 டன் எவ்வளவு என்பதை கணக்குப் போட்டு ஈனோ குடிக்காதீர்கள். அது நமக்கு தேவையில்லை. இந்தியா ஒரு தங்க இறக்குமதி நாடு. நாம் தொடர்ச்சியாக தங்கத்தினை இறக்குமதி செய்து கொண்டே இருப்போம். ஆனால் பிப்ரவரி, மார்சில் ஒரே ஒரு கிராம் தங்கம் கூட இறக்குமதி செய்யவில்லை. மாறாக, விலை கூடியவுடன், புத்திசாலியான நம்மாட்கள், தங்கத்தினை விற்க ஆரம்பித்தார்கள். முட்டாள் ஐரோப்பிய நாடுகள், ஏறும் தங்கம் தான், நிதி சீர்குலைவு, பொருளாதார மந்தநிலைக்கு எதிரான மாற்று என்று நினைத்து வாங்க ஆரம்பித்தார்கள். இந்தியா மற்றும் மத்திய கிழக்கினை தவிர வேறு யாரும் ஆபரண தங்கத்தினை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில்லை. ஆக இந்தியா வாங்கவில்லையென்றால், உலகமெங்கும் தங்கம் காற்று வாங்கும்.

மேலும், இந்த எவரெஸ்ட் உயரத்திற்கு காரணம், மத்திய வங்கிகள் உலகெங்கிலும், நிதி சீர்குலைவு ஏற்பட்டவுடன், உஷார் பத்ரி ரைடாக, தங்கத்தினை வாங்கி முடக்கி விட்டார்கள். அதனால் வரத்து குறைந்தது. தேவை அதிகம், ஆனால் சப்ளே குறைவு என்றால் அது சிம்பள் பொருளாதார வீக்கத்தினை உண்டாக்கும். சவரன் 8000ரூபாய்க்கு போய் கொண்டிருந்தது கடந்த ஒன்றரையாண்டுகளில் உயர்ந்து 12-13,000க்கு எகிறியதற்கு இது தான் காரணம். இப்போதைய நிலையே கூட இன்னமும் உயர்நிலையில் தான் இருக்கிறது. கொஞ்ச காலம் போனால் வாங்கும் நிலைக்கு வரும்.

இப்போதைக்கு, தங்கம் வாங்க வேண்டுமென்ற எண்ணங்கள் இருந்தால், கொஞ்ச காலம் ஐபிஎல்லும், உலக டி-20 கிரிக்கெட்டும் பார்த்து முடித்துவிட்டு ஜி.ஆர்.டிக்கு வண்டியினை எடுங்கள்.






கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது. இது அரசியல் வசனமில்லை. சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வுகள்.

2008-இன் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு தோழி என்னிடத்தில் கொடுத்த புத்தகம் தான் இது. Sadako and the Thousand Paper Cranes by Eleanor Coerr சிறிய குழந்தைகளுக்கான புத்தகம். சடாகோ என்கிற ஒரு குட்டிப்பெண்ணின் உண்மைக்கதை. குட்டியாய் 80 பக்கங்கள். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வுகள் ஏராளம்.

சசாகி சடாகோ ஜப்பானில் 1943ல் பிறந்து 1955-இல் தன்னுடைய பன்னிரண்டு வயதில் ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டால் ஏற்பட்ட கதிர்வீச்சால் உயிர் இழந்த குழந்தை. வாழ்க்கையில் ஒட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்று நினைத்த பெண். அவளுடைய தோழி சிசுகோ. கதிர்வீச்சின் பாதிப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, சிசுகோ அவளுக்கு ஒரு தங்க பேப்பரானாலான ஒரு கொக்கினை செய்து கொடுத்தாள். ஒரிகமி என்பது மிகப் பிரபலமான ஜப்பானிய கலாச்சார பொழுதுபோக்கு. பேப்பரில் பல உருவங்களை ஒரிகமியில் செய்ய முடியும். ஆயிரம் கொக்குகள் ஒரு நோயாளி செய்தால், வலி, வேதனை, வியாதி எல்லாம் பறந்துவிடும் என்பது ஒரு ஜப்பானிய ஐதீகம்.

வெகு சூட்டிகையாக, ஒடியாடிக் கொண்டிருந்த சடாகோ, சடாலென மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாக ஆனாள். ஆனாலும், நம்பிக்கை தளராமல், பேப்பரில் கொக்கு செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக கொக்கு செய்ய ஆரம்பித்தாள். அக்டோபர் 25, 1955இல் சடாகோ இறந்து போனாள். அவள் இறக்கும்போது அவள் செய்த மொத்த கொக்குகளின் எண்ணிக்கை 644. அவளின் வகுப்பிலிருந்த குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து மீதமிருக்கிற 356 கொக்குகளை செய்து அவளோடு புதைத்தார்கள். கணக்கு சரியாக போனது - ஆயிரம் கொக்குகள்.

அவள் இறந்த பிறகு அவளின் வகுப்பு நண்பர்கள் அவள் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவளின் டைரி போன்றவற்றினை தொகுத்து ‘ககோஷி (Kakoshi)' என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஜப்பானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து நிதி திரட்டி, 1958-இல் அவளின் சிலையினை ஹிரோஷிமா அமைதி பூங்காவில் திறந்தார்கள். சடாகோவின் சிலையின் கீழ் இன்றும் ஆகஸ்ட் -6இல் எல்லோரும் பேப்பர் கொக்குகளை வைக்கிறார்கள். அது அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.சடாகோவின் சிலையின் கீழே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

This is our cry,
this is our prayer;
peace in the world.

போர் என்பது மிக மோசமான விஷயம். இந்தியாவில் கற்பிக்கப்படும் வரலாறு இன்னமும், “இவர் அவரை போரில் வீழ்த்தினார்” “அவர் இவரை போரில் வெற்றிக் கொண்டு, சாம்ராஜ்யத்தினை விரிவு செய்தார்” என்கிற அளவில் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வெற்றி என்பது எது என்று அசோகனுக்கு ஒரு புத்த பிட்சு சொன்னது வெறுமனே ஸ்டேஜ் ட்ராமா போட தான் உதவியிருக்கிறது. வரலாற்றினை இன்னமும் நாம் சரியாக கற்றுக் கொள்ளவில்லை அல்லது கற்றுக் கொடுக்கத் தெரியவில்லை என்பது தான் இன்றைக்கும் மேலோங்கியிருக்கிறது. வெற்றி என்பது அடுத்தவரின் தோல்வியிலிருந்து வருவதல்ல. அது உள்ளிருந்து வருவது. தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வது. தன்னை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்து பாடம் கற்பது. அனுபவங்களை உள்ளிழுப்பது. அடுத்தவரை கொல்வதல்ல.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் யாராவது இதன் உரிமம் பெற்று தமிழில் வெளியிடலாம். குழந்தைகளுக்கு ஏற்றாற் போல நடை. பெரிய எழுத்து புத்தகம். பென்குவின்புட்னம் என்கிற நியுயார்கில் இருக்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.



RPG குழுமத்திலிருந்து Open என்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கை வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியா டுடே, அவுட்லுக், வீக் போன்றவைகளின் தளத்திலேயே இதுவும் இருக்கிறது. கீழே குறிப்பிடுள்ள மேற்கோள் ’ஒபன்’ பத்திரிக்கையின் முதல் இதழில் வந்த கட்டுரையில் வந்தது. இந்தியாவில் இணைய இணைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பேப்பரில் அச்சடித்து வரும் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் வாங்குவதில் சில பல ஆபத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில் RPG குழுமம் இப்பத்திரிக்கையினை தொடங்கியிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்.

இதே மாதிரி முந்தாநாள் ’பாரிஸ்தா’வில் உட்கார்ந்து கொண்டு பொழுது போகாமல் முன்னால் உட்கார்ந்திருந்த பெண்ணினைப் பார்த்துக் கொண்டே (டார்க் புளு ஜீன்ஸுக்கு பிங் குர்தா, நன்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றியது) இந்தியா டுடே புரட்டினால், மிருணாள் சென் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரித்விக் கட்டக், மிருணாள் சென் கடைசியாக சத்யஜித் ரே என்கிற வரிசையில் தான் நான் ஆரம்பகாலத்தில் படங்கள் பார்த்தேன்.

வங்காள திரை பிதாமகர்கள் வரிசையில் மிருணாள் சென்னுக்கு ஒரு தனியிடமிருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் கான்ஸ் திரை விழாவில் திரையிட சென்னின் 1970களின் கல்கத்தாவினை பிண்ணணியாகக் கொண்ட மூன்று படங்களை கேட்டிருந்தார்கள். இண்டர்வியு, கல்கத்தா 71 மற்றும் படாதிக். ஆனால் அந்த படங்களின் பிரிண்ட் படு மோசமாக இருந்ததால் கைவிடப்பட்டது. வெறுத்துப் போய் “நான் சாகும் போது, என் படங்களும் மறைந்து போகும்” என புலம்பி தள்ளியிருக்கிறார். இது ஒரு மகா மோசமான விஷயம்.

மே.வங்காளத்திலிருந்து வந்து பாலிவுட்டினை கலங்கடித்து கொண்டிருக்கும் பிபாசா பாசு, சுஷ்மிதா சென், ரீயா சென் போன்றவர்களில் ஆரம்பித்து பல்வேறு நபர்கள் வங்காள சினிமாவிற்கு கடமைப்பட்டுள்ளார்கள். இது தவிர, தேசிய பட வளர்ச்சி கார்ப்பரேஷனுக்கு இதை விட வேறு என்ன வேலை இருக்க முடியும்? அமிதாப் பச்சனின் மெழுகு சிலையினை ஹாங்காங்கில் வைப்பதற்கு காட்டும் அக்கறையில் அரை பங்காவது, நம்மிடையே இன்னமும் இருக்கும் திரைச்சிற்பிகளை காப்பதில் நமக்கில்லை. நல்ல வேளையாக, தமிழ்நாட்டினை திரையுலகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆண்டு வருவதால், ஜி.என்.செட்டி சாலையில் போட்டிருக்கும் மேம்பாலத்திற்கு, கலைவாணர் மேம்பாலம் என்று பெயர் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் என்.எஸ்.கே என்றால் பட்டணம் பொடி பெயரா என்று நாளைய சந்ததியினர்கள் கேட்பார்கள்.

இந்தியர்களான நமக்கு நம்முடைய பாரம்பரியத்தினை காப்பதில் இருக்கும் அலாதி அக்கறை சொல்லி மாளாது. இந்தியாவின் எல்லா மியுசியங்களும் காலியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் செலவு குறைவான கல்விச்சுற்றுலா தலமாக தான் பிரபலப் படுத்தியிருக்கிறோமே தவிர அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியதுப் போல தெரியவில்லை. வங்காள சினிமாவினை நேசிப்பவர்கள் யாராவது இருந்தால் புத்ததேவ் பட்டாச்சார்யா / மம்தா பானர்ஜி வகையறாக்களில் யாராவது ஒருவரிடம், தாகூர் மாதிரியான ஒரு ஆள் இன்னமும் உங்களூரில் உயிரோடு இருக்கிறான், அவனை சரியான பாதுகாத்து வையுங்கள் என்று பெங்காலியில் உரக்கச் சொல்லுங்கள்.

இந்த வார மேற்கோள்

நஸ்ரூத்தின் ஷா "ஒபன்” பத்திரிக்கையில் கலைப்படங்கள் எடுப்பதுப் பற்றி
“sign me up, borrow funds from NFDC claiming to make realistic cinema, use indoor shots to save money, producer and I split the remaining cash"

April 11, 2009

சனிமூலை - 006

வேளச்சேரி கான்கார்ட் மோட்டார்ஸில் டாடா நானோ பார்க்க கியு நிற்கிறது. நல்ல விஷயம்தான். இந்த மாதிரி ஒரு பொருளுக்கான கியுக்களை ஆப்பிளின் ஸ்டோர்களில் ஒவ்வொரு மேக் கருத்தரங்கு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் புது பொருளுக்காக பார்க்க முடியும். “ஹமாரா பஜாஜ்”-க்கு பிறகு, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வாகனத்திற்காக முண்டியடிப்பது டாடா நேனோவாகதான் இருக்க முடியும்.

டாடா நேனோ வெறுமனே ஒரு வாகனமாக பார்க்க முடியாது. இதை ஒரு புது தலைமுறையாக பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 1991-இல் இந்தியா பொருளாதார சீரமைப்பினை ஆரம்பித்து 17 வருடங்கள் ஆன நிலையில், இது இரண்டாம் கட்ட சீரமைப்பின் ஆரம்பமாக தோன்றுகிறது.

1992-இல் நாம் உலக நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தோம். அன்னிய பொருட்களை இஷ்டத்திற்கு உபயோகப் படுத்தினோம்.2009-இல் இந்தியாவிலிருந்து உலகத்திற்கு பொருட்களை அனுப்ப ஆயத்தமாகிறோம். இந்திய சந்தைக்காக பொருட்கள் தயாராகின்றன. இது ஒரு முக்கியமான திருப்பம். இதை சீராக செய்ய நமக்கு இன்னமும் இரண்டு தசாம்சங்கள் ஆகலாம்.பரவாயில்லை.

எகனாமிக் டைமிஸில் சி.கே. பிரகலாத் “டாடா நேனோ” மாதிரியான பிற விஷயங்களின் மீதான ஒரு பார்வையினை வைக்கிறார். அவரின் Fortune at the Bottom of the Pyramid ஒரு முக்கியமான மாற்றுப் பார்வையினை முன் வைக்கிற புத்தகம். டாடா குழுமத்திற்கு அவர் ஆலோசகர். அவரின் ஆலோசனையின் பேரில் தான் ஜிஞ்சர் ஹோட்டல் வந்தது.

டாடா நேனோ, ஜிஞ்சர் ஹோட்டல்,அரவிந்தன் அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய செல்பேசி துறை, இணைய சேவை போன்றவைகள் முக்கியமான திருப்புமுனைகள். மிகவும் குறைந்த விலையில், தரமான, மக்களின் வாங்குதல் சக்திக்கு உள்ளே அடங்கக்கூடிய பொருட்களையும், சேவைகளையும் சந்தைப்படுத்தினால், அதன் பிரதிபலன்கள் பல மடங்கு போகக்கூடியவை. இந்திய தொலைப்பேசி துறை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ரூ.16க்கு ஒருவரிடம் பேச தலைப்பட்ட நாம், இன்றைக்கு 10 பைசா அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் செல்பேசி துறை உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறை. இவ்வளவு பொருளாதார மந்தங்கள் நிலவிய போதிலும், செல்பேசி துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் செல்பேசி வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறார்கள்.

வெறுமனே முதலாளித்துவம் (Capitalism) என்பது போய், இன்றைக்கு சமூக முதலாளித்துவம் (Social Capitalism) என்பது குறைவாக, ஆனால் தீர்க்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில் நடத்துவது வெறும் லாபத்திற்காக மட்டுமே என்கிற பழைய முதலாளித்துவ சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியிருக்கிறது. சமூக தொழில்முனைவோர்கள் (Social Entrepreneurs) என்றழைத்துக் கொள்ள விரும்பும் ஒரு பகுதியினர், சமூகத்தின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்து இருக்கிறார்கள்.

வழக்கமான தன்னார்வல நிறுவனங்கள் என்றழைக்கப்படும் நிறுவனங்களுக்கு பெரியதான தொலைநோக்கு பார்வைகள் கிடையாது. அவர்கள் இன்னமும் அன்பளிப்பினை வைத்துக் கொண்டு காலத்தினை ஒட்டுகிறார்கள், இது ஒரு குறைப்பார்வை. முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான விஷயம், லாபம், அந்த லாபம் எப்படி கிடைக்குமென்றால், தரமான பொருள்/சேவையினை, குறைவான விலையில் அளிப்பது. அந்த நோக்கத்தையும், தன்னார்வ நிறுவனத்தினை சமூக நலனையும் காக்டெயிலாக்கினால் வரும் கலவை தான் இன்றைக்கு மெதுவாக பரவியிருப்பது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.


சென்னை சாந்தோம் கடற்கரை. கடந்த மூன்று மாதங்களாக சன் டிவியில் ஞாயிறு மாலை போடப்படும் டப்பா படங்களை தவிர்ப்பதற்காகவே என்னுடைய தங்கை மகளை கூட்டிக் கொண்டு, அலையில் காலாற நடக்கிறேன். எல்லா வகையான மக்களும், காலை அலை நனைப்பதை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. என் தங்கை மகளின் மிக முக்கியமான பொழுதுபோக்கை இப்போது ஞாயிறு மாலை, கடலலையில் தொப்பலாக நனைவது. நிற்பது, ஒடுவது, குதிப்பது, பேரலைகள் வரும்போது கைப்பற்றி தடுமாறுவது என உப்புத் தண்ணீர் உள்ளே போக விளையாடுகிறாள்.

சென்னை கடற்கரை ஒரு முக்கியமான ரிலீப் பாயிண்ட். புல்லாங்குழல் விற்பவர்கள் ஏர் டெல்லின் சிக்னேச்சர் ட்யூனை வாசிக்கிறார்கள்.என் காலத்தில் ஏதாவது சினிமா பாட்டு தான் புல்லாங்குழலில் ஹம் செய்யப்படும். ரங்கராட்டினம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடல், மாங்காய், சுண்டல், பஜ்ஜி, வறுத்த சோளம், பானிப்பூரி என சகலமும் ரூ.10-15க்குள் ஆகிறது. தண்ணீர் பாக்கெட் காலையில் ரூ.1 ஆகவும், மாலையில் ரூ.1.25 - 1.50 ஆகவும் இருக்கிறது.Discretionary Pricing. எல்லாவகையான மக்களுக்கும் கடலின் மீது ஒரு காதல் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என எல்லாரும் அலையில் கால் நனைக்கிறார்கள். மிரள்கிறார்கள். கூட்டமாக சிரிக்கிறார்கள். கொஞ்சம் தைரியமான பெண்கள், சுடிதார் நனைய உட்காருகிறார்கள். ஆண்கள், காலாடை சகிதம் ”சீன்” காட்டவாவது கொஞ்சமாய் கடலுக்குள் போகிறார்கள். ஒரு மணிக்கு ஒரு தடவை குதிரையில் வரும் போலீஸ்காரர்கள், மக்களை உள்ளே செல்லாமல் இருக்குமாறு எச்சரிக்கிறார்கள்.

சின்ன குழந்தைகள் வால்ஸ் ஐஸ்கீரிம் குச்சி ஐஸ் சாப்பிட்டு, மணலில் வீடு கட்டி, அந்த குச்சியினை கொடி கம்பம் போல் மேலே செருகுகிறார்கள். காதலர்கள் துப்பட்டா சகிதம், முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மணலில் நிறைய பாஸ்ட் புட் சென்டர்கள். வஞ்சிரம் மீன் (பெரியது) ரூ.60க்கு காரசாரமாய் கிடைக்கிறது. காரினுள் பியரிடித்து விட்டு, மேல்தட்டு மக்கள் சிக்கன் நூடுல்ஸும், மீனுமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளீல்லாத, பெண் கிடைக்காத கும்பல்கள், வட்டமாக உட்கார்ந்து கொண்டு “ங்கோத்தா, போன வாரம் என் பிகரை ஒருத்தன் ஒரம் கட்டிட்டான். அவனை எப்படியாவது கழட்டிருன்னும்டா” என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது வட்டமாய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு மட்டும் கேட்குமளவிற்கு கெட்ட வார்த்தை கானா பாடுகிறார்கள். இளந்தாய்மார்கள் குழந்தையினை பார்ப்பதும், கணவன் எங்கே பார்க்கிறான் என்று கண்காணிப்பதுமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் வாக்கிங் போகிறார்கள். அவர்களின் சிரிப்பிலும், அலைகள் கால் நனைக்கும்போது விரியும் குழந்தைகளின் கன்னக்குழிகளிலும் தான் நிஜமான சந்தோஷத்தினை பார்க்க முடிகிறது.

சென்னை மாதிரியான தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு மெட்ரோபொலிஸில் குழந்தைகளுக்கு விளையாட சரியான இடங்கள், வாய்ப்புகள் இல்லை. சதா போகோவும், ஜெட்டெக்சும் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள், அப்பாவின் மடிக்கணினியில் விளையாடும் குழந்தைகள் என எல்லா வகையுமான குழந்தைகளை கடந்த ஆறு ஆண்டுகளாக மிக நெருக்கமாக பார்த்து வருகிறேன். இன்றைய குழந்தைகளுக்கு physical விளையாட்டுகள் என்பதே எதுவுமில்லை.

நான் எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். இன்றைக்கும் பீச் கிரிக்கெட் என்றழைக்கப்படும் கடற்கரை மணலில் டென்னிஸ் பாலில் ஆடும் கிரிக்கெட்டினை கர்ம சிரத்தையாக ஞாயிறு காலை ஆடி வருகிறேன். நான் நடு ரோட்டில், மொட்டை மாடியில், சுடுகாட்டில், மூத்திர சந்தில், கால்வாய் ஒரங்களில், கொண்டித்தோப்பு போலீஸ் லைன் பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்கும் மைதானமென்று சொல்லமுடியாத ஒரு மைதானத்தில் என எல்லா இடங்களிலும் விளையாடி இருக்கிறேன். விளையாட்டு பதின்ம பருவத்தில் மிக முக்கியம், படிப்பை விட.

நகரமயமாக்குதலின் மிக முக்கியமான இழப்பு குழந்தைகளின் விளையாட்டு என்று தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒற்றை குழந்தை மனநிலையில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகக் கூடிய சூழலில், ஒரு குழந்தையின் இயற்கையான விளையாட்டுத்தனம் மழுங்கடிக்கப்படுகிறது. என்னுடைய சட்டையிலெலெலாம் இங்க் கறை இல்லாமல் ஒரு நாளும் வீட்டிற்கு வந்ததில்லை. இன்றைய குழந்தைகள் பென்சில், ரப்பர் தொலைத்தாலோ, வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டூவீலரில் ஒற்றை செருப்பினை தொலைத்தாலோ அந்த குழந்தை வாங்கும் வசவுகள் சொல்லி மாளாது. நாம் எல்லோரும், நம் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்து வைக்கிறோம், சேர்த்து வைக்கிறோம் என்று பணத்தினை குறியாக கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்கள் தான் இன்னமும் வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதாக படுகிறது.

ஐம்பது வயதில் நீங்கள் சாதித்து எல்லாம் பெரியதாக தோனாது. மைலாப்பூர் கற்பாங்காம்பாள் மெஸ்ஸின் கதம்ப சாதத்திற்கும், கடற்கரையின் உப்பு தோயந்த மக்காசோளத்திற்காகவும் உடலும், மனதும் ஏங்க ஆரம்பிக்கும். காசோ, பணமோ, அதிகாரமோ, பெண்ணோ,பொரு்ளோ அன்றைக்கு பெரியதாக தோன்றாது என்று தோன்றுகிறது. வாழ்வின் சுவை என்பது பெரிய வெற்றிகளில் இல்லை. சின்னச் சின்ன சந்தோஷங்களிலும், குட்டி தோல்விகளிலும் தான் இருக்கிறது. Simple Living is Better Living.


ராஜா ஜேசுதாஸ் செல்லையா. வயது 87. ஏப்ரல் 7ஆம் தேதி மறைந்து போனார்.

யாரிவர்?

சினிமா நடிகரோ, அரசியல்வாதியோ, சமூக சேவகரோ, உள்ளூர் தாதாவோ, தொழிலதிபரோ கிடையாது. அவர் ஒரு பொருளாதார நிபுணர். 2007-இல் பத்ம விபுஷன் பெற்றவர். நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்து 1991-இல் இந்தியாவின் பொருளாதார அமைப்பினை உலகமையமாக்க செய்ய அமைக்கப்பட்டிருந்த குழுவில் ராஜா செல்லையா ஒரு முக்கியமானவர்.

ராஜா செல்லையா தான் இன்றைக்கு ஒரளவிற்கு சுலபமாக இருக்கக்கூடிய இந்திய வரிச்சட்டங்களின் பிதாமகர். லைசன்ஸ் ராஜ்ஜியத்தில் இஷ்டப்படிக்கு எழுதப்பட்டிருந்த வரிச்சட்டங்களை, தனி நபர் குழு அமைத்து, அதனை மொத்தமும் படித்து, மாறி வரக்கூடிய உலகச் சூழலுக்கு ஏற்றாற் போல, மாற்றிய பெருமை ராஜா செல்லையாவைதான் சேரும். செல்லையாவின் அறிக்கை தான் மன்மோகன் சிங் பல்வேறு வரி ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டு வர உதவியது.

கஸ்டம்ஸ் வரி 200% இருந்ததை குறைத்தது; 40% மட்டுமே தனியார் மற்றும் நிறுவனங்களின் உச்சக்கட்ட வரியாக இருக்கும் என்று நிர்ணயித்தது; 200-300% சில பொருட்களுக்கு இறக்குமதி வரி இருந்ததை சீரமைத்தது; மாட் வேட் என்றழைக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியின் அடிப்படையினை நிர்மாணித்தது; சேவை வரி என்ற ஒன்றினை கொண்டு வந்தது (சேவை வரி தான் இன்றைக்கு இந்திய அரசுக்கு மிக அதிகப்பட்ச வருவாயினை தரக்கூடிய மறைமுக வரிவிதிப்பு) என அவரின் பங்களிப்பினால் தான் இன்றைக்கு 2009-இல் பா.ஜ.க குறைந்தபட்சம் 3 இலட்சம் வரைக்கும் வருவாய்க்கு வரி கிடையாது என தேர்தல் மேனிபெஸ்டோ கொடுப்பது வரை வந்திருக்கிறது.

1978-இல் எல்.கே. ஜா தலைமையில் அமைக்கப்பட்ட மறைமுக வரி சீரமைப்பு கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர் ராஜா செல்லையா. பின்பு திட்ட கமிஷனில் மன்மோகன் சிங் 1990 ஜனவரி வரை துணை சேர்மனாக இருந்தபோது, அக்கமிஷனின் உறுப்பினராக இருந்தவர். அவரின் புத்தகங்கள், முக்கியமாக Towards Sustainable Growth - Essays in Fiscal and Financial Sector Reforms in India, Oxford University Press (1996) இந்திய உலகமயமாக்கலின் மிக முக்கியமான ஆரம்பகால ஆவணம். அவரின் Aspects of the Black Economy in India, National Institute of Public Finance and Policy, New Delhi, 1985 புத்தகம் தான் கிட்டத்திட்ட 15 வருடங்களுக்கு பிறகு அப்போதைய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, கருப்பு பணத்தினை எவ்வித கேள்வியும் கேட்கப்படாமல் டிக்ளேர் செய்ய அனுமதிக்கப்படும் என்கிற திட்டத்திற்கு வழிகாட்டி.

1976-இல் டெல்லியில் அவர் தேசிய பொது நிதி மற்றும் திட்ட அமைப்பினை (National Institute of Public Finance and Policy) உருவாக்கினார். 1995-இல் சென்னை பொருளாதார பள்ளியினை (Madras School of Economics) உருவாக்கினார். இந்திய வரி விதிப்பின் அடுத்த கட்டம் தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax), அடுத்த நிதியாண்டிலிருந்து அமுலுக்கு வரும். அதை பார்க்க ராஜா செல்லையா இருக்க மாட்டார்.

நான் 1992-95 பொருளாதாரம் படித்த போது என்னுடைய இந்திய பொருளாதார பாடத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது ராஜா செல்லையாவின் புத்தகங்கள்தான். ஒழுங்காக மார்க் எடுத்து கட்-ஆப்பில் தேறியிருந்தால், டெல்லி பொருளாதார பள்ளியில் படித்து, மத்திய வங்கியிலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பிலோ பணியாற்றிக் கொண்டிருப்பேன். ஆனால், அப்போது அவர் சென்னை பொருளாதார பள்ளியினை உருவாக்கியது எனக்கு தெரியாமல் போனது. இங்கேயாவது படித்திருக்கலாம். கிட்டத்திட்ட கல்லூரி படிப்பு முடித்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் நிதி/பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் எதையாவது படிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ராஜா செல்லையாவின் இறப்பு அதனை உறுதிப்படுத்திவிட்டது. இனி படிக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த வார கார்ட்டூன்


நன்றி: டைம்ஸ் ஆன்லைன்

April 08, 2009

சனிமூலை - 005

நடந்து முடிந்த G-20 மாநாட்டில் ஆரவாரமாக $1 டிரில்லியன் டாலர்கள் உலக பொருளாதாரத்தினை மந்த சூழலிருந்து விடுவிக்க அறிவிக்கப்பட்டது.ஒபாமா வந்தார். பேசினார். கை குலுக்கினார். சிரித்தார். போட்டோ எடுத்துக் கொண்டார். போய்விட்டார். அவர் உள்நாட்டு பிரச்சனை அவருக்கு. தேசியவாதம் (State Protectionism) இருக்கக்கூடாது என்று ஒன்று சேர முடிவெடுத்தார்கள். அவரவர் நாட்டுக்கு போய் அதனை மறுதலிப்பார்கள் அல்லது வேறுவிதமாக தேசியவாதத்தினை உட்புகுத்துவார்கள்.

இதற்கிடையில் சீனா திடீரென ஞானோதயம் பெற்று அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருக்கக்கூடாது. அதற்கு மாற்றாக ஐ.எம்.எப்பின் அதிகாரத்தினை பயன்படுத்தி ஒரு புதிய கரன்சியினை உலக கரன்சியாக அறிவிக்கவேண்டும் என்று ஒரு குண்டினை தூக்கிப் போட்டிருக்கிறது. அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருப்பதால் தான் அமெரிக்க பெட்ரல் ரிசர்வும், அரசாங்கமும் எவ்விதமான லஜ்ஜையும் இல்லாமல், கேட்பவர்களுக்கு எல்லாம் அச்சடித்து கொடுத்து, அமெரிக்க டாலரினை வெறும் பேப்பர் கரன்சியாக மாற்றியிருக்கிறார்கள். புஷ் கண்ட புண்ணியம் இது தான். உள்நாட்டு செலவுகள், போர்கள், கேணத்தனமான முதலீட்டு திட்டங்கள், சப்-பிரைமில் வாரி இறைத்த பணம் என்று ’பிரிண்டர் கண்ட இடமெல்லாம் டாலர்’ என்று குதியாட்டம் போட்டிருக்கிறார்கள். இடதுசாரிகள் மற்றும் கம்யுனிச நாடுகள் இதையே தான் 30 வருடங்களாக வாய் கிழிய கத்திக் கொண்டிருந்தன. ஹ்யூகோ செவிஸ் சாவெஸ் (வெனிசூலா) தன் நாட்டின் பெட்ரோல் அந்நிய விற்பனையை யூரோவினை முன்வைத்து செய்தார். ஈரானும் பெட்ரோல் விற்பனையை யூரோவுக்கு மாற்றி இருக்கிறது. ரஷ்யர்கள் டாலராலாலும், யூரோவோடும் சரிவிகித உறவோடு இருக்கிறார்கள். பா.ராகவன் எழுதிய ‘ஆயில் ரேகை’ புத்தகத்தில் இந்த டாலர் உலக கரன்சியாக முன்வைக்கப்பட்டிருப்பதன் பின்புலத்தினை அரசல்புரசலாக சொல்லியிருப்பார்.

உலகிற்கு அமெரிக்க டாலர் தவிர்த்த ஒரு உலக கரன்சி வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகளுமில்லை. ஆனால் எப்போது என்பது தான் கேள்விக் குறி. இன்றைய சூழ்நிலையில் டாலர் தவிர்த்த உலக கரன்சி என்றால், இரண்டாம் நிலையில் இருப்பது யூரோ தான் (26%), மூன்றாவது ஜப்பானிய யென் (8%). ஆனால் இவற்றில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. சீனா தொடர்ச்சியாக தன்னுடைய கரன்சியினை (ரென்பி) செயற்கையாக மேலெழும்ப விடாமல் வைத்திருக்கிறது. இந்தியா ரூபாய்க்கு அந்த நிலையில்லை. அதனால் தான் அமெரிக்க டாலருக்கான மதிப்பு ரூ.43லிருந்து ரூ.52 போய், இப்போது ரூ.50.xx இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சந்தையினை பொறுத்தே நம் ரூபாயின் மதிப்பு மாறும். ஆனால், பிரச்சனை சீனாவிடம் இருக்கிறது.

மிகக் குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து, தன்னுடைய நாட்டு நாணயத்தின் மதிப்பை செயற்கையாக குறைத்து, அதன் மூலம், அமெரிக்காவி்ல் விற்று 2000-2008 கொள்ளை லாபம் பார்த்தார்கள். சம்பாதித்த லாபத்தினை அமெரிக்க அரசாங்க பாண்டுகளிலேயே முதலீடு செய்தார்கள். இதனால் கிட்டத்திட்ட டிரில்லியன் டாலர் கணக்கில் சீன பணம் அமெரிக்காவில் இருக்கிறது. சீனா அதை முன்வைத்து, உலகின் முண்ணனி வல்லரசு நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. உலக கரன்சி வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு செக் வைக்கலாம், மற்றும் தன் பணம் அமெரிக்காவில் இருந்தும், உலக “நன்மைக்காக” உலக கரன்சி கேட்கிறார்கள் என்கிற பெருமிதத்தையும் பெறலாம் என்பது மாதிரியான வழிகளில் யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல.

இப்போதைக்கு உலக கரன்சி என்பது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். அமெரிக்க டாலர் தான் இன்னும் பல வருடங்களுக்கு உலக கரன்சியாக இருக்கப்போகிறது, அதன் பல குறைபாடுகளுடன்.

எந்நேரத்தில் சனிமூலை என்று பெயரிட்டேனோ, போன வார இறுதியில் ஒரு நண்பரோடு திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டிய ஒரு அன்புத் தொல்லை. நண்பர் வேறு வாஸ்து படி, சனிமூலை என்று பெயர் வைத்தால், சனிஸ்வரன் அவனாகவே அழைப்பான், நீங்கள் போனீர்கள் என்றார். ஒரு சனி, இன்னொரு சனியினை எதற்கு பார்க்க போக வேண்டும் என்பது நான் அவரை கேட்காத கேள்வி.

தமிழகத்தினை இன்று வரை நான் முழுமையாக பார்த்ததில்லை. ரயிலில் போவது என்பதே அரிதாகி போனது. பறந்து கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் காரில் சிதம்பரம், மாயவரம், சீர்காழி, காரைக்கால் என ஒன்றரை நாள் சூறாவளி சுற்றுப்பயணம் அதுவும் வார இறுதியில் என்றவுடன் மறுக்க மனமில்லை. காரில் தமிழகத்தினுள் போவது ஒரு அலாதியான அனுபவமாக இருந்தது. வெட்கமாக இருந்தாலும், எனக்கு மும்பாய் தெரிந்த அளவிற்கு தமிழகம் தெரியாது என்பது தான் உண்மை. அதே இந்தவருடமாவது களைய முயல்கிறேன்.

திருநள்ளாறு. சனிஸ்வரன் கோயிலில் அபிஷேகமும், அர்ச்சனையும். 21/2 மணி நேரம் தரையில் நான் உட்கார்ந்ததேயில்லை. ஆனால் வேறுவழியில்லை. சுற்றியுள்ளவர்கள் பக்திமயமாக இருக்கும் போது, நான் மட்டும், சுவரில் வரைந்திருந்த நளன் கதை ஒவியங்களை பார்த்து கொண்டிருந்தேன். பிரகாரம் சுற்றி அம்சமாக வரைந்திருந்தார்கள். நளன் கதையில் நான் பரிதாபப்பட்டது, நளனுக்கோ, தமயந்திக்கோ இல்லை, ருது பர்ணனுக்கு. பாவம், கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்ட நாயகன் போல மொத்த கதையிலும் அவர் வந்து போய்விட்டார். கோயிலில் மற்ற குருக்களோடு பேசிக் கொண்டிருந்தேன். கோயிலின் தங்கமூலாம் பூசிய கலசங்களை லக்‌ஷ்மி மிட்டல் கொடுத்தாராம். சனிஸ்வரன்க்கும் இரும்புக்கும் சாஸ்திரத்தில் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்று சொன்னார்கள். சென்னை எப்போது வந்தாலும், திருநள்ளாறு வராமல் போகமாட்டார், வாராவாரம் அவர் பெயரில் அபிஷேகமும், அர்ச்சனையும் நடத்தி, பிரசாதங்கள் இனனபிற லண்டனுக்கு போகிறதாம். Interesting.

தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஒரு கனபாடிகளை ஒரங்கட்டி தான் மேற்சொன்ன வேலைகள் நடந்தது. கனபாடிகள் என்று சொன்னது சும்மாயில்லை. நிஜமாகவே அவர் “கன” பாடிகள். ஆறடி இரண்டு அங்குல உயரமும், 42-44 இடுப்பளவும் கொண்டு சன்னதியில் நின்றால், அவரை தவிர விக்கிரகத்தையே டெலஸ்கோப் கொண்டுதான் தேடவேண்டும். ’ஆஜானுபாகுவான’ என்கிற தமிழ்வார்த்தைக்கு உதாரணம் தெரியாமல் எட்டாம் வகுப்பிலிருந்து தவித்துக் கொண்டிருந்தேன். அந்த வருத்தத்தை கனபாடிகள் போக்கி விட்டார். அர்ச்சனை முடிந்து வெளியே வந்தவுடன் கூப்பிட குரல் தான் அட்டகாசம் “சாமி தரிசனம் முடிச்சுட்டு வந்தா சாத்துக்குடி ஜூஸ் சாப்பிடணும்னு ஐதீகம் இருக்கு சார்” என்று 3 சாத்துக்குடி ஜூஸ் விற்பவர்கள் அழைத்தார்கள். இப்போது என்னுடைய சந்தேகம் சாமி மீதல்ல. ஐதீகத்தீன் மீது.

தமிழ் சினிமாவின் வீச்சு எவ்வளவு பெரிது என்பது தமிழகத்தில் பயணம் செய்யும் போது தான் தெரிகிறது. சீர்காழியில் ஒரு ஆண்களின் சலூன் கடை பெயர் பலகையில், சிநேகா சிரித்து கொண்டிருக்கிறார். ஸ்ரேயா - சரவணா ஸ்டோர்ஸின் தங்க மாளிகை விளம்பரத்தின் படங்கள் ஊரெல்லாம் இருக்கின்றன. சரவணா ஸ்டோர்ஸின் ஐ.பி ஸ்ரேயா போஸ்டர் இல்லை போலிருக்கிறது. ‘அருந்ததீ’, ‘அயன்’ இரண்டு படங்கள் தான் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்திருக்கின்றன. சிதம்பரம் ‘வடுகநாதன் டிடிஎஸ்”ஸில் அனுஷ்காவின் பெரிய போஸ்டர் இருக்கிறது. அம்மணியினை “இரண்டு” படத்தின் ”மொபலைலா” பாடலில் பார்த்த போதே ஒரு ரவுண்டு வரும் சாத்தியங்கள் தெரிந்தது.’அருந்ததீ’யில் அனுஷ்காவின் கண்கள் சாலையில் போகிற வருகிறவர்களேயே பார்த்துக் கொண்டு இருக்கிறது. கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் வரை ‘அம்மா’ ‘அய்யா’ பேனர்கள்தான் அதிகமாக இருக்கிறது. அன்புமணி ராமதாஸினை எவ்வளவு மோசமாக வரையமுடியுமோ அவ்வளவு மோசமாக வரைந்து, அதற்கு கீழே பத்து பதினைந்து அமைப்பாளர்கள் பெயர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

குட்டி, குட்டி ஊர்களின் பெயர்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. “காத்திருப்பு” “பூம்பாழை” “வல்லம்படுகை”. அரசாங்கம் தரும் இலவச வேளாண்மை மின்சாரத்தில் பல கான்கீரிட் வீடுகளில் சன் டைரக்ட் டி.டி.எச் ஆண்டெனா. எல்லா குட்டியூர்களிலும் தமிழக அரசின் “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றொரு பெயர்ப்பலகை பார்த்தேன். “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றால் என்ன ?யாருக்காவது தெரியுமா? எல்லா கிராமங்களிலும் ஒரு “கீற்று மண்டி” கட்டாயமாக இருக்கிறது. சாப்பாட்டு கடைகளில் ‘புரோட்டா’ என்று எழுதியிருக்கிறார்கள். சென்னையில் அது ‘பரோட்டா’. எது சரியான உச்சரிப்பு ?

திருநள்ளாறு முடிந்து, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்தால், தேர் நகர் உலா போய் இருக்கிறது என்று சொன்னார்கள். நண்பர் அபராத காணிக்கை மட்டும் செலுத்திவிட்டு கிளம்பி ஞாயிறு இரவு சென்னை வந்து சேர்ந்தோம். மேல்மருவத்தூர் தாண்டி சாப்பிட அமர்ந்த இடத்தில் “தமிழ் முரசு” படிக்க கிடைத்தது. ராமநாதபுரத்தில் திராவிட கட்சியின் சார்ப்பாக ஜே.கே.ரித்திஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். சனிஸ்வரன் தன் வேலையை தமிழ்நாட்டில் ஆரம்பித்து விட்டான் என்று தோன்றுகிறது.

இந்த வார ஜோக்

முதல் முறையாக ஒரு சர்தார் அமிர்தசரஸிலிருந்து பம்பாயிற்கு விமானத்தில் போனான். அவனுடைய நண்பர்கள் எல்லாம் விமானம் பறப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். ஏக குஷி அவனுக்கு.

பம்பாயில் இறங்கியபின் அவன் கோவமாக அவன் நண்பர்களுக்கு போன் போட்டான்.

“நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், இந்த விமானம் பறக்கவேயில்லை. நான் உள்ளே போய் உட்கார்ந்த போது இது சாலையில் சென்று கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் வெளியில் பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். நான் மீண்டும் முழித்து பார்க்கும்போது அதே போல சாலையில் போய் கொண்டிருந்தது. பம்பாய் வந்துவிட்டது என்று அறிவித்தார்கள். இந்த டிரைவர் பறக்க பயந்து போய், தரை வழியாகவே என்னை பம்பாய் கொண்டு வந்துவிட்டான்.”

April 03, 2009

சனி மாறி புதன் :)

தவிர்க்கமுடியாத பயணங்கள் இருப்பதால், இந்த வார பத்தி, புதன்கிழமை வெளிவரும். வாசகர்கள் மன்னிக்க.