சீட்டுக் கிழித்தப்பின் சிக்கனமாய் இந்தியில்
கூட்டம் தலையெண்ணிக் குர்னாம்சிங்க் ஒட்டச்
சமொசாவும் கெட்டிலில் சாயுமாய் நாயர்
விமானம் பறக்குது பார்.
[ராயர் காபி கிளப் - இரா.முருகன் - பக்கம் 22]
சில ஆருடங்கள் பொய்த்துப் போவதில் எல்லாருக்கும் சந்தோஷமே. தக்காண ஏர்லைன்ஸ் பற்றி முருகன் எழுதியது மேலே. டெக்கான், கிங்பிஷர் ரெட்டாகி, மல்லையா கிங்பிஷர் ப்ராண்டையை அடகு வைத்து ரூ.2000 கோடி வாங்கி, வெட்டியாய் என்.டி.டி.வி குட் டைம்ஸ் நடத்தி, வருடக் கடைசியில் ’ராம் வாக்’கி, அசத்தல் அழகிகளாக எடுத்து, ஹவாயில் ஷூட் செய்து, காலண்டர் செய்து, விநியோகித்து, மால்களின் உயர்தர சலூன்களில், முலைக்காம்புகள் மட்டும் தெரியாமல், மற்றெல்லாம் தெரிய போஸ் கொடுக்கும் சுந்தரிகளை முடிவெட்டும் போது ஒரக்கண்ணால் கற்பழித்து, ரூ.300 மொய் எழுதி, வெளியே வந்தால் சென்னை வெயில் சுள்ளென்று முறைக்கிறது.
ஏர் ஏஷியா திருச்சி - கோலாம்பூர் விமானத்தில், கை முறுக்கு விற்காததுதான் பாக்கி. குறைவிலை விமானச் சேவைகள், கார்ப்பரேஷன் சாக்கடை கொசுக் குடும்பம் மாதிரி பரவி, இன்றைக்கு முழுச் சேவை விமான சேவைகளே குறைவிலை விமானச் சேவைகளோடு கட்டி தொழில் நடத்தவேண்டிய கட்டாயம். பொருளாதாரமும், பிஸினஸ் மாடல் மாற்றங்களும் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இதை வைத்துக் கொண்டு, ஜெர்க்கடிக்க Clayton Christensen-இன் Innovation Dillemma & Innovation Solution படிக்கலாம். Disruptive Innovation என்பதை தெரிந்துக் கொண்டால், மீட்டிங்களில் ஜல்லியடித்து, ஸ்ட்ராடஜி குழுவில் இணைந்து, ப்ரோமோஷன் வாங்கி, பேங்க் பாலன்ஸ் பெருக்கி, பின்னாளில் way back in 2010, i was the head of என்று விர்ட்சுவல் சுவர்களில் பேரன்களோடு கொஞ்சலாம். இப்போதைக்கு, நாஸ்ட்ராடாமஸ் இதை ஏற்கனவே சொன்னார் என்று சொல்லும் கும்பல் இணையத்தில் இருக்கும்; அவர்களோடு போய் சேர்ந்துக் கொள்ளலாம்.
முபாரக் ‘முபாரக்’ சொல்லாமல் ஒடிப் போனார். மக்கள் வெள்ளம், பிரமிடுகளை மறைத்தது என்று எதாவது தமிழ் தினசரியில் எழுதியிருப்பார்கள். கடாபி யார் மீது பழிப் போடலாம் என்று நாளொரு நியுஸும், பொழுதொரு பாமுமாய் எண்ணெய்க் கிணறுகளை நாசம் பண்ணத் திட்டம் போடுகிறார். லிபியர்கள் ரோட்டுக்கு வந்து கண்டதையெல்லாம் எரிக்கிறார்கள். துனிசியாவிலும், அல்ஜீரியாவிலும் பிரச்சனைகள். சுதந்திரம் என்பதின் எல்லைகள் என்னவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இடதுசாரிகள், அறிவுஜீவிகள், ஆளுங்கட்சி எதிர்ப்பாளர்கள் எல்லாம், எகிப்தில் நடந்தது இந்தியாவிலும் நடக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை. எகிப்தின் வெற்றிக்குப் பின், எல்லாரும் தாங்களும் சுதந்திரமடைந்தால் சுபிட்சமாகிவிடுமோம் என்கிற கனவில் அல்லாஹூ அக்பர் கோஷத்தோடு, கொடிப் பிடிக்கிறார்கள்.
எங்களுடைய பக்கத்து ஊரிலும் இப்படித்தான் நடந்தது. தீர்க்கமான ஒருவர் தன் மக்களுக்காக, சண்டைப் போட்டு, பிரித்து வாங்கிக் கொண்டு லிபரல் இஸ்லாமிய தேசமாக்க முயற்சித்தார். அவர் மண்டையைப் போட்டு, பின் வந்தவர்கள் அப்பம் பிடுங்கின கதையாய் முயற்சித்து, ராணுவத்தின் கீழ்ப் போய், இன்று வரைக்கும் விளங்காமலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது - பாகிஸ்தான். சர்தாரிகள் எதற்கும் ஜவாப்தாரிகள் இல்லை போலும். கோர்ப்பசேவின் பெத்ரோஸ்ய்கா-யும், பின் தூங்குமூஞ்சி எல்ஸ்டினின் கட்டற்ற சுதந்திரமும், அலிகார்ஜ்களின் (Oligarch)பங்குப் போடலும், பின்னால் அலிகார்ஜ்கள் பிடிக்காத கே.ஜி.பியிலிருந்து வந்த விளாதிமிர் புதினின் இரும்பு கரமும், ஜால்ரா மெடவடேவும் - அன்றிலிருந்து இன்று வரை ரஷ்யாவில் ’சுதந்திரம்’ படும் பாட்டை யாரும் கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. எகிப்தின் கோஷம் முபாரக் ஒழியவேண்டும். ஒழிந்தபின் என்ன? யாரும் யோசித்தாகத் தெரியவில்லை. இப்போது கட்டுப்பாடு ராணுவத்தின் கீழிருக்கிறது. History hopefully not repeats itself.
கோவாவில் மகேஷ் பூபதி - லாரா தத்தா திருமணம் நடந்து முடிந்தது. லாரா தத்தாவை எப்படி உலக அழகியாக்கினார்கள் என்பது வரலாற்றுப் பிரச்சனை. ஒரு ஹிட் கூட எனக்கு தெரிந்து லாரா தத்தா இந்தியில் தரவில்லை. மொக்கை சல்மான் படங்களில் வந்ததுதான் ஒரே தகுதி. பாலிவுட் எப்படி இயங்குகிறது என்று புரியவே இல்லை. ஹ்ரித்திக் ரோஷன் வரும் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு எபிசோடுக்கு ரூ.2கோடி சம்பளமாம். திங்கள் முதல் வியாழன் வரை எல்லோரும், வெள்ளி முதல் ஞாயிறு வரை நடக்கும் யார் பார்ட்டிக்கு போக வேண்டும் என்கிற திட்டத்திலேயே இருப்பார்கள் போல. ரஜினி ரசிகர்களை நக்கலடிக்கும் அறிவுஜீவிகள் ஒரு எட்டு மும்பைக்குப் போய் வருதல் நலம்.
சரி தத்தாவுக்கு வருவோம். சுஷ்மிதா சென் - ஐஸ்வர்யா ராய் ஆண்டிகளுக்கு பின்னாடி வந்த அழகிகளில், டயானா ஹேடனுக்கு சற்று மேலே இருக்கிற ஒரேக் காரணத்தால் இந்தியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு வேளை திரையில் பார்க்காத வேறு தகுதிகள் இருக்கக்கூடும். லியாண்டரோடு டூ விட்டு, இப்போது தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார் மகேஷ் பூபதி. ஏற்கனவே மணமுறிவானவர். முதல் மணம் சென்னையைச் சேர்ந்த மாடல் ஸ்வேதா ஜெய்சங்கரோடு. இப்போது லாரா தத்தாவோடு. இந்த மாதிரி பிரபலங்கள் மணம் செய்தலும், பின் விலகுதலும் சாதாரணமாய் நடக்கிறது. மத்தியத்தர வர்க்கம் தான், திருமணங்களை செதுக்கிய சிற்பங்கள் மாதிரி நீண்டநாள் தாங்கும் சமாச்சாரமாய் பார்க்கிறது. pre-nupital agreement-டோடு தான் மோதிரமோ, தாலியோ மாற்றும் காலமிது. இணையாய் வாழ்ந்தால் சரி. ஸ்வெதா? அவருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் அதே போன வாரம் திருமணம் நடந்தது. நாராசமாய் கவுண்டமணியின் ‘தொழிலதிபர்’ கமெண்ட் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது.
ட்வீட்டரில் ஏழை, ஏழ்மைப் பற்றி 4 வரி எழுதியதற்கு நண்பர்கள் பாய்ந்து விட்டார்கள். நண்பர் அனாதை ஆனந்தன் நியுயார்க் டைம்ஸ் சுட்டிக் கொடுத்து இந்தியாவில் குழந்தைகள் குறைச்சத்தோடு இருக்கிறது என்றார். இன்னும் சில நண்பர்கள், முதலாளித்துவ அடிவருடி என்றும், மாமல்லன் பொலிடிக்கல் கரெக்ட்னெஸுக்கு எதிர் இன்சென்சிடிவிடியா எனக் கேள்விக் கேட்டார். முதலில் இந்த ‘நான் கடவுள்’ செண்டிமெண்டிலிருந்து வெளியே வருவோம். நான் இந்தியாவில் ஏழைகள் இல்லையென்றோ, ஏழ்மையே இல்லையென்றோ சொல்லவில்லை. நாம் தேவையில்லாமல், ஏழ்மையை romanticize பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
துலாப்பாரத சாரதா ரேஞ்சுக்கு பீல் பண்ணத் தேவையில்லை. நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் 30 வருடங்களில் ஒரு பட்டினி சாவும் இல்லை. இந்தியாவில் சாப்பாடு போகாத இடங்களிலெல்லாம் செல்போனும், சாடிலைட் டிவியும் போய் விட்டது. வேலையில்லை என்று இன்று எந்த மெட்ரோவிலும் கதைவிட முடியாது. கொஞ்சம் கிராமப்பக்கம் போய்க் கேட்டால், NREGAவுக்குப் பிறகு, நடவுக்கு, அறுவடைக்கும் ஆட்கள் இல்லையென்று புலம்புகிறார்கள். பஜாஜ் பல்சரும், டிவிஎஸ் அபாச்சியும் செம்மண் சாலைகள் மிதித்து நாட்களாகின்றன. மார்க்சீயர்களும், அறிவுஜீவுகளும் தெருமுனைக் கூட்டங்கள் போட்டு எளிமையும், வளமையும் பற்றிப் பேசட்டும். எனக்கு என் ப்ளாஸ்மா டிவியும், கிரிக்கெட்டும், ரியால்டி ஷோக்களும் முக்கியம். கம்யுனிஸம் பேசும் காம்ரேட்டுகள், ரஷ்யாவைப் பாருங்கள். சீனாவைப் பாருங்கள். ரஷ்யர்களே லெனின்கிராடினை பீட்டர்ஸ்பர்காக மாற்றி மெக்டோனல்ட்ஸும், கேப் கடைகளுமாக மாற்றி விட்டார்கள். இதனால், இந்தியாவில் சுரண்டல் இல்லை; மொள்ளமாரித்தனமில்லை; இந்தியா ஒளிர்கிறது என்று அர்த்தமில்லை. மார்க்ஸியர்களும், மாவோயிஸ்டுகளும் போகாத இடங்களில் கூட மீடியா போய்விட்டது. இனி ஏழ்மையை அதுப் பார்த்துக் கொள்ளும்.
சனிதோறும் ஒரு பத்தி
February 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment