இதற்கிடையில் சீனா திடீரென ஞானோதயம் பெற்று அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருக்கக்கூடாது. அதற்கு மாற்றாக ஐ.எம்.எப்பின் அதிகாரத்தினை பயன்படுத்தி ஒரு புதிய கரன்சியினை உலக கரன்சியாக அறிவிக்கவேண்டும் என்று ஒரு குண்டினை தூக்கிப் போட்டிருக்கிறது. அமெரிக்க டாலர் உலக கரன்சியாக இருப்பதால் தான் அமெரிக்க பெட்ரல் ரிசர்வும், அரசாங்கமும் எவ்விதமான லஜ்ஜையும் இல்லாமல், கேட்பவர்களுக்கு எல்லாம் அச்சடித்து கொடுத்து, அமெரிக்க டாலரினை வெறும் பேப்பர் கரன்சியாக மாற்றியிருக்கிறார்கள். புஷ் கண்ட புண்ணியம் இது தான். உள்நாட்டு செலவுகள், போர்கள், கேணத்தனமான முதலீட்டு திட்டங்கள், சப்-பிரைமில் வாரி இறைத்த பணம் என்று ’பிரிண்டர் கண்ட இடமெல்லாம் டாலர்’ என்று குதியாட்டம் போட்டிருக்கிறார்கள். இடதுசாரிகள் மற்றும் கம்யுனிச நாடுகள் இதையே தான் 30 வருடங்களாக வாய் கிழிய கத்திக் கொண்டிருந்தன. ஹ்யூகோ
உலகிற்கு அமெரிக்க டாலர் தவிர்த்த ஒரு உலக கரன்சி வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகளுமில்லை. ஆனால் எப்போது என்பது தான் கேள்விக் குறி. இன்றைய சூழ்நிலையில் டாலர் தவிர்த்த உலக கரன்சி என்றால், இரண்டாம் நிலையில் இருப்பது யூரோ தான் (26%), மூன்றாவது ஜப்பானிய யென் (8%). ஆனால் இவற்றில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. சீனா தொடர்ச்சியாக தன்னுடைய கரன்சியினை (ரென்பி) செயற்கையாக மேலெழும்ப விடாமல் வைத்திருக்கிறது. இந்தியா ரூபாய்க்கு அந்த நிலையில்லை. அதனால் தான் அமெரிக்க டாலருக்கான மதிப்பு ரூ.43லிருந்து ரூ.52 போய், இப்போது ரூ.50.xx இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சந்தையினை பொறுத்தே நம் ரூபாயின் மதிப்பு மாறும். ஆனால், பிரச்சனை சீனாவிடம் இருக்கிறது.
மிகக் குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து, தன்னுடைய நாட்டு நாணயத்தின் மதிப்பை செயற்கையாக குறைத்து, அதன் மூலம், அமெரிக்காவி்ல் விற்று 2000-2008 கொள்ளை லாபம் பார்த்தார்கள். சம்பாதித்த லாபத்தினை அமெரிக்க அரசாங்க பாண்டுகளிலேயே முதலீடு செய்தார்கள். இதனால் கிட்டத்திட்ட டிரில்லியன் டாலர் கணக்கில் சீன பணம் அமெரிக்காவில் இருக்கிறது. சீனா அதை முன்வைத்து, உலகின் முண்ணனி வல்லரசு நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. உலக கரன்சி வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு செக் வைக்கலாம், மற்றும் தன் பணம் அமெரிக்காவில் இருந்தும், உலக “நன்மைக்காக” உலக கரன்சி கேட்கிறார்கள் என்கிற பெருமிதத்தையும் பெறலாம் என்பது மாதிரியான வழிகளில் யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல.
இப்போதைக்கு உலக கரன்சி என்பது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். அமெரிக்க டாலர் தான் இன்னும் பல வருடங்களுக்கு உலக கரன்சியாக இருக்கப்போகிறது, அதன் பல குறைபாடுகளுடன்.
எந்நேரத்தில் சனிமூலை என்று பெயரிட்டேனோ, போன வார இறுதியில் ஒரு நண்பரோடு திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டிய ஒரு அன்புத் தொல்லை. நண்பர் வேறு வாஸ்து படி, சனிமூலை என்று பெயர் வைத்தால், சனிஸ்வரன் அவனாகவே அழைப்பான், நீங்கள் போனீர்கள் என்றார். ஒரு சனி, இன்னொரு சனியினை எதற்கு பார்க்க போக வேண்டும் என்பது நான் அவரை கேட்காத கேள்வி.
தமிழகத்தினை இன்று வரை நான் முழுமையாக பார்த்ததில்லை. ரயிலில் போவது என்பதே அரிதாகி போனது. பறந்து கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் காரில் சிதம்பரம், மாயவரம், சீர்காழி, காரைக்கால் என ஒன்றரை நாள் சூறாவளி சுற்றுப்பயணம் அதுவும் வார இறுதியில் என்றவுடன் மறுக்க மனமில்லை. காரில் தமிழகத்தினுள் போவது ஒரு அலாதியான அனுபவமாக இருந்தது. வெட்கமாக இருந்தாலும், எனக்கு மும்பாய் தெரிந்த அளவிற்கு தமிழகம் தெரியாது என்பது தான் உண்மை. அதே இந்தவருடமாவது களைய முயல்கிறேன்.
திருநள்ளாறு. சனிஸ்வரன் கோயிலில் அபிஷேகமும், அர்ச்சனையும். 21/2 மணி நேரம் தரையில் நான் உட்கார்ந்ததேயில்லை. ஆனால் வேறுவழியில்லை. சுற்றியுள்ளவர்கள் பக்திமயமாக இருக்கும் போது, நான் மட்டும், சுவரில் வரைந்திருந்த நளன் கதை ஒவியங்களை பார்த்து கொண்டிருந்தேன். பிரகாரம் சுற்றி அம்சமாக வரைந்திருந்தார்கள். நளன் கதையில் நான் பரிதாபப்பட்டது, நளனுக்கோ, தமயந்திக்கோ இல்லை, ருது பர்ணனுக்கு. பாவம், கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்ட நாயகன் போல மொத்த கதையிலும் அவர் வந்து போய்விட்டார். கோயிலில் மற்ற குருக்களோடு பேசிக் கொண்டிருந்தேன். கோயிலின் தங்கமூலாம் பூசிய கலசங்களை லக்ஷ்மி மிட்டல் கொடுத்தாராம். சனிஸ்வரன்க்கும் இரும்புக்கும் சாஸ்திரத்தில் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்று சொன்னார்கள். சென்னை எப்போது வந்தாலும், திருநள்ளாறு வராமல் போகமாட்டார், வாராவாரம் அவர் பெயரில் அபிஷேகமும், அர்ச்சனையும் நடத்தி, பிரசாதங்கள் இனனபிற லண்டனுக்கு போகிறதாம். Interesting.
தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஒரு கனபாடிகளை ஒரங்கட்டி தான் மேற்சொன்ன வேலைகள் நடந்தது. கனபாடிகள் என்று சொன்னது சும்மாயில்லை. நிஜமாகவே அவர் “கன” பாடிகள். ஆறடி இரண்டு அங்குல உயரமும், 42-44 இடுப்பளவும் கொண்டு சன்னதியில் நின்றால், அவரை தவிர விக்கிரகத்தையே டெலஸ்கோப் கொண்டுதான் தேடவேண்டும். ’ஆஜானுபாகுவான’ என்கிற தமிழ்வார்த்தைக்கு உதாரணம் தெரியாமல் எட்டாம் வகுப்பிலிருந்து தவித்துக் கொண்டிருந்தேன். அந்த வருத்தத்தை கனபாடிகள் போக்கி விட்டார். அர்ச்சனை முடிந்து வெளியே வந்தவுடன் கூப்பிட குரல் தான் அட்டகாசம் “சாமி தரிசனம் முடிச்சுட்டு வந்தா சாத்துக்குடி ஜூஸ் சாப்பிடணும்னு ஐதீகம் இருக்கு சார்” என்று 3 சாத்துக்குடி ஜூஸ் விற்பவர்கள் அழைத்தார்கள். இப்போது என்னுடைய சந்தேகம் சாமி மீதல்ல. ஐதீகத்தீன் மீது.
தமிழ் சினிமாவின் வீச்சு எவ்வளவு பெரிது என்பது தமிழகத்தில் பயணம் செய்யும் போது தான் தெரிகிறது. சீர்காழியில் ஒரு ஆண்களின் சலூன் கடை பெயர் பலகையில், சிநேகா சிரித்து கொண்டிருக்கிறார். ஸ்ரேயா - சரவணா ஸ்டோர்ஸின் தங்க மாளிகை விளம்பரத்தின் படங்கள் ஊரெல்லாம் இருக்கின்றன. சரவணா ஸ்டோர்ஸின் ஐ.பி ஸ்ரேயா போஸ்டர் இல்லை போலிருக்கிறது. ‘அருந்ததீ’, ‘அயன்’ இரண்டு படங்கள் தான் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்திருக்கின்றன. சிதம்பரம் ‘வடுகநாதன் டிடிஎஸ்”ஸில் அனுஷ்காவின் பெரிய போஸ்டர் இருக்கிறது. அம்மணியினை “இரண்டு” படத்தின் ”மொபலைலா” பாடலில் பார்த்த போதே ஒரு ரவுண்டு வரும் சாத்தியங்கள் தெரிந்தது.’அருந்ததீ’யில் அனுஷ்காவின் கண்கள் சாலையில் போகிற வருகிறவர்களேயே பார்த்துக் கொண்டு இருக்கிறது. கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் வரை ‘அம்மா’ ‘அய்யா’ பேனர்கள்தான் அதிகமாக இருக்கிறது. அன்புமணி ராமதாஸினை எவ்வளவு மோசமாக வரையமுடியுமோ அவ்வளவு மோசமாக வரைந்து, அதற்கு கீழே பத்து பதினைந்து அமைப்பாளர்கள் பெயர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறது.
குட்டி, குட்டி ஊர்களின் பெயர்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. “காத்திருப்பு” “பூம்பாழை” “வல்லம்படுகை”. அரசாங்கம் தரும் இலவச வேளாண்மை மின்சாரத்தில் பல கான்கீரிட் வீடுகளில் சன் டைரக்ட் டி.டி.எச் ஆண்டெனா. எல்லா குட்டியூர்களிலும் தமிழக அரசின் “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றொரு பெயர்ப்பலகை பார்த்தேன். “வாழ்ந்து காட்டுவோர் சங்கம்” என்றால் என்ன ?யாருக்காவது தெரியுமா? எல்லா கிராமங்களிலும் ஒரு “கீற்று மண்டி” கட்டாயமாக இருக்கிறது. சாப்பாட்டு கடைகளில் ‘புரோட்டா’ என்று எழுதியிருக்கிறார்கள். சென்னையில் அது ‘பரோட்டா’. எது சரியான உச்சரிப்பு ?
திருநள்ளாறு முடிந்து, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்தால், தேர் நகர் உலா போய் இருக்கிறது என்று சொன்னார்கள். நண்பர் அபராத காணிக்கை மட்டும் செலுத்திவிட்டு கிளம்பி ஞாயிறு இரவு சென்னை வந்து சேர்ந்தோம். மேல்மருவத்தூர் தாண்டி சாப்பிட அமர்ந்த இடத்தில் “தமிழ் முரசு” படிக்க கிடைத்தது. ராமநாதபுரத்தில் திராவிட கட்சியின் சார்ப்பாக ஜே.கே.ரித்திஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். சனிஸ்வரன் தன் வேலையை தமிழ்நாட்டில் ஆரம்பித்து விட்டான் என்று தோன்றுகிறது.
இந்த வார ஜோக்
முதல் முறையாக ஒரு சர்தார் அமிர்தசரஸிலிருந்து பம்பாயிற்கு விமானத்தில் போனான். அவனுடைய நண்பர்கள் எல்லாம் விமானம் பறப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். ஏக குஷி அவனுக்கு.
பம்பாயில் இறங்கியபின் அவன் கோவமாக அவன் நண்பர்களுக்கு போன் போட்டான்.
“நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், இந்த விமானம் பறக்கவேயில்லை. நான் உள்ளே போய் உட்கார்ந்த போது இது சாலையில் சென்று கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் வெளியில் பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். நான் மீண்டும் முழித்து பார்க்கும்போது அதே போல சாலையில் போய் கொண்டிருந்தது. பம்பாய் வந்துவிட்டது என்று அறிவித்தார்கள். இந்த டிரைவர் பறக்க பயந்து போய், தரை வழியாகவே என்னை பம்பாய் கொண்டு வந்துவிட்டான்.”
//நண்பர் வேறு வாஸ்து படி, சனிமூலை என்று பெயர் வைத்தால், சனிஸ்வரன் அவனாகவே அழைப்பான், நீங்கள் போனீர்கள் என்றார். ஒரு சனி, இன்னொரு சனியினை எதற்கு பார்க்க போக வேண்டும் என்பது நான் அவரை கேட்காத கேள்வி.//
ReplyDeleteLOL...வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை :-)
//ஹ்யூகோ செவிஸ் (வெனிசூலா)//
ReplyDelete’ஹ்யூகோ சாவேஸ்’ என்பதுதான் சரியான உச்சரிப்பு. கொஞ்சம் சரி பாருங்கள்.
அமெரிக்கா இன்னமும் தனது கையிருப்பு தங்கத்தையும், எண்ணெய் வளத்தையும் தற்காத்துக் கொண்டுதானிருக்கிறது. எதிர்காலத்தில் மாற்று எரிபொருள் வரும் பட்சத்தில் பல ஈக்குவேஷன்கள் இயற்கையாகவே மாறிப் போய்விடும்.
Interesting Read, as always! Can I assume that this friend of yours (with shom you travelled to thirunaLLaRu) is from Triplicane ? :)
ReplyDelete