மேலே உள்ள படத்தை கிளிக்கினால் பெரியதாக தெரியும். ஒட்டு மொத்த ”நிதி கெட்ட கேட்டையும்” படம் வ்ரைந்து பாகங்களை குறித்துள்ளார்கள். Infographics என்றழைக்கப்படும் வகையறாவில் நான் சமீபத்தில் மிகவும் ரசித்த படமிது.
எம்.ஐ.டி உலகின் மிக முக்கியமான இடம்.யிலிருந்து வரும் டெக்னாலஜி ரெவியுவினை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இந்த எம்.ஐ.டி, குரோம்பேட்டை ஸ்டேஷன் தாண்டின எம்.ஐ.டி அல்ல. மசாசூசேட்ட்ஸ் இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜி. பல கண்டுபிடிப்புகள் கண்டறிய தூண்டுகோலான கல்வி நிறுவனம். கல்வி நிறுவனம் என்பதை விட மிகப் பெரிய ஆராய்ச்சி கட்டிடம் என்பது தான் பொறுத்தமான வார்த்தையாக இருக்கமுடியும்.
எம்.ஜ.டியிலிருந்து டெக்னாலஜி ரிவியு(Technology Review) என்கிற ஒரு இதழ் வருகிறது. இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. கிட்டத்திட்ட 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இல்லாவிடினும், விட்டுவிட்டாவது படித்து வருகிறேன். அவர்கள் வருடாவருடம் ஒரு லிஸ்ட் வெளியிடுவார்கள் ”10 முக்கியமான தொழில்நுட்பங்கள்” அதில் இந்த வருடம் முக்கியமானது சோலார் பவர். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது.
இது உண்மையிலேயே ரொம்ப பழசு. 1960களில் ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. போட்டோ வொல்வோட்டிக் செல்கள் எஸ்.எம்.எஸ் மொழியில் ”பிவி செல்ஸ்” என்றழைக்கப்படும் செல்களை சை-பை படங்களில் பார்த்திருக்கலாம். இந்தியாவில் மோசர் பெர் நிறுவனம் தொழிற்சாலை போட்டு தயாரித்து கொண்டிருக்கிறது. கடைசியாக கேட்டதில் 2013 வரைக்கும் அவர்களின் ஆர்டர் புக் நிரம்பி வழிகிறது. மாற்று / சுத்த / பசுமை மின்சாரம் (Alternative Energy / Clean Energy / Green Energy ) என்று வகைவகையாக அழைக்கப்படும் முயற்சிகள் குளோபல் வார்மிங் காலக்கட்டத்தில் ஒரு cult ஸ்டேடஸுக்கு வந்துவிட்டது. முக்கியமான விஷயம் மாற்று எரிசக்தி விஷயத்தில், மூலப்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். The raw material and running cost of procurement is near zero. அது அலைகளோ, காற்றோ, அருவியோ, சூரியஒளியோ இன்னபிறவோ. அல் கோர் இதை படமாக்கி, எல்லாரையும் பயமுறுத்தி ஆஸ்கார் தட்டிக் கொண்டு போய்விட்டார்.
சூரியயொளி மின்சாரம் என்பது உலக விஞ்ஞானிகளின் மிகப்பெரிய கனவு. மற்ற எல்லா இயற்கை வழிகளை விட, சூரியயொளி வஞ்சனையில்லாமல் அமெரிக்காவிலிருந்து அம்பாசமுத்திரத்தின் குக்கிராமம் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது. மாற்று மின்சார வழிகள் என்று சொல்லப்படும், நீர், காற்று, மாட்டுச்சாணம் எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய பிரச்சனை அதன் மூலப்பொருட்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்போதைய பிவிசெல்ஸ்களின் விலையதிகம். இன்னொரு பிரச்சனை அதனை அரசாங்கமும், வீடு கட்டும் ரியல் எஸ்டேட் காரார்களும் புறக்கணிப்பது.
போன வார பிஸினஸ் லைனில், ஒரு பழைய கட்டுரை ஒன்றினை மறு வெளியீடு செய்திருந்தார்கள். இந்தியாவின் மொத்த எரிபொருள், மின்சார தேவையில் 33% சூரியஓளியிலிருந்தே எடுத்துக் கொள்ள முடியும் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.
இந்த பொருளாதார மந்தத்தினை அறிவுள்ள அரசாங்கங்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டின் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தன்னிறைவினை அடுத்த மூன்றிலிருந்து ஐந்தாண்டு காலக்கட்டத்துக்குள் உலகத்தரத்துக்கு இணையாக கொண்டு வந்துவிடலாம்.
சென்னையில் 365நாளில் 325 நாள் கன்னா பின்னாவென்று வெயிலடிக்கும். ஆனால் அது பெங்களூரில் குறைவு. பெங்களூரில் சூரியஒளியில் இயக்கும் தண்ணீர் ஹீட்டர்கள் வாங்கினால், அரசு அதற்கு மானியம் தருகிறது. சென்னையில் அது இல்லை. இதற்கு முன்பான அரசில் எப்படி மழைநீர் சேகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்த பட்டதோ, அதே போல சூரியஒளியில் இயங்கும் பல்வேறு பொருட்களை சென்னை மாதிரியான சூடு பிரதேசத்தில் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று தோன்றுகிறது. அது நடக்கும் வரையில், நாம் சூரிய ஒளியினை துணி காய போடவும், ஜவ்வரிசி வடாம், வத்தல் பிழியவும் தான் உபயோகப்படுத்தி கொண்டிருக்கமுடியும்.
”தூக்கு மேடை பஞ்சு மெத்தை. தென்றலை தீண்டியதில்லை. தீயினை தாண்டியிருக்கிறேன்” என்று வசனம் பேசாத குறையாய், ஒரு வழியாய் ரத்தன் டாடா இந்த வார ஆரம்பத்தில் டாடாவின் நேநோ - ஒரு இலட்சரூபாய் காரினை அறிமுகப்படுத்தி விட்டார். ஏபரலில் மூன்று வாரங்களில் புக்கிங் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு இலட்ச ரூபாய்க்கு கார் என்பது உலக ஆட்டொமொபைல் வரலாற்றில் நிச்சயமாக ஒரு சாதனை. டாலரில் கணக்குப் போட்டால் வெறுமனே $2000 தான் வருகிறது. முதன்முறையாக ஒரு காரினை ஆன்லைனில் புக் செய்ய முடியும். டாடா நேனோ சர்வ நிச்சயமாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு உண்டான வரவேற்பினைப் போல, மிக அதிக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மிக சாதுர்யமாக அப்ளிகேஷன் பார்முக்கு ரூ.300, முழு புக்கிங்கிற்கு 75,000+ என கணக்குப் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். டாடா மோட்டார்ஸ் குறைந்தது 5 இலட்சம் மக்கள் இந்த முதல் பங்கீட்டில் பங்குபெற முயற்சிப்பார்கள் என்று கணக்கு போட்டிருக்கிறது. முதல் தவணையில் 50000 கார்கள் மட்டுமே பெறமுடியும், அதுவும் கணிணி தேர்ந்தெடுக்கும் ஒரு பட்டியலிலிருந்து. இந்த மாதிரியான முன்மாதிரிகள் இதற்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் துறையில் இல்லை. 10 இலட்சம் மக்கள் பங்கு கொண்டால், டாடா குழுமத்திற்கு குறைந்தது ரூ.950 கோடிகள் கிடைக்கும் என்று கணக்கிட்டுள்ளார்கள். பொருளாதார மந்த சூழ்நிலை மிகுந்த நேரத்தில் ரூ.950 கோடிகள் என்பது அருமையான விஷயம். யார் இந்த திட்டங்களை வகுத்தார்களோ, அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். மிக சாமர்த்தியமான வேலை.
இந்த மாதிரியான ப்ரொடக்ட் இன்னோவேஷன்களை தொடர்ச்சியாக செய்தாலேயொழிய, நாம் பெருமளவில் உலக சந்தையினை பிடிக்க இயலாது. சேவை ரீதியிலான இன்னோவேஷன்களை நாம் தொடர்ச்சியாக நாம் மென்பொருள் துறையில் செய்து கொண்டு வருகிறோம். பொருள்ரீதியான இன்னோவேஷன்களும் முக்கியம். பின்லாந்து என்கிற ஒரு நாடு இன்றைக்கு நோக்கியா என்கிற ஒற்றை செல் நிறுவனத்தின்மூலம் தான் பலபேருக்கு தெரியும்.
மூன்று சம்பந்தமில்லாத விஷயங்கள்
- இந்த வருடம் வரும் சூரிய கிரகணம் (ஜூலை 22, 2009) வானியலில் மிக முக்கியமான விஷயம். இந்தியாவில் இந்தமுறை பல நகரங்களில் இது முழுமையாக தெரியும். இதற்கடுத்து இந்தமாதிரியான ஒரு முழு கிரகண பார்வை இந்தியாவில் 2114இல் தான் கிடைக்கும். அதற்குள் இந்த பத்தி எழுதுபவனின் கதை முடிந்துவிட்டிருக்கும்.
- மத்திய ரிசர்வ் வங்கியின், கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயம்."The font size of the Most Important Terms and Conditions (MITS) should be minimum Arial -12". நமக்கு கொடுக்கும் பேப்பரில் ப்ரிண்டாகி இருப்பது ஏரியல்-5 இல்
- ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2002-03 இல் 2% இருந்தது. 2007-08இல் 10% உயர்ந்திருக்கிறது. 2004க்கு பின் நம்முடைய கல்விக்கான செலவீனம் குறைந்துக் கொண்டே வருகிறது
புத்தரின் போதனைகள்
வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
எறும்பு.