சனிதோறும் ஒரு பத்தி

January 31, 2011

சனிமூலை - 010

பெங்களூரில் சந்திப்புகளுக்கு நடுவில், கொஞ்சம் படங்கள் பார்த்தேன். டிவிடியில் Inception, Changeling & மூவிஸ் நவ்-வில் Meet the Spartans. spoof வகையறா படம். இப்படி படம் வந்தாலேயொழிய டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பேஜ் 3 ஜோக் பர்சானலிடிகளை இந்தியாவில் திருத்த முடியாது. சகட்டு மேனிக்கு எல்லா டிவி விஷயங்களையும் நக்கலடிக்கிறார்கள். அமெரிக்கன் ஐடோல், ரியால்டி ஷோ நீதிபதிகளின் கிளசரின் அழுகைகள், டீலா/நோ டீலா, வீடியோ கேம்ஸ், விளம்பரங்கள், பேண்டீஸ் போடாத லிண்சே லோகன், பிரிட்னி ஸ்பியர்ஸின் குடிப்போதை ஆட்டம் என சகலங்களின் நையாண்டி காக்டெய்ல். படத்தினை டிவிடியில் பார்த்தால் இறுதியில் வரும் I'll Survive காணத் தவறாதீர். 180 நிமிடங்கள் நான்-ஸ்டாப் நகைச்சுவை. நாயகி கார்மென் எலக்ட்ராவை, கொ.ப.செவாக நியமித்தால், ஒபாமா அடுத்த ரவுண்ட் வர சத்தியமாக வாய்ப்புகளிருக்கிறது. குயிக் கன் முருகனில், மேங்கோ டாலியா ரம்பா அழகாகவும், ஆழமாகவும் க்ளீவேஜ் காட்டுகிறார்.

டெக்னாமிக்ஸ் எழுத ஆரம்பித்து 4 மாதங்களாகப் போகிறது. வாராவாரம், ஆரவாரம். கொஞ்சம் taxing ஆக இருந்தாலும், சில பல ஷொட்டுகளோடு ஒடிக் கொண்டிருக்கிறது. பா.ராகவனுக்கு நன்றி. கூட்டுப்பதிவு மாதிரி இருந்தாலும், தமிழ் பேப்பரால் விஐபியானவர் அரவிந்தன் நீலகண்டன். நான் புத்தகக்காட்சியில் அள்ளுவதற்கு முன்பு, புக்வார்ம்ஸில் எல்லா புத்தகங்களையும் லாரியிலேற்றி கொண்டு சென்றுவிட்டார். நறநற. புத்தக்காட்சி சுவாரசியம். கொஞ்சம் புத்தகங்களும் நிறைய பேச்சுமாய் போனது. பபாஸி மட்டும் இதை நடத்தவில்லையென்றால், இன்னும் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. தமிழ் பதிப்பகங்களுக்கு ஆங்கிலப் பதிப்பகங்கள் மேல் என்ன கோவமென்று தெரியவில்லை. கொஞ்சம் கடுப்போடே இருக்கிறார்கள். ஆங்கிலம் இன்னும் நிறைய `கார்`-ஆசாமிகளை கொண்டு வரும். தென்சென்னை நுனிநாக்கு ஆங்கில ஆட்கள் நிறைய வருவார்கள். அவர்கள் தப்பித் தவறி, தமிழ்ப் புத்தகங்களும் வாங்கலாம். லிங்குசாமி, விக்ரமன், பாலாஜி சக்திவேல், எஸ்.ரா, பாலகுமாரன் தென்பட்டார்கள். ப்ராங்பர்ட், டெல்லி, கொல்கத்தா மாதிரி பதிப்பகங்களுக்குள் வணிக சாத்தியங்கள், மொழிப்பெயர்ப்புகள், பிற டிஸ்டிரிப்பூயுஷன் சமாச்சாரங்கள் இங்கே நடக்கிறதா தெரியவில்லை. பத்ரிக்கே வெளிச்சம்.
கேள்வி: சம்பந்தா சம்பந்தமேயில்லாமல், எஸ்.எஸ்.சாந்த் & கோ மாதிரியான ஆட்கள் எல்லாம் கடைபரப்பும்போது, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணும் ப்ளாப்ட்(Blaft Publications) ஏன் வரவில்லை ? (வந்திருந்தால், சாருவின் சீரோ டிகிரி ஆங்கிலப்பதிப்பு 10,000 காப்பிகள் விற்றிருக்கும் அல்(ல)வா ;) )

How They Blew It - கோகன் பேஜ் என்கிற லண்டன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம். 16 கோடீஸ்வரர்கள் எப்படி தங்களின் சொத்துக்களை சீரழித்து, வீணடித்து, நாசமாகி தெருவுக்கு வந்தார்கள்; நாடு மாறி ஒளிந்தார்கள்; தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்பதை விரிவாக அலசும் புத்தகம். சுவாரசியமான நடை. தொழில் முனைவோராக நீங்கள் இருந்தால், முதலில் ஒரு காப்பி வாங்கிப் படித்துவிடுங்கள். இது எப்படியெல்லாம் ஆடக்கூடாது என்பதற்கானப் புத்தகம். இதுப் போல இந்திய மொழிகளில் புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சுவாரசியத்துக்கு, எப்படி நூஸ்லி வாடியா, திருபாய் அம்பானியின் முன் காணாமல் போனார்; ப்ரீமியர் /ஸ்டாண்டார்டு மோட்டார்ஸ் 90களின் பிற்பகுதியில் கொரிய கார்களின் படையெடுப்பில் மறைந்துப் போனார்கள்; மைக்ரோலேண்ட் ஆரம்பித்து ஒரு காலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய இண்டர்நெட் தொழில்முனைவோராக இருந்த பிரதீப் கர் என்னவானார்; ஹோம் ட்ரேட் என்னாவானது மாதிரியான உள்ளூர் சமாச்சாரங்களின் பின்னிருக்கும் கதைகள், விஷயங்களும், விஷமங்களும் நிறைந்தவை. புனைவுகளை விட இம்மாதிரியான நிஜங்கள் சுவாரசியமானவை. இன்னும் லோக்கலாக, ரமேஷ் கார்ஸ், அனுபவின் தேக்கு மரத்திட்டங்கள், ஸ்டெர்லிங் குழுமத்தின் வீழ்ச்சி எனத் தேட ஆரம்பித்தால், திரில்லர் ரேஞ்சுக்கு நிஜக்கதைகள் கிடைக்கும். The first billion is the hardest - T.Boone Pickens. அமெரிக்காவின் ஆயில் பில்லியனர்களில் ஒருவர். சொந்தக்கதை. நியுயார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர். ஆயில் சண்டைகளின் பின்னாடியிருந்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். அமெரிக்கா தேசப்பக்தி தலையெடுத்தாலும், சுவாரசியமான இன்னொரு புத்தகம்.

தினந்தந்தியில் ஷாருக்கான் தன்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனத்தினை சந்தையில் பட்டியிலிடப்போவதாகப் படித்தேன். பொழுதுப்போக்கு, கேளிக்கை நிறுவனங்களை சந்தையில் பட்டியிலிடுவது என்பது நம்மூரிலிருந்து தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ஜி.வி.பிலிம்ஸ் தான் முதல் நிறுவனமாய் இருக்கலாம் (அல்லது முக்தா ஆர்ட்ஸா ?) ஜி.வி. பிலிம்ஸ் விசுவை வைத்து ஜெயலலிதா காலக்கட்டத்தில் ஒரு படமெடுத்தார்கள். ஒரே போதனை நெடியோடு இருக்கும். வெங்கடேஸ்வரன், மைக்கேல் ஜாக்ஸன் பின்னால் போய், கெட்டு, சீரழிந்து, தூக்கில் தொங்கினார். அப்புறம் ஜி.வி.பிலிம்ஸ் கிட்டத்திட்ட ஒரு தசாம்சம் கழித்து டாக்சி எண் 9211 என்கிற இந்திப் படத்தினை ரீமேக்கினார்கள். இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நெட்பிலிக்ஸ் on-demand movies இப்போது கொண்டுவருகிறது. இதை எனக்குத் தெரிந்து 5-6 வருடங்களுக்கு முன்பே இந்தியப் படங்களுக்கு செய்ய இருப்பதாக ஜி.வி.பிலிம்ஸ் சொன்னது. இதற்கு அடுத்து வந்து சீரழிந்த நிறுவனம், பென்டாஃபோர். வாத்தியார் இருந்த மீடியா டிரீம்ஸில் `பாரதி` மாதிரியான ஒரு படம் எடுக்கமுடிந்தது. அளவுக்கு மீறிய வளர்ச்சித்திட்டங்களினாலும், அகலக்காலினாலும் அவர்களும் வீணாய் போய், `மாயாஜால்` அரங்கோடு ஒரங்கட்டினார்கள். பிரமிட் நடராஜனும், சுவாமிநாதனும் சேர்ந்து ஆரம்பித்த பிரமிட் சாய்மிரா அதற்கு பின்னாடி இந்த லிஸ்டில் சேர்ந்தது. சுவாமிநாதன் செபியை டகால்டித்த குற்றத்திற்காக, ட்ரேட் செய்யக்கூடாது என்று ஒரங்கட்டப்பட்டார். நடராஜன், சேர்மன் எமிரிட்டஸா ஒதுங்கி, த்ன்னுடைய பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினார். ஊரெங்கும் அவர்கள் லீஸ் எடுத்த திரையரங்குகள் சில சமயம் பேனாவாலும், பல சமயம் போன் காலாலாலும், சன் பிக்சர்ஸுக்கு போனது. ஜி.வி.பிலிம்ஸ், பென்டாஃபோர், பிரமிட் சாய்மீரா மாதிரி இல்லாமல், கெளதம் வாசுதேவ் மேனன் (இந்த மலையாளிகள் ஏன் இன்னும் ஜாதிப்பெயரை பின்னால் கட்டிக் கொண்டு அலைகிறார்கள் ?) லண்டன் எய்ம்`ல் (AIM - Alternative Investment Market) தன்னுடைய போட்டான் கதாஸை (Photon Kathas) பட்டியிலிட்டிருக்கிறார். எய்மில் லிஸ்ட்டான இந்திய கேளிக்கை நிறுவனங்களின் ட்ராக் ரிக்கார்டு இதுவரை மோசமாகதான் இருக்கிறது. கெளதம் அந்த மித்தை உடைப்பாரா என்று பார்க்கவேண்டும். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கிஸை தனி நிறுவனமாக வைத்திருக்கிறார். ஷங்கர் எஸ் பிக்சர்ஸுக்கான காசினை IDBI-யில் கடன் வாங்கி, வட்டி கட்டி, படம் போண்டியானால், எந்திரன் மாதிரி ஒரு மெகா ஹிட் செய்து கடன் அடைக்கிறார். ஒருவேளை ஏஜிஎஸ்ஸோ, ரெட் ஜெயிண்டோ, க்ளவுடு நைனோ பின்னாளில் பட்டியிலிடலாம்.*

`மயிலை திருவிழா`வின் கடைசி நாளில் கொஞ்சம் சுற்றினேன். மாமிகளின் கோலங்கள், ரங்கராடினம், கர்நாடக சங்கீத ஹாங் ஒவர், "can you pass on that குழிப் பணியாரம். the other stall கேழ்வரகு அடை was awesome" என்கிற மாதிரியான இங்கிதமிழில் பேச்சு, தெருவோர குடைமிளகாய் பஜ்ஜி என கலவையாய் போனது. முன்பு மோர், கதம்ப சாதமெல்லாம் கொடுத்தார்கள். நான் பார்க்கும்போது இல்லை. இந்த மாதிரி திருவிழா ஏன் திருவல்லிக்கேணியிலோ, திருவொற்றியூரிலோ, புரசைவாக்கத்திலோ நடக்கமாட்டேன்ங்கிறது ? சென்னை சங்கமம் இந்த முறை, தியேட்டர் கிடைக்காத நல்லப் படம் போல, வந்ததும், போனதும் தெரியவில்லை. இந்த மாதிரி நடத்துவதற்கு பதிலாக, யாரேனும் முன் வந்து, நாட்டார் கலைகளையும் இன்ன பிற செவ்வியல் கலைகளையும் பேக்கேஜ் செய்து Cirque de Soleil மாதிரி செய்தால் அட்டகாசமா இருக்கும். சோசியல் எண்டர்ப்ரைசுகளுக்கான ஈக்விட்டி துட்டும், நிறைய நேரமும் இருந்தால் நானே செய்வேன். இல்லை. இப்போதைக்கு, முத்துசாமியோ, அனிதா ரத்னமோ முயற்சிக்கலாம். அலாயன்ஸ் ப்ரான்ஸும், போர்ட் பவுண்டேஷனும் கூடவருவார்கள். தமிழாசிரியர்கள் தமிழைக் கொன்றது மாதிரி, கூத்துக்கலை வாத்தியார்கள் அடம்பிடிக்காமல் அதை ஜனரஞ்சகப் படுத்த முன்வந்தால், கலையும் பரவலாகும். கல்லாவும் நிரம்பும். கலைஞர்களுக்கும் முழுவயிறு நிறையும். இதற்கும் ம.க.இ.க நடத்தும் கலை இரவையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். பிலிம்ஸ் டிவிஷன் படங்களை ஆக்‌ஷன் கொப்பளிக்கும் உன்னதப் படங்கள் என்று நம்மை, ம.க.இ.க சொல்லவைத்து விடுவார்கள்.

இந்த வார லிஸ்ட்

காதுக்கு: ஐய்யயோ நெஞ்சு அலையுடி (ஆடுகளம்), வந்தனமய்யா வந்தனம் (ஈசன்) (யார் குரல் இது?)
கண்களுக்கு: `ஒத்தச் சொல்லால` பாடலில், தனுஷ் லுங்கியினை வரிந்து கட்டிக் கொண்டு ஆடும் impromptu மாதிரியாக தென்படும் ஆட்டம் (Well done, டான்ஸ் மாஸ்டர் தினேஷ்)
மூளைக்கு: Meatball Sundae by Seth Godin

* சன் பிக்சர்ஸ், சன் குழுமத்தின் ஒரு அங்கம். சன் குழுமம் பட்டியிலிடப்பட்ட நிறுவனம். சன் பிக்சர்ஸ் தனியாக இன்னும் சந்தையில் இல்லை. வரவும் வராது என்று தோன்றுகிறது.