சனிதோறும் ஒரு பத்தி

March 28, 2009

சனிமூலை - 004



மேலே உள்ள படத்தை கிளிக்கினால் பெரியதாக தெரியும். ஒட்டு மொத்த ”நிதி கெட்ட கேட்டையும்” படம் வ்ரைந்து பாகங்களை குறித்துள்ளார்கள். Infographics என்றழைக்கப்படும் வகையறாவில் நான் சமீபத்தில் மிகவும் ரசித்த படமிது.


எம்.ஐ.டி உலகின் மிக முக்கியமான இடம்.யிலிருந்து வரும் டெக்னாலஜி ரெவியுவினை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இந்த எம்.ஐ.டி, குரோம்பேட்டை ஸ்டேஷன் தாண்டின எம்.ஐ.டி அல்ல. மசாசூசேட்ட்ஸ் இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜி. பல கண்டுபிடிப்புகள் கண்டறிய தூண்டுகோலான கல்வி நிறுவனம். கல்வி நிறுவனம் என்பதை விட மிகப் பெரிய ஆராய்ச்சி கட்டிடம் என்பது தான் பொறுத்தமான வார்த்தையாக இருக்கமுடியும்.

எம்.ஜ.டியிலிருந்து டெக்னாலஜி ரிவியு(Technology Review) என்கிற ஒரு இதழ் வருகிறது. இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. கிட்டத்திட்ட 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இல்லாவிடினும், விட்டுவிட்டாவது படித்து வருகிறேன். அவர்கள் வருடாவருடம் ஒரு லிஸ்ட் வெளியிடுவார்கள் ”10 முக்கியமான தொழில்நுட்பங்கள்” அதில் இந்த வருடம் முக்கியமானது சோலார் பவர். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது.

இது உண்மையிலேயே ரொம்ப பழசு. 1960களில் ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. போட்டோ வொல்வோட்டிக் செல்கள் எஸ்.எம்.எஸ் மொழியில் ”பிவி செல்ஸ்” என்றழைக்கப்படும் செல்களை சை-பை படங்களில் பார்த்திருக்கலாம். இந்தியாவில் மோசர் பெர் நிறுவனம் தொழிற்சாலை போட்டு தயாரித்து கொண்டிருக்கிறது. கடைசியாக கேட்டதில் 2013 வரைக்கும் அவர்களின் ஆர்டர் புக் நிரம்பி வழிகிறது. மாற்று / சுத்த / பசுமை மின்சாரம் (Alternative Energy / Clean Energy / Green Energy ) என்று வகைவகையாக அழைக்கப்படும் முயற்சிகள் குளோபல் வார்மிங் காலக்கட்டத்தில் ஒரு cult ஸ்டேடஸுக்கு வந்துவிட்டது. முக்கியமான விஷயம் மாற்று எரிசக்தி விஷயத்தில், மூலப்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். The raw material and running cost of procurement is near zero. அது அலைகளோ, காற்றோ, அருவியோ, சூரியஒளியோ இன்னபிறவோ. அல் கோர் இதை படமாக்கி, எல்லாரையும் பயமுறுத்தி ஆஸ்கார் தட்டிக் கொண்டு போய்விட்டார்.

சூரியயொளி மின்சாரம் என்பது உலக விஞ்ஞானிகளின் மிகப்பெரிய கனவு. மற்ற எல்லா இயற்கை வழிகளை விட, சூரியயொளி வஞ்சனையில்லாமல் அமெரிக்காவிலிருந்து அம்பாசமுத்திரத்தின் குக்கிராமம் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது. மாற்று மின்சார வழிகள் என்று சொல்லப்படும், நீர், காற்று, மாட்டுச்சாணம் எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய பிரச்சனை அதன் மூலப்பொருட்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்போதைய பிவிசெல்ஸ்களின் விலையதிகம். இன்னொரு பிரச்சனை அதனை அரசாங்கமும், வீடு கட்டும் ரியல் எஸ்டேட் காரார்களும் புறக்கணிப்பது.

போன வார பிஸினஸ் லைனில், ஒரு பழைய கட்டுரை ஒன்றினை மறு வெளியீடு செய்திருந்தார்கள். இந்தியாவின் மொத்த எரிபொருள், மின்சார தேவையில் 33% சூரியஓளியிலிருந்தே எடுத்துக் கொள்ள முடியும் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

இந்த பொருளாதார மந்தத்தினை அறிவுள்ள அரசாங்கங்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டின் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தன்னிறைவினை அடுத்த மூன்றிலிருந்து ஐந்தாண்டு காலக்கட்டத்துக்குள் உலகத்தரத்துக்கு இணையாக கொண்டு வந்துவிடலாம்.

சென்னையில் 365நாளில் 325 நாள் கன்னா பின்னாவென்று வெயிலடிக்கும். ஆனால் அது பெங்களூரில் குறைவு. பெங்களூரில் சூரியஒளியில் இயக்கும் தண்ணீர் ஹீட்டர்கள் வாங்கினால், அரசு அதற்கு மானியம் தருகிறது. சென்னையில் அது இல்லை. இதற்கு முன்பான அரசில் எப்படி மழைநீர் சேகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்த பட்டதோ, அதே போல சூரியஒளியில் இயங்கும் பல்வேறு பொருட்களை சென்னை மாதிரியான சூடு பிரதேசத்தில் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று தோன்றுகிறது. அது நடக்கும் வரையில், நாம் சூரிய ஒளியினை துணி காய போடவும், ஜவ்வரிசி வடாம், வத்தல் பிழியவும் தான் உபயோகப்படுத்தி கொண்டிருக்கமுடியும்.



”தூக்கு மேடை பஞ்சு மெத்தை. தென்றலை தீண்டியதில்லை. தீயினை தாண்டியிருக்கிறேன்” என்று வசனம் பேசாத குறையாய், ஒரு வழியாய் ரத்தன் டாடா இந்த வார ஆரம்பத்தில் டாடாவின் நேநோ - ஒரு இலட்சரூபாய் காரினை அறிமுகப்படுத்தி விட்டார். ஏபரலில் மூன்று வாரங்களில் புக்கிங் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு இலட்ச ரூபாய்க்கு கார் என்பது உலக ஆட்டொமொபைல் வரலாற்றில் நிச்சயமாக ஒரு சாதனை. டாலரில் கணக்குப் போட்டால் வெறுமனே $2000 தான் வருகிறது. முதன்முறையாக ஒரு காரினை ஆன்லைனில் புக் செய்ய முடியும். டாடா நேனோ சர்வ நிச்சயமாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு உண்டான வரவேற்பினைப் போல, மிக அதிக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மிக சாதுர்யமாக அப்ளிகேஷன் பார்முக்கு ரூ.300, முழு புக்கிங்கிற்கு 75,000+ என கணக்குப் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். டாடா மோட்டார்ஸ் குறைந்தது 5 இலட்சம் மக்கள் இந்த முதல் பங்கீட்டில் பங்குபெற முயற்சிப்பார்கள் என்று கணக்கு போட்டிருக்கிறது. முதல் தவணையில் 50000 கார்கள் மட்டுமே பெறமுடியும், அதுவும் கணிணி தேர்ந்தெடுக்கும் ஒரு பட்டியலிலிருந்து. இந்த மாதிரியான முன்மாதிரிகள் இதற்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் துறையில் இல்லை. 10 இலட்சம் மக்கள் பங்கு கொண்டால், டாடா குழுமத்திற்கு குறைந்தது ரூ.950 கோடிகள் கிடைக்கும் என்று கணக்கிட்டுள்ளார்கள். பொருளாதார மந்த சூழ்நிலை மிகுந்த நேரத்தில் ரூ.950 கோடிகள் என்பது அருமையான விஷயம். யார் இந்த திட்டங்களை வகுத்தார்களோ, அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். மிக சாமர்த்தியமான வேலை.

இந்த மாதிரியான ப்ரொடக்ட் இன்னோவேஷன்களை தொடர்ச்சியாக செய்தாலேயொழிய, நாம் பெருமளவில் உலக சந்தையினை பிடிக்க இயலாது. சேவை ரீதியிலான இன்னோவேஷன்களை நாம் தொடர்ச்சியாக நாம் மென்பொருள் துறையில் செய்து கொண்டு வருகிறோம். பொருள்ரீதியான இன்னோவேஷன்களும் முக்கியம். பின்லாந்து என்கிற ஒரு நாடு இன்றைக்கு நோக்கியா என்கிற ஒற்றை செல் நிறுவனத்தின்மூலம் தான் பலபேருக்கு தெரியும்.


மூன்று சம்பந்தமில்லாத விஷயங்கள்
  1. இந்த வருடம் வரும் சூரிய கிரகணம் (ஜூலை 22, 2009) வானியலில் மிக முக்கியமான விஷயம். இந்தியாவில் இந்தமுறை பல நகரங்களில் இது முழுமையாக தெரியும். இதற்கடுத்து இந்தமாதிரியான ஒரு முழு கிரகண பார்வை இந்தியாவில் 2114இல் தான் கிடைக்கும். அதற்குள் இந்த பத்தி எழுதுபவனின் கதை முடிந்துவிட்டிருக்கும்.
  2. மத்திய ரிசர்வ் வங்கியின், கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயம்."The font size of the Most Important Terms and Conditions (MITS) should be minimum Arial -12". நமக்கு கொடுக்கும் பேப்பரில் ப்ரிண்டாகி இருப்பது ஏரியல்-5 இல்
  3. ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2002-03 இல் 2% இருந்தது. 2007-08இல் 10% உயர்ந்திருக்கிறது. 2004க்கு பின் நம்முடைய கல்விக்கான செலவீனம் குறைந்துக் கொண்டே வருகிறது
இந்த வார கவிதை

புத்தரின் போதனைகள்
வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
எறும்பு.

March 20, 2009

சனிமூலை - 003

பணவீக்கம் (Inflation) 0.44% குறைந்தது என்று எல்லா ஊடகங்களும் கொண்டாடாத குறையாக முன்பக்கத்தில் வெளியிட்டு இருந்தன. ஆனாலும், நாம் சாப்பிடும் அரிசியின் விலை ஏறி தான் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும் ? இதற்கும் இந்திய குடிமகனுக்கும் என்ன சம்பந்தம் ?

முதலில் இந்தியாவில் பணவீக்கம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பது தெரியாமல் வெறுமனே நம்பரை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பது முறையற்றது. இந்திய பணவீக்க சதவிகித எண், வாராவாரம் வியாழக்கிழமை வெளியிடப்படும். ஒட்டுமொத்த விலை குறியீட்டளவு (Wholesale Price Index - WPI) அடிப்படையாக கொண்டு இந்த சதவிகிதம் கணக்கிடப்படும். WPI-ல் உணவுப் பொருட்களுக்கான ஒதுக்கீடு வெறும் 22% மட்டுமே. அதாவது 1% பணவீக்கம் என்று சொன்னால், அதை நிர்ணயிப்பதில் 0.22% உணவுப் பொருட்களுக்கு வரும். இது தாண்டி, இந்த குறியீட்டளவு ஒரு “அடிப்படை வாரத்தினை”(Base week) வைத்து, அன்றைக்கும், இன்றைக்கும் என்ன வித்தியாசம் என்கிற ஒப்பீட்டளவில் கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீடு அடிப்படையே ஒரு தவறான அடிப்படை. அதைவிட மோசமான விஷயம், இதை கிரிக்கெட் ஸ்கோர் போல சம்பிரதாயத்துக்கு வாராவாரம் அறிவிப்பது.

பணவீக்கத்திற்கும், பங்குச் சந்தைக்குமான தொடர்பு அறுபட்டு ரொம்பநாள் ஆகிறது, நவம்பர் 2008க்கு பின், பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பணவீக்கம் குறைந்தால் பொருட்களின் விலையும் குறையவேண்டும். விலை குறைந்தால் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அதிகரித்தால், நிறுவனத்துக்கு வருமானமும், லாபமும் அதிகரிக்கும். இதில் எதுவுமே நடக்கவில்லை. அதனால், பங்குச் சந்தை இன்னமும் 8000-9500 இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தை முன்னேறுமா என்று படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டு காற்றில் வட்டங்கள் வரைவது இன்றைக்கு பிரபலமான விஷயம். நீங்களும் அந்த கூட்டத்தில் பங்கு பெற தொடர்ச்சியாக வணிக நாளிதழ்கள் படியுங்கள்.

குடிமகனுக்கும் பணவீக்கத்திற்குமான சம்பந்தமென்ன? ஏன் பணமெலிவு வரலாம் என்று சொல்கிறார்கள் என்பதற்கான அடிப்படையினை ஆராயலாம். ஒரு சாதாரண இந்தியனின் வருவாயில் மிக முக்கியமாக இடம்பெறுபவை நான்கு விஷயஙகள் - அடிப்படைப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள், சமூக செலவுகள், முதலீடுகள். அடிப்படைப் பொருட்கள் - அரிசி,பருப்பு முதல் மொபைல் ரீசார்ஜ் கூப்பன் வரைக்குமான விஷயங்கள். போக்குவரத்து செலவுகள் - டூவிலர்/காருக்கு பெட்ரோல் போடுவது முதல், ஊர் சுற்றுதல் செலவுகள். சமூக செலவுகள் - வாடகை, மின்சாரம், குழந்தையின் படிப்பு, கிரெடிட்காடுக்கு பணம் கட்டுதல் வரையிலான செலவுகள்.முதலீடுகள் - சிறுசேமிப்பில் ஆரம்பித்து, பரஸ்பர நிதி, காப்பீடு, வீட்டுக் கடன் வரைக்குமான விஷயங்கள்.

மேற்சொன்ன நான்கில் முதல் மூன்றில் பணவீக்கத்தின் நேரடி பாதிப்பு மிகக் குறைவு. அடிப்படைப் பொருட்களின் விலை உண்மையாக 20% ஏறியிருக்கிறது.ரூ.20-30க்குள் கிடைத்த நல்ல பச்சரிசி இன்றைக்கு ரூ.35-42க்குள்தான் கிடைக்கிறது. ஆக இதன் ஏற்றம் தவிர்க்க முடியாதது. பெட்ரோல், டீசல் வகையிலான பொருட்களின் விலை அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனாலேயே, நாம் இன்னமும் பெட்ரோல் உலகச்சந்தையில் $147 எட்டும்போது ரூ.50 கொடுத்து போட்டோம்.இப்போது $50க்குள் அடம்பிடித்துக் கொண்டிருக்கும்போது ரூ.45 கொடுத்து போட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆக, இதன் விலை பணவீக்கத்தோடு நேரடி தொடர்பானவையில்லை. சமூக செலவுகள் இப்போது பெரும்பாலானவர்களின் வீட்டில், அத்தியாவசியத்தினை தாண்டி குறைந்திருக்கின்றன. மூதலீடுகளும் மாறியிருக்கின்றன. ஆக, இது ஒரு நேர்மையான, நேரடியான கணக்கீட்டளவு என்பதற்கு எவ்விதமான முகாந்திரங்களுமில்லை. ஆனாலும், அரசுக்கு ஏதேனும் ஒரு குறியீட்டு எண் தேவைப்படுகிறது. அதை வைத்துக் கொண்டே மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு விதமான முயற்சிகளை எடுக்க முயல்கிறது. உ-ம், வட்டி விகிதங்களை குறைத்தல்

மக்களுக்கு உள்ளூரே பயம் வந்து விட்டது. வளைகுடா நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் தொகை(Inward remittance) 33% குறைந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. கேரளாவில் வளைகுடா நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பணியாளர்கள், சேமிப்பினை வைத்துக் கொண்டு அடுத்து கொல்லத்தில் படகு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயமுத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி வளையத்தில் இருக்கும் டெக்ஸ்டெல் மில்கள் பணியாளர்களை குறைத்து காற்று வாங்குகின்றன. குஜராத்தில் வைரம் வெட்டி சீரமைக்கும் தொழில் மிக மோசமான நிலைக்கு போய், இன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பெயில் அவுட் கொடுக்கும் அளவிற்கு பேசப்பட்டு வருகிறது. ஆக இந்த நிலையில் கண்டிப்பாக புள்ளியியல்ரீதியாக கணக்கிடப்படும் பணவீக்கம் குறைந்துதான் இருக்கும்.

பண வீக்கம் இந்தியாவில் பழகி போன ஒன்று. இந்திராகாந்தி ஆட்சியில் இந்தியாவின் பணவீக்கம் 35% உலகளவில் எல்லா அரசுகளும் பணவீக்கத்தினை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன.பிரச்சனை பணவீக்கத்தில் இல்லை. அது பணஇளைப்பில்(Deflation) இருக்கிறது. பணவீக்கத்தினை விட மோசமான விஷயம் பணஇளைப்பு.

பண இளைப்பு என்பது தொடர்ச்சியாக ஒரு பொருளின்/சேவையின் விலை, வாடிக்கையாளர்கள் இன்றி, தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருதல். பொருட்களின் விலை குறைவு என்பது வாடிக்கையாளனுக்கு சந்தோஷமான விஷயமாகத் தானே இருக்கமுடியும், இதில் என்ன பிரச்சனை?

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு விலையுயர்ந்த ஒரு செல்பேசி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் வாங்கிய விலை ரூ.30,000. இதை சந்தையில் விற்றால், ரூ.24,000 போவதாக கொள்வோம். இப்போது நீங்கள், ஒரு ஆளரவமற்ற தீவில் இருக்கிறீர்கள். உங்களின் செல்பேசியின் விலையென்ன? விடை: பூச்சியம். சுழி. ஒன்றுமேயில்லை. ஒரு பொருளின் / சேவையின் விலை என்பது அதை வாங்கும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தே அமையும்.

இப்போது அதே உதாரணத்தினை வேறுவிதமாக பார்ப்போம். நீங்கள் ரூ.24,000க்கு விற்கு தயாராக இருக்கிறீர்கள். ஆனால் வாடிக்கையாளர்கள் இல்லை. உடனே, விலையினை ரூ 22,000க்கு குறைக்கிறீர்கள். அப்போதும் வாடிக்கையாளர்கள் இல்லை. ரூ 20,000, ரூ 18,500, ரூ 16,000, ரூ 15,000. ம்ஹூம். ஒரு பயலும் பக்கத்தில் நெருங்குவதாக இல்லை. இப்போது உங்களின் மனநிலையென்ன?

இதுதான் பண இளைப்பு. இது மோசமான விஷயம். இதையே ஒரு பொருள் விற்கும் வியாபாரிக்கும், சேவை செய்யும் வியாபாரிக்கும் பொறுத்திப் பாருங்கள். அவனுடைய இருப்பு (inventory) அதிகமாகும். இந்தியாவில் ஏன் கார் விற்பனை கடந்த நான்கு மாதங்களில் சரிந்தது ? ஏன் உங்களின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் ஒர்ப்படியின் மகனுக்கு அவனுடைய மென்பொருள் சேவை வேலை பறிபோனது? ஏன் நாத்தனாரின் கணவர் துபாயிலிருந்து திரும்பிவந்து இந்தியாவில் தொழில் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்? ஏன் ரூ.52,000 போன ஸ்டீல் கம்பிகள், இன்றைக்கு சீந்த ஆளில்லாமல் ரூ.35,000க்கு அல்லாடுகிறது ? ஏன் டி.எல்.எப் மாதிரியான, இந்தியாவின் முதன்மை கட்டமைப்பு நிறுவனங்கள், பெங்களூரிலும், சென்னையிலும், அவர்களின் அபார்ட்மெண்ட் விலைகளை 35% குறைத்ததை லவுட் ஸ்பீக்கர் வைத்து அரற்றுகிறார்கள்?

ஒரே விடை: நாம் பண இளைப்பினை நோக்கி போய் கொண்டிருக்கிறோம். உங்களுக்கும், எனக்கும் நாளை என்ன நடக்குமோ என்கிற பயம் வந்துவிட்டது. நம்முடைய வேலை நிரந்தரமா, இல்லை கழட்டி விட்டுவிடுவார்களா என்கிற தொடர்ச்சியான அலர்ஜி எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியே வேலை இருந்தாலும், சம்பளம் சரியாக ஒன்றாம் தேதி வருமா என்கிற கவலை வாட்ட ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், நாம் உபயோக்கிக்கும் பொருட்கள் / சேவைகளை குறைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

வார இறுதியில் ஹோட்டலில் சாப்பிட்டதை குறைக்க ஆரம்பித்து விட்டோம். கிரெடிட் கார்டில் வாங்கி பின்னாடி கட்டிக்கொள்ளலாம் என்கிற நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்திருக்கிறது. குமிழில் ஷேவ் பண்ணக்கூட பார்லர் போன பயல்கள், ஜில்லெட் ப்ரெஸ்டோவும் கையுமாக சுயசிரைப்பில் இறங்கிவிட்டார்கள். எங்கெங்கெல்லாம் குறைக்க முடியுமோ, அங்கெங்கெல்லாம் நாம் நம் தேவையினை குறைத்து கொண்டிருக்கிறோம். இது தான் நிதர்சனம்.

நாம் நம் தேவைகளை குறைத்தால், அதை விற்பவர்களின் வருமானம் குறையும். அவர்கள் வேலை குறைப்பு செய்வார்கள். வேலை போனவர்களுக்கு வருமானம் வராததால், அவர்களின் தேவையும் சுருங்கும். தேவை சுருங்கினால் இருப்பு அதிகமாகும். விற்கமுடியாமல் தேங்கும். தேங்கினால் அதன் வட்டி எகிறும். கட்டமுடியாதவர்கள், நிறுவனத்தினை மூடிவிட்டு போய்விடுவார்கள். இது ஒரு கொடுமையான, குரூரமான வட்டம். இதை தவிர்க்கதான் உலகெங்கிலும் அரசாங்கங்கள் பணத்தினை பெயில் அவுட் பேக்கேஜ், ஸ்டியுமலஸ் பேக்கேஜ் என்று கொட்டோகொட்டென்று கொட்டி, தேவையினை அதிகரிக்க விரும்புகின்றன.

இறுதியாக, இந்தியாவின் நிஜமான பணவீக்க குறீயிடு 10.43%, இது வாடிக்கையாளர் விலை குறியீட்டளவினை (Consumer Price Index - CPI) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது.

மற்றபடி, ஒவராக பொருளாதாரம் பேசி கடுப்பேற்ற விரும்பவில்லை.



மொழி எப்படியெல்லாம் காலத்திற்க்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதற்கு ஆங்கிலம் சரியான உதாரணம். பட்லர் இங்கிலிஷில் ஆரம்பித்து, அமெரிக்கன், பிரிட்டிஷ் என பல வட்டாராக்கங்கள் ஆங்கிலத்தில் உண்டு. அதில் நான் சமீபத்தில் தொடர்ச்சியாக படித்து வருவது, வேர்ட்ஸ்பெ தளத்தில் வரக்கூடிய சில தற்காலத்திய வார்த்தைகள்.

உதாரணத்துக்கு
self-tracker - பல்வேறு தளங்களில் தன்னுடைய உடல், மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடர்ச்சியாக பாலோ பண்ணுதல்.
sexting / sexter கில்மாவாக கேர்ல் ப்ரெண்டுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல் / அனுப்புவர்.
data shadow - உங்களுடைய கிரெடிட்/டெபிட் கார்டுகள், செல்போன்கள், இணைய தளங்களில் நீங்கள் செய்திருக்கக்கூடிய விஷயங்கள், வலைப்பதிவுகளில் நீங்கள் போடக்கூடிய கமெண்டுகள் போன்ற உங்களைப்பற்றிய பல்வேறு டேட்டாவினை விட்டு போதல்

இதுமாதிரியான விஷயங்களை கொஞ்சநாட்கள் என்னுடைய நண்பர் ஒருவர் டிவிட்டரில் செய்து கொண்டிருந்தார். அப்புறம், தமிழ்கூறும் நல்லுலகம், “செல்லமாக” மிரட்டியதால் அதனை விட்டு விட்டார். இப்போது Googling என்கிற வார்த்தை டிக்‌ஷ்னரியிலேயே வந்துவிட்டது. ஆனால், தமிழில் இதெல்லாம் நடக்கும் சாத்தியங்கள் குறைவு. தமிழ்நாட்டில் தமிழினை வெறுக்க வைப்பது இரண்டே விஷயங்கள் 1. தமிழாசிரியர்கள் 2. திராவிட கட்சிகள்


இந்த வார கோவம்

கோவம் என்பது சாதாரண வார்த்தை. மூர்க்கமான, அரக்கத்தனமான கோவம் என்று வைத்துக் கொள்ளலாம்.

மும்பாயில் தந்தையும், தாயுமாக சேர்ந்து, ஒரு சாமியாரின் பேச்சினைக் கேட்டுக் கொண்டு, சொந்த மூத்த மகளையே 9 வருடங்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதுதாண்டி அந்த சாமியாரும் அந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார். இது போதாதென்று அவருடைய இன்னொரு மகளையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்றபோதுதான் விஷயம் வெளியே வந்திருக்கிறது. இதில் சோக நகைச்சுவையென்னவென்றால், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தில் incest என்றழைக்கப்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு சட்டமேயில்லை. Disgusting. அதனால் வெறுமனே பாலியல் வன்முறை என்கிற கோணத்தில்தான் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பல விஷயங்களில் மத்திய கிழக்கு நாடுகளின் மேல் எனக்கு பிரச்சனைகள் இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில், அவர்களுடைய தண்டனை தான் சரியானதாக தெரிகிறது.

பெற்ற மகளோடு உறவு கொண்டால், செல்வம் பெருகும் என்று சொன்ன ஒரு புறம்போக்கு சாமியாரின் பேச்சினைக் கேட்டு 9 வருடங்கள் நடந்த இந்த கொடுமையினை படிக்கும் போது பிபி எகிறுகிறது. பெற்ற மகளோடு உறவு கொண்டு ஒருவேளை செல்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுமானால், உலகத்தில் இன்றைக்கு உறவு முறைகள் வேறுமாதிரியாக இருந்திருக்கவேண்டும். தமிழில் எனக்குதெரிந்த எல்லா கெட்டவார்த்தைகளை பிரயோகித்தாலும், இன்னமும் கோவம் தனிந்தபாடில்லை.

இராம.நாராயணன் மாதிரியான ஆட்கள் கிராபிக்ஸ் உத்திகளுடன் தீய சக்தியை தெய்வ சக்தி அழிக்கும் என்றெடுக்கும் உடான்ஸ் படங்களின் கோரமான முகம் தான் சாமியார்களை நம்பி இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடுவது. இப்படிப்பட்ட கோரங்கள் நடக்கும்போது பார்த்து கொண்டிருப்பதற்கு பெயர், தெய்வ சக்தியல்ல, அது தெய்வ சகதி. என்ன புரியவில்லையென்றால், அந்த இரண்டு பெண்களின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும், சமூகத்தில் அவர்களின் நிலையென்ன, நாளை அவர்களுடைய வாழ்க்கையினை எப்படி பார்ப்பார்கள் - இதையெல்லாம் அந்த பெற்றோர்கள் யோசித்தே பார்த்திருக்க மாட்டார்களா? இந்த மாதிரியான சம்பவங்களினாலேயே, நான் கூடிய விரைவில் நிஹிலிஸ்டாக (Nihilist) மாறிவிடுவேனோ என்கிற பயம் இப்போது வர ஆரம்பித்திருக்கிறது.

March 13, 2009

சனிமூலை - 002

”நொர்நாட்டியம்” “எசலிப்பு” “குச்சி குத்தல்” “செம்போத்து பிடித்தல்” - இதற்கெல்லாம் பொருள் என்ன? விடை: கடைசியில்


போன வாரம் இரவு நண்பர் ஒருவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.அதில் இந்தியாவில் இருக்கும் தனியார் காப்பீடு நிறுவனங்களின் நஷ்ட தொகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர் அனுப்புவதற்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் அமெரிக்காவின் பெரிய காப்பீடு நிறுவனம், இன்னமும் கொஞ்சம் ஆக்சிஜன் அரசிடமிருந்து பெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான AIG மீண்டும் அரசிடம் கெஞ்சி,கூத்தாடி $30பில்லியன் இடைக்கால நிவாரணமாக பெற்றிருக்கிறது. அமெரிக்க வங்கிகள், முதலீட்டு ஆணையங்கள், காப்பீடு நிறுவனங்கள் எல்லாமே கொடுத்து வைத்தவர்கள், தவறு “கொடுத்து கெட்டவர்கள்”. அமெரிக்க அரசும், ஒபாவின் பொருளாதார கவுன்சிலில் இருப்பவர்களும், மன்னராட்சியில் மக்களுக்கு தானம் கொடுக்கும் நல்லாட்சிப் போல வாரி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். திறந்துவிடப்பட்ட அணைப் போல, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காபாற்றுதல் படலம் நடந்து கொண்டேயிருக்கிறது. ஜடாயுக்கு ராமர் மோட்சம் கொடுத்தது போல, ஒபாமா அமெரிக்கர்களுக்கு.

இப்போது பெரிய பிரச்சனை என்னவென்றால், நம் மக்கள் உச்சத்தில் இருக்கும்போது வந்த எல்லா தனியார் காப்பீடு நிறுவங்களிலும் முதலீடு செய்துவிட்டார்கள், AIG போல இதுவும் கவிழுமா என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி. இந்தியாவில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் கவிழாது. நிம்மதியா.

ஏனெனில், இந்திய காப்பீடு நிறுவனங்கள் Insurance Regulatory and Development Authority of India வாய் கோணாமல் இருக்க IRDA என்று அழைக்கப்படுகிற இந்திய காப்பீடு கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு கீழ் வருகிறது. IRDAவில் உறுப்பினராக இல்லாமல், இந்தியாவில் யாரும் தனியார் காப்பீடு நிறுவனத்தினை நடத்த முடியாது. IRDA பல முக்கியமான முடிவுகளை முன்வைத்திருப்பதால், அமெரிக்க நிறுவனங்கள் போல டெரிவேட்டிவ்களிலோ, கிரெடிட் டிபால்ட் ஸ்வேப்புகளிலோ(CDS) முதலீடு செய்ய முடியாது. அதனால், கவிழ்வதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு.

மேற்சொன்ன டெரிவேட்டிவ், CDS போன்ற வார்த்தைகள் படிக்கும்போதே மூளையில் பட்டாம்பூச்சி பறந்தால் மறந்துவிடுங்கள். வாரன் பஃபெட்டே இம்மாதிரியான விஷயங்களை மண்டையில் ஏற்றிக் கொள்வதில்லை. இப்போதைக்கு, இந்தியாவில் தனியார் காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் உங்கள் பார்மசியில் ’வேலியம்’ வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. நமீதாவோடு ஹவாயில் டூயட் பாடிக்கொண்டே கனவு காணுங்கள்.

இப்போதிருக்கும் பொருளாதார சூழ்நிலையில், மில்லியன், பில்லியன்கள் போய், டிரில்லியன்கள் பேசப்படுகின்றன. ”நீ என்னடா பிஸ்கோத்து, நாங்கெல்லாம் அந்த காலத்திலேயே டிரில்லியன் டாலரை தூக்கி கொடுத்தவங்கடா” என பின்னாளில், உங்கள் சந்ததியினரிடம் பீத்திக் கொள்ள இது பயன்படும்.



நண்பர் ஒருவரோடு இந்த வார ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தேன். சுற்றுச்சூழல் விஷயங்களில் அவர் கெட்டிக்காரர். இப்போது, குறைந்த கட்டுமான வீடுகளை, மூங்கில் பின்புலத்தோடு ஒரிஸ்ஸாவில் ஒரு நதியோரம் மேற்கொண்டிருக்கிறார். அவர் சொன்ன ஒரு விஷயம் ப்ரீக்னாமிக்ஸ் தனமானது. பரீக்னாமிக்ஸ் தெரியவில்லையென்றால், பெரியதாக ஒன்றும் கெட்டுப் போகாது. சம்பந்தமேயில்லாத இரண்டுவிஷயங்கள் என்று நாம் நினைத்திருக்கும் விஷயங்களுக்கு இடையே ஒரு சம்பந்தமிருக்கும்.

கடந்த 300 ஆண்டுகளில், எங்கெங்கெல்லாம் மூங்கில் பூ பூத்ததோ, அங்கெல்லாம் பஞ்சமும், ப்ளேக்கும் வந்திருக்கிறது. மொட்டை தலைக்கும் முழங்காலும் முடிச்சா என்றால் இல்லை. விஷயம் கொஞ்சம் அறிவியல் பூர்வமானது.

மூங்கில் பூக்கள் எலிகளுக்கு பிடிக்கும். மூங்கிலில் பூ வந்தால், அத்தோடு மூங்கில் அறுவடை அங்கே காலி. மூங்கில் பூ எலியை பொறுத்தவரை வயாகரா மேட்டர். தின்னும் எலிகள் இஷ்டத்துக்கு இனப்பெருக்கம் செய்யும். மூங்கில் பூ தீர்ந்தவுடன், பக்கத்தில் இருக்கும் அறுவடை நிலங்களுக்கு இவை படையெடுக்கும். விளைப்பொருட்களையெல்லாம் தின்று தீர்க்கும். மக்கள் எலிகளை கொல்ல, பூச்சி மருந்தடிப்பார்கள், எலி பாஷாணம் கொடுப்பார்கள். தின்னும் எலிகள் செத்துப் போய், பாக்டீரியாக்கள் காற்றில் பரவி, மக்கள் மூச்சிலேறி, ப்ளேக் வந்து சாவார்கள். எலி தின்ன மிச்சத்தை வைத்துக் கொண்டு அறுவடை செய்ய முடியாது. பஞ்சம் வரும். மக்கள் கொத்து கொத்தாக குடிமாற்றம் செய்வார்கள்.

மூங்கில் பூ இப்படி தான் சமுக புரட்சியினை செய்துவருகிறது. இதை விட சமூக புரட்சியினை அரசியல்வாதிகள், ஒரே ஆளுக்கு 10 ரேஷன்கார்டுகள் கொடுத்து, பல இடங்களில் அவருக்கான குடும்பம், வாழ்க்கை வசதிகள் இருக்கிறது என சொல்லி சமூக புரட்சி செய்து வருகிறார்கள், அதெல்லாம் இயற்கையில் சேராது.



இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு என்ன வரும். ஒரே ஒரு ரூபாய்க்கு.

  • 2 அல்பென்லெய்பீ
  • டூவீலருக்கான காற்றடிக்கும் காசு
  • கடலையுருண்டை
  • பிச்சைக்கார தானம்
  • ஏர்டெல்லில் இந்தியா முழுக்க செல்பேசியில் ஒரு நிமிடம் பேச
  • கோவிலுக்கு வாசலில் செருப்பு விட
  • பட்டர் பிஸ்கேட்
  • ஆரம்பகால டெக்கான் குரோனிக்கல்
  • உண்டியல் காசு மற்றும்
  • வாய்க்கரிசி போட
கடைசியாக சொன்ன வாய்க்கரிசி தான் ஒரு ரூபாய்க்கு நடந்தது. சென்ற வாரத்தில், தமிழகத்தில் எங்கேயோ, ஒரு பரோட்டா கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் தகராறு. வாடிக்கையாளர் குடித்திருந்தார் போலிருக்கிறது. ஒரு ரூபாய் அவர் சாப்பிட்ட கணக்கில் தரவில்லை. கடைக்காரர் கேட்க, வாய் வார்த்தை தடிக்க, வாடிக்கையாளர், கடைக்காரரை கொன்று விட்டார். ஒரே ஒரு ரூபாய். எல்லார்க்கும், செத்தபின் ஒரு ரூபாயினை நெற்றியில் வைப்பார்கள். இவர் ஒரு ரூபாய் கேட்டதால் செத்து போனார். உயிரின் மதிப்பு அவ்வளவுதான்.

முதலாளித்துவ தேசங்கள் பணத்திற்காக செய்யும் கொலைகள் - விபத்துகள், இலங்கை, பாலஸ்தீனம், பெரும்பகுதி ஆப்ரிகா போன்ற இடங்களில், இப்போது சாதாரண மனிதர்களும் கொலைகளை சர்வசாதாரணமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி ஒரு ரூபாயினைக் கூட உரிமையோடு கேட்டு வாங்கமுடியாது போலிருக்கிறது, உயிர் ஒரு ரூபாயினை விட ரொம்ப பெரிய விஷயம்.


“உவின்ஸ்லோவின் தமிழ் அகராதி 1862இல் வெளிவந்தது. இதில் “கும்பகோணம்” என்ற சொல்லுக்குப் பித்தலாட்டம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இதே சொல்லை(1929) சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகனில் சேர்ப்பதற்கு பெரும் எதிர்ப்பு வந்திருக்கிறது. கடைசியில் சேர்க்காமல் விட்டு விட்டனர். தமிழ் லெக்சிகனின் பொறுப்பை ஏற்ற வையாபுரிப் பிள்ளை இது போன்ற சிக்கலைச் சந்திருக்கின்றார்.”
மேற் சொன்ன பேரா நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தது. தமிழ் அமீபாவுக்கு முன்னாடியான மொழி என்பது பேத்தல் என்பதில், தமிழ் படித்த பலபேருக்கு உண்மையாய் இருந்தாலும், மனக்கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மொழி என்பது ஒரு அருமையான மொழி என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.

’நாஞ்சில் நாடு’ என்றழைக்கப்படும் நாகர்கோயில், கன்னியாகுமரியில் ஒரு தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் ஒரு தமிழ் இருக்கிறது. சென்னைக்கு சென்னை தமிழ், மதுரை தமிழ், கோயமுத்தூர் தமிழ் என ஒவ்வொரு 100 கிமீட்டருக்கும் தமிழ் சொற்கள், அதன் பொருள், உச்சரிப்பு என மாறிக் கொண்டேயிருக்கிறது. வடிவேலு தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது நகைச்சுவையோ, இல்லையோ, கண்டிப்பாக “மதுர தமிழின்” பல வார்த்தைகள். அந்தவகையில் நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் நாகர்கோயில் / கன்னியாகுமரியில் புழங்கும் தமிழில் சில வார்த்தைகள் தான் மேற்சொன்னது

  • நொர்நாட்டியம் - சிக்கலான, கஷ்டமான, செய்யமுடியாது
  • எசலிப்பு - பிணங்குதல்; வேண்டியவர்கள் இருவரும் சண்டை போடுதல்
  • குச்சி குத்தல் - கர்ப்பத்தை கலைத்தல்; எருக்கலஞ் செடிக்குச்சியை கர்ப்பமாண பெண்ணின் குறிக்குள் குத்தல்
  • செம்போத்து பிடித்தல் - திருட்டுத்தனமாக பெண்ணுடன் தொடர்பு கொள்ளுதல்
நாட்டார் வழக்காற்றியல் என்கிற துறை பெயரை கேட்டாலே, பாதி பேருக்கு, நாட்டாருக்கும், மளிகைக் கடை நாடாருக்கும் ஏதோ உறவிருக்கிறது என்கிற அளவில் தான் நம்முடைய வட்டார ரீதியான தமிழறிவு நமக்கிருக்கிறது. ”நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி” (தமிழினி வெளியிடு, அ.கா.பெருமாள்) என்கிற புத்தகத்திலிருந்து எடுத்தது தான் மேலே குறிப்பிடப்பட்டது.

அ.கா.பெருமாளின் கடுமையான உழைப்பு புத்தகம் முழுவதும் தெரிகிறது. என்னதான் நாம் எல்லோரும் தமிழில் பேசினாலும், ஒரு வட்டாரத்தில் பேசும் தமிழும், அதன் சொற்களுக்கான பொருளும் அதை நாம் புரிந்து கொள்வதும் சிரமமான விஷயம். இந்த நிலையில்,தமிழை நமக்கே மறு அறிமுகம் செய்வது போல சில வார்த்தைகள் அச்சு அசலாக இருக்கின்றன. தமிழின் வளம் பற்றி கவலைப்படுபவர்களுக்கு இப்புத்தகம் ஒரு eye opener. இதில் வரும் தெம்மாடி, தெண்டி போன்ற வார்த்தைகள் நாம் மலையாளத்துக்கு கடன் கொடுத்தவை.

புதிய வார்த்தைகளை, கலை-அறிவியல் அகராதிகளில் தேடி மண்டை காய்வதற்கு முன், அவர்கள், சில காலம், இம்மாதிரியான சொல்லகராதிகளில் தேடினால் பல வார்த்தைகள் கிடைக்கலாம். எசலிப்பு என்பது ஒரு அருமையான வார்த்தை - Friendly Fights, disturbances, issues போன்றவற்றுக்கு இதனை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் Boardroom battle என்கிற ஒரு பதம் இருக்கிறது. அதற்கு ஈடான பதமாக ”எசலிப்பு” தெரிகிறது. போர்ட் ரூமில், எல்லாம் தெரிந்தவர்கள் தான். ஆனாலும், அவரவரகளின் கருத்திற்க்கேற்ப பிணக்குகள் வெளிப்படும்.

தமிழ் மொழி வளரவேண்டுமானால், வட்டார வழக்கினை பொது வழக்காக கற்றுக் கொடுத்தல் அவசியம். இது தெரியாமல், தமிழ்ப் படத்திற்கு, தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் நன்றாக வளர்ந்து வீ.ஆர்.எஸ் வாங்காது.

இந்த வார கார்ட்டூன்

ஆர்.கே.லக்‌ஷ்மன் - Everlasting Truth (டைம்ஸ் ஆப் இந்தியாவிலிருந்து)


பிற்சேர்க்கை

ராபர்ட் லுட்லம் செத்துப் போய்விட்டாராம். பெயரை நான் சரியாக சொல்லவில்லையாம். அதனால், இப்போதைக்கு போன வாரத்திய விஷயத்தினை ஆவி அமுதாவிடம் சொல்லி, லுட்லமின் ஆவியை உடலில் ஏற்றி அந்த விஷயத்தினை எழுத சொல்லலாம்.

March 06, 2009

சனிமூலை - 001

இந்த வார (2-3-2009) ஆரம்பத்தில் பெரும் பணக்காரரான வாரன் பஃப்பெட் தான் சில தவறான முதலீடுகளை செய்ததாக அவருடைய பெர்க்‌ஷயர் ஹாத்வே நியுஸ்லெட்டரில் சொல்லியிருக்கிறார். நல்ல வேளையாக வாரன் தமிழராக இல்லை. “வழுக்கி விழுந்தார் வாரன் பஃப்பெட்” என எதுகை மோனையோடு அது தலைப்பு செய்தியாயிருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய பொருளாதார சிக்கலில், வாரன் பஃப்பெட்டேயிருந்தாலும், வழுக்கி தான் விழ வேண்டும் என்பது தான் நியதி.

இதற்கெல்லாம் அசராத கூட்டம் ஒன்று இருக்கிறது. இந்திய பங்குச் சந்தை அனலிஸ்டுகள்.

தொடர்ச்சியாக அவர்கள் சொல்லும் செய்திகள் படு தமாஷாக இருக்கும். இரண்டு நாள் பங்கு சந்தை ஏறினால், உடனே நான்கு அனலிஸ்டுகள் ’இதிலிருந்து இதற்குள்’ என ஏதேனும் ஒரு நம்பரை சொல்லுவார்கள். இறங்கினாலும் அதே கதை. இரண்டு அனலிஸ்டுகள் ஒரே மாதிரியான கருத்தினை சொன்னதாக சரித்திரமேயில்லை. உருப்படியாக ஒரு தீர்க்கமான தீர்வும் காணோம். நான்கு தமிழர்கள் ஒரிடத்தில் இருந்தால், ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றொறு அவதூறு உண்டு. அதை அனலிஸ்டுகளுக்கும் சேர்த்து கொள்ளலாம். நான்கு அனலிஸ்ட்கள் ஒன்றாக இருந்தால் ஆறிலிருந்து பத்துவகையான முடிவுகள்,ஒரே பங்குச்சந்தை, நிறுவன நிலவரங்களை வைத்துக் கொண்டே சொல்வார்கள். என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி, யு.டி.வி.ஐ என தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எதையாவது சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அதை பார்ப்பதற்கு பார்த்த காமெடியையே திருப்பி போட்டாலும் ஆதித்யா அல்லது சிரிப்பொலி பார்ப்பது பெட்டர்.

இந்திய பங்குச் சந்தையில் விளையாடுவது என்பது ஒரு பெரிய மைதானத்தில் ஆடும் ஆட்டம். கடந்த 6 மாத கால சராசரி பங்குகள் கைமாறியது என்கிற புள்ளிவிவரத்தினை எடுத்து பார்த்தால் நான் சொல்வது புரியும். வெளிநாட்டினர் முதலீடு செய்வதும், பின்பு திரும்ப எடுத்துக் கொள்வதுமாக, கிழவியின் சுருக்குப்பை காசினை குடிக்கார பேரன் எடுக்கும் கதையாய் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வாரன் பஃபெட் படித்தால், அவர் பங்குச்சந்தை டிக்கர்களை பார்க்கவே மாட்டார் என்பது புலப்படும். அவருடைய கவனிப்பு எல்லாம், ஒரு நிறுவனத்தின் நீண்ட நாள் போக்கு எப்படி இருக்கும் ? அந்நிறுவனம் விற்கும் பொருட்கள் /சேவைகளுக்கு பின்னாட்களில் அதிகப்படியாக வரவேற்பு இருக்குமா? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு பதில் இருந்தால் முதலீடு செய்வார். சும்மா நண்பன் சொன்னான் என்பதற்காக பெயர் தெரியாத அந்த வடக்கத்திய பிளாஸ்டிக் மோல்டிங் நிறுவனத்தின் பங்கினை வாங்குதல் போல, தனக்கு தெரியாத விஷயங்களில் அவர் முதலீடு செய்வதில்லை. இதற்கு value investing என்று பெயர். இது பார்க்க பந்தாவாக இருந்தாலும் புரிந்து கொள்ளுதல் எளிது.

நீங்களும், நானும் எதை வாங்குகிறோம், எதை விடுகிறோம், எந்த நிறுவனத்தின் பொருட்களை எடுத்தாள்கிறோம் என்பதை கவனமாக கவனித்தாலே போதும். ஒரளவுக்கு ஐடியா கிடைத்துவிடும்.. இல்லையெனில் கூகிளில் போட்டு தேடுங்கள். தொலைந்து போகாமல் கற்றுக் கொள்ளலாம். பீட்டர் லின்ச் என்பவர் தான் இவ்வகையான முதலீட்டு வடிவத்தினை பிரபலப்படுத்தினார். இப்போதைக்கு, கையில் காசிருந்தால் வங்கி எப்.டியில் போட்டு விட்டு எம் டிவி பாருங்கள்.


”கல் தோன்றி மண் தோன்றா.... முன் தோன்றிய மூத்த தமிழ்” என பாக்டீரியாக்கள், அமீபாக்கள் உருவாகாத முன்னாலேயே ஒரு மொழி இருந்திருக்கிறது என்று சொல்லும் அபத்தம் புரியவில்லை. இதில் அபத்தத்தை விட அரசியலே அதிகமாய் இருக்கிறது என்பது அடியேன் எண்ணம். தொன்மையான இன்னமும் இருக்கிற மொழி என்கிற அளவில் அதற்குரிய மரியாதையினை கொடுக்கலாமேயொழிய, மொத்தத்துக்கும் தமிழே காரணம் என்பது தமிழர்களின் அளவிலா பேராசையின் வேறொரு முகம். விஷயத்துக்கு வருவோம்.

பிரியாணி தமிழ் உணவா அல்லது மொகலாயர் இந்தியாவுக்குள் கொண்டு நுழைத்த உணவா ? பெரும்பாலாலும் முகலாய உணவு என்று சொல்வது தான் வழக்கம். அங்கே தான் நீங்கள் வசமாக மாட்டிக் கொண்டீர்கள்? பிரியாணிக்கு சங்க இலக்கியத்தில் “ஊன் சோறு” என்று பெயர். போருக்கு கிளம்புமுன் நிறைய இறைச்சிகளோடு கலந்த சோற்றினை வீரர்களுக்கு அரசன் கொடுப்பார், போரில் தரப்போகும் வெற்றிக்கான அன்பு காணிக்கையாக. அது தான் ஊரெல்லாம் சுற்றி மீண்டும் மசாலாவோடும், சிக்கன், மட்டன், பீவ் என இறைச்சி சமாச்சாரங்கள் உள்ளூறி பிரியாணியாக இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இதை தான் செஃப் ஜேக்கப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சொல்லியிருகிறார். Interesting.

அப்போதைய ஊன் சோறோடு காம்போவாக பெப்சியோ, ஸ்ப்ரைட்டோ இருந்திருக்காது என்று இப்போதைக்கு நம்புகிறேன். யாருக்கு தெரியும், வேறு யாராவது கோலாவே கும்மிடிப்பூண்டி தாண்டி ஆண்ட ஒரு சிற்றரசன் காலத்திய பழச்சாறு என்று Ph.D பண்ணி சொல்லுவார்கள். காத்திருக்கலாம்.


கான்சிப்ரைசி தியரி என்று ஒன்று உண்டு. எது உலகத்தில் நடந்தாலும் அது பின்னாடி ஒரு மாபெரும் சதி திட்டம் இருக்கிறது என்பதை அக்குஅக்காக பிரித்து மேய்வார்கள். இந்தியா சந்திரயான் விட்டாலும், இன்னமும் அமெரிக்காவில் ஒரு கூட்டம், நாசா 1969இல் நிலவுக்கு விண்கலம் அனுப்பவேயி்ல்லை என்பதை போட்டோ ஆதாரங்களுடன் இணையத்தில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க டேபலாய்டுகளில் எப்படி பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக மனிதனுடன் உறவு, 40 குட்டி போட்ட பூனை என பேசி வருகிறார்களோ, அதே மாதிரி ஜிகினாத்தனங்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. அவரவர்க்கு அவரவர் நம்பிக்கைகள்.

சமீபத்தில் கேள்விப்பட்ட இம்மாதிரியான புரூடா. பொருளாதாரப் பிரச்சனை தானாக வந்ததல்ல. சில பல பெரிய மனிதர்களால் உண்டாக்கப்பட்டது. உலகெங்கிலும் டிரில்லியன் டாலர்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கு்ம் கறுப்பு பணத்தினையும், சில அரசாங்கங்களையும் கையில் போட்டுக் கொள்ள நடந்து கொண்டிருக்கும் நாடகமிது. இதன் மூலம் ஒவ்வொரு் நிறுவனத்தையும் பெயில் அவுட் செய்யும் போது பல பில்லியன் டாலர்களை வெள்ளையாக்கலாம், மேலும் அந்நிறுவனங்களை சில மனிதர்களின் கையில் கொண்டு வரலாம். இப்படி நீள்கிறது இந்த புராணம். ராபர்ட் ருட்லெம் (Robert Rudlum) என்கிற எழுத்தாளர் இந்தமாதிரி நிஜ சாயல் படும்படி திரில்லர் கதைகள் எழுதுவார். அவருக்கான அடுத்த கதைக்கான கருவினை இலவசமாக தருகிறேன்.


சனிமூலை என்று எந்த நேரத்தில் பெயரிட்டேனோ, அதற்குள்ளாகவே காப்பிரைட் பிரச்சனைகள் முதற்கொண்டு பேசியாகிவிட்டது. நண்பர்கள் ஏற்கனவே ’வடக்கு வாசலில்’ ராகவன் நம்பி சனி மூலை என்கிற பெயரில் எழுதுகிறார் என்று சொன்னார்கள். வேண்டுமானால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு, ”ஞாயிறுமூலை” அல்ல ”சூரியமூலை” என்று பெயரிடுங்களேன் என அட்வைஸ் வந்தது. இருக்கிற மீடியா தொடர்புகளில், நான் வேறு “சூரிய மூலை” என்று பெயர் வைத்தால், அவ்வளவுதான் சங்கதி. கதை முழுசாய் கந்தலாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.இப்போதைக்கு காப்பிரைட் பிரச்சனைகள் வந்தாலும் சனிமூலை என்றே தொடர்வோம். பின்னாளில் ஏதேனும் பெரும் பிரச்சனைகளில் வந்தால் வேறு பெயர் மாற்றுவதை பற்றி யோசிக்கலாம். அப்படியே வந்தால் ஏதேனும் எம்.எல்.ஏவினை கூப்பிட்டு பெயர் வைத்தால் பிரபலத்துக்கு பிரபலமும் ஆச்சு. யாரும் காப்பிரைட் பிரச்சனைகள் பற்றி வாயும் திறக்கமாட்டார்கள். ராகவன் நம்பியும், இதை எழுதத் தூண்டிய ரங்கராஜ நம்பியும் கோவித்து கொள்ள மாட்டார்களாக.

இந்த வார மேற்கோள்

”Historically, unusually strong increases in credit and asset prices have tended to precede banking crises”. - Quarterly Review of Bank of International Standards

இதை டாஸ்மாக் பாஷையில், எல்லா குடிக்கு பின்னாடியும் ஹாங் ஒவர் உண்டு என்று ”தெளிவாக” மொழிபெயர்க்கலாம்.

(அடுத்த வாரம் சந்திப்போம்)